Skip to main content

கோயம்புத்தூர்ல பாஜக ஸ்ட்ராங்னு சொல்றாங்க... எப்படி ஸ்ட்ராங் ஆனாங்க தெரியுமா?

 

how bjp grown stronger in coimbatore

 

மத்தியில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக, இன்றைய சூழலில் நாட்டின் மிகமுக்கிய கட்சியாக வளர்ந்துள்ளது என்பது யாரும் மறுக்கமுடியாததே. வடமாநிலங்களில் அண்மைக்காலங்களில் அசுர வளர்ச்சியைச் சந்தித்துள்ள பாஜக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சொல்லத்தகுந்த அளவு வளர்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுள்ளது. அந்தவகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் பாஜக குறிப்பிடத்தகுந்த அளவு வாக்குவங்கியைப் பெற்றுள்ளது. அதில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது பாஜக. இது எவ்வாறு சாத்தியப்பட்டது, இதன் தொடக்கம் என்ன என்பதை 8.6.1991 நக்கீரன் இதழில் வெளியான இக்கட்டுரை விவரிக்கிறது.     

 

கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா அசுர வளர்ச்சி!

 

கோவை வட்டாரத்தில் பா.ஜ.க. மளமளவென்று வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருப்பது மற்ற கட்சி வேட்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது! 

 

கோவையில்''பா.ஜ.க.'' இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக பெற்றிருக்கும் செல்வாக்கு, எழுச்சி மிக்க பிரச்சாரம், கட்டுக்கோப்பான தேர்தல்பணிகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க போவது பா.ஜனதா பெறப் போகும் வாக்குகள்தான் என்றே தோன்றுகிறது. கோவையில் இந்த கட்சி பெற்றுள்ள அசுர பலத்தின் மூலம் அப்பகுதி தேர்தல் முடிவுகளே திசை மாறி விடக்கூடிய சூழ்நிலை இருக்கத்தான் செய்கிறது.

 

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்சியின் நிலை கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சொல்லிக் கொள்வது போல் இருந்ததில்லை என்றாலும் 1980-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை கிழக்கு தொகுதியில் பெற்ற வாக்குகள் 870 மட்டுமே.

 

1984-தேர்தலில் கோவை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது. கோவைமேற்கில் கிடைத்த வாக்குகள் 2207 மட்டுமே. சிங்காநல்லூர் தொகுதியில் 2103 வாக்குகள் பெற்ற போதும் திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் 725 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

 

பாரதிய ஜனதா 1984 தேர்தலில் மேற்கண்டவாறு வெகு சொற்ப வாக்குகள் பெற்றதனாலோ என்னவோ பிற கட்சிகளும் சரி, மகாகணம் பொருந்திய வாக்காளர்களும் சரி பி.ஜே.பி.யை ஒரு கட்சியாகவே சட்டை பண்ணியதில்லை.

 

இந்த நிலையில் கடந்த 1989 சட்டமன்ற தேர்தலில் கோவை மேற்கு தொகுதியில் பா.ஜனதாவின் ஆதரவோடு இந்து முன்னணி களத்தில் இறங்கியது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடந்தபோதுகூட மற்றகட்சிகள் இந்து முன்னணியைக் கண்டுகொள்ளவில்லை.தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தக் கட்சிகளே அதிர்ந்து போகுமளவுக்கு இந்து முன்னணி வேட்பாளர் ரங்கராஜ் சுமார் 10456 வாக்குகள் பெற்றிருந்தார். 

 

1989 தேர்தல் முடிவுகள் பி.ஜே.பிக்கு புது தெம்பினை அளிக்க கோவை மேற்கு தொகுதியில் தெருவுக்குதெரு, சந்துக்குசந்து எங்கும் பி.ஜே.பி.மயமானது.

 

பா.ஜனதாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி வேறு சில காரணங்களுமுண்டு. அவற்றில் ஒரு பிரதான காரணம், கோவை கடைவீதிகளில் உள்ள குமரன் மார்க்கெட்!

 

ஆரம்ப காலத்தில் கோவை நகர இந்துக்கள் பிடியில் இருந்த இந்த தினசரி மார்க்கெட் நாளடைவில் கேரளாவில் இருந்து குடிபெயர்ந்து வந்த கேரள முஸ்லிம்களின் கைகளுக்கு போயிற்று. 

 

மார்க்கெட் தொடர்பாக சாதாரண வாய்த்தகராறில் துவங்கிய பிரச்னை,சுமார் எட்டு ஒன்பது வருடங்கள் முன்பு அடிதடி, கோஷ்டிமோதல் என்றாகி, சில உயிர்கள் பலியாகுமளவுக்கு மோசமானதாகி விட்டது.

 

இந்த விசயத்தில் தங்கள் கை தாழ்ந்து போய் விட்டதாக எண்ணிய இந்துக்கள், ''அரசியல்வாதிகள் எல்லோருமே ஓட்டுகளுக்காக முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதாக எண்ணி'' வெம்பிப் போனார்கள்.

 

கோட்டைமேடு, மஜீத் காலனி,போன்ற முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் எல்லாம் அங்கு குடியிருக்கும் இந்துக்கள் அவமானப்படுத்தப் படுவதாக குற்றச்சாட்டுகள் வேறு! இதற்கிடையில், முஸ்லிம்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த இருமுறை தி.மு.க.வை சேர்ந்த ராமநாதனே ஜெயித்தும் வந்தார். ஆக, முஸ்லிம்களின் ஓட்டை பெற்று ஜெயிப்பதற்காகவே ராமநாதன் இந்துக்களை துவேஷம் செய்கிறார் என்ற பிரச்சாரமும் நடந்தது. 

 

இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த பிரச்சாரத்தால் பி.ஜே.பி. படுவேகமாக வளர்ந்தது என்பதுதான் உண்மை.

 

ஆனால்,பொதுவாக கோவை மாநகரில் நாயுடு இனத்தவரின் கை ஓங்கியுள்ளது. இருந்தாலும்கூட,மேற்படி நாயுடுக்களின் பஞ்சுமில், பருத்தி வியாபாரங்களுக்கு தினசரி லட்சகணக்கில் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வாங்குகிற மார்வாடிகளே நகரில் செல்வாக்கு நிறைந்தவர்கள். வடநாட்டான், தென்னாட்டான் போன்ற திராவிட கோஷங்கள் நிறைந்த கோவையில், உள்ளூர் மக்களோடு வடநாட்டு வியாபாரிகளை இணைக்கும் ஒரே அம்சமாக இருந்தது ''இருவருமே இந்துக்கள்'' என்ற விஷயம் மட்டுமே!

 

ஸோ..வடநாட்டு வியாபாரிகளின் ஊக்கம், அதரவு, அளவற்ற பண உதவி போன்றவற்றால் லேசாக துளிர் விடத் துவங்கி இருந்த பி.ஜே.பி.,ஆர்.எஸ்.எஸ்.போன்ற இயக்கங்கள் படு வேகமாக வளரத் துவங்கிற்று. 

 

''ஹக்கீம் கொலையை தொடர்ந்து வீரகணேஷ் கொலை'' என நாளுக்கு நாள் மதக்கலவரங்களால் கோவைப் பிரதேசமே டென்ஷன் மயமானது.

 

இதன் எதிரொலி அதையடுத்து வந்த தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. இரு சமூகங்களுக்கு இடையில் விழுந்த நிரந்தர கீறலினால் இரு தரப்பினருக்குமான தனித்தனியான இயக்கங்களும் ஜோராகவே வளரத் துவங்கியது. 

 

மேட்டுப்பாளையத்தில் நடந்த சில கலவரங்கள், அவினாசி தேர் எரிந்து சாம்பல் ஆனது, கர சேவை என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் முதலில் கோவை நகரில் மட்டும் நிலவி வந்த இந்த பிளவு நாளடைவில் மாவட்டம் எங்கும் பரவியதால் இது போன்ற மதவாதக் கட்சிகளும் படு விரைவாகவே வளர்ச்சி கண்டன.

 

இன்று பி.ஜே.பி. அடைந்துள்ள வளர்ச்சிக்கு வெறும் மதரீதியான பிளவு மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. மற்ற அரசியல் கட்சிகளின் மேல் மக்களுக்கு ஏற்படுகிற அதிருப்தியும் கூட, இந்த ரக இயக்கங்களின் ஜெட் வேக முன்னேற்றத்துக்கு காரணம் என்று கூறலாம்.

 

இதற்கு நல்லதொரு உதாரணம், கோவை நகரின் பிரபல புள்ளி கிருஷ்ணசாமி கவுண்டர். மாஜி சுதந்திராகட்சி எம்.எல்.ஏவான கிருஷ்ணசாமி கவுண்டருக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஏதோ காரணமாய் தொழிலாளர் போராட்டம். எவ்வளவோ பேசிப்பார்த்தும் திமுக தொழிற் சங்கம் மட்டும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததோடு வேலைக்கு திரும்பிய ஏனைய சங்கத்தினரையும் வேலை செய்ய விடாமல் அடாவடியாக தடுத்ததாம். பிறகு நிர்வாகம் திமுக தலைமையோடு பேசி, எப்படியோ பிரச்சனையை தீர்த்திருக்கிறது. இது நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. தற்போது அதே கிருஷ்ணசாமி கவுண்டர் எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரே நோக்கில் பி.ஜே.பியை ஆதரிக்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் பி.ஜே..பிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு அலையும் வாகனங்கள் எல்லாம் கவுண்டரின் உபயம்தானாம்.

 

இதே நிலைமைதான் கோவை கிழக்கிலும். இங்கு பி.ஜே.பி.- மார்க்சிஸ்ட் மோதல் சகஜம். இதனால் கம்யூனிஸ்ட் கோட்டையான சித்தாபுதூரில் பி.ஜே.பியின் கோடி பறக்கிறது.

 

பொதுவாக பாரதிய ஜனதாவில் இன்று தீவிரமாக உள்ள அநேகர்கள் முன்பு அதிமுக அல்லது காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்தவர்களே. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கருணாநிதி எதிர்ப்புக்கு பி.ஜே.பி.தான் சரியான இயக்கம் என்ற நம்பிக்கையோடு பி.ஜே.பிக்குள் நுழைந்தவர்கள் இவர்கள். மேலும் பி.ஜே.பி.உறுப்பினர் என்று தங்களைக் கூறிக்கொள்வது அங்கு கௌரவத்துக்குரிய விஷயமாகிவிட்டிருப்பதால் கோவை மாநகரில் அநேக இளைஞர்கள் திடீரென்று ஒருநாள் நெற்றியில் ''குங்குமப்பொட்டு'' சகிதம் வருவதும், ''பி.ஜே.பியில் ஜாய்ண்ட் பண்ணிட்டேன் மச்சான்'' என்றபடி காலரை தூக்கி விட்டுக் கொள்வதும் சகஜமான விஷயமாகிவிட்டது.

 

கோவை மேற்கு பி,ஜே.பி.வேட்பாளர் மூகாம்பிகை மணியின் அணுகுமுறை தொகுதியில் நல்லசெல்வாக்கை ஏற்படுத்தி உள்ளது. மதச்சார்பு கொண்ட இயக்கம் என்பதால் இந்த கட்சி அபிமானிகளிடம் ஒருவித ஆவேசம் இருப்பது நிஜம்தான். எனினும் அவர்களிடம் அளவு கடந்த பக்தியும், ஒழுங்கும், கட்டுப்பாடும், கண்ணியமான பேச்சும் காணப்படுவது உண்மையே!

 

தேர்தலில் நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளிலும் கோவை மாவட்டத்தில் பதினோரு தொகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் என பதினாலு சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.

 

இம்முறை தொகுதிகளை கைப்பற்றுவது கடினம் என்றாலும், கோவை மேற்கு, திருப்பூர், மேட்டுப்பாளையம் தொகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கணிசமான வாக்குகளை பி.ஜே.பி.பெறும் என்று அடித்து சொல்லலாம். 

 

வரும் தேர்தலில் கோவை வட்டாரத்தில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போகிற சக்தியாக பாரதிய ஜனதா மாறியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!