Skip to main content

மொழுக்கனை வீரப்பனாக்கிய வறுமை... மேற்கு தொடர்ச்சி மலையின் பரபர காலங்கள்!

 

history of veerappan and police clashes

 

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்து, பல வருடங்களாக தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய நபர் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 184 பேரைக் கொன்றதாகவும், தந்தத்திற்காகச் சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளைக் கொன்றதாகவும், சந்தன மரங்களை கடத்தியதாகவும் எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை சந்தித்த வீரப்பனை 90 களின் மத்தியில் மூன்று மாநில காவல்துறைகளும் சல்லடைபோட்டு தேடிவந்தன. அப்படிப்பட்ட சூழலில், தமிழக எல்லைப்பகுதியில் வீரப்பன் மற்றும் வீரப்பனின் கூட்டாளிகள் செய்த அட்டகாசங்கள் குறித்து 17.1.1990 நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை.    

 

வீரப்பனின் அட்டகாசம். திகில் ரிப்போர்ட்...

வீரப்பன்.... கிட்டத்தட்ட 10 வருடங்களாக காவல்துறையும் சரி,வன இலாகாவும் சரி ... சிம்ம சொப்பனமாக கருதுவது இந்த சந்தன மர கடத்தல் வீரப்பனைத்தான்! . போலீஸ் ரெக்கார்டில் மட்டும் வீரப்பன் மீது 17 கொலை வழக்குகள் இருக்கின்றன.யானைத் தந்தம்,சந்தனமர கடத்தல் வழக்குகளோ சொல்லி தீராது.

 

காவல்துறை மற்றும் காட்டு இலாகாவினரின் கண்களில் விரலை வீட்டு ஆட்டி வருகிற வீரப்பனுக்கு வயது சுமார் 35 ! சேலம் மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கூசமுத்து படையாச்சியின் மகனாக பிறப்பெடுத்த வீரப்பனின் நிஜப்பெயர் மொழுக்கன். சாதாரண இந்திய குடிமகனாக வாழ்க்கையை துவங்கிய வீரப்பன் என்கிற மொழுக்கன் இந்த ஸ்டேஜுக்கு வந்து நிற்க காரணமே வறுமைதான். இந்த வறுமைதான் வீரப்பனை குளத்தூர் சாந்தப்பிள்ளை குடும்பத்திடம் கொண்டு போய் சேர்த்தது. யானை தந்த திருடரான சாந்தப்பிள்ளையின் தந்தை, யானைத் தந்தத்தை ''மார்க்கெட்டிங்'' செய்யும் பொறுப்பை வீரப்பனிடம் ஒப்படைக்க, அப்போது கிடைத்த சிலவருட  ட்ரெய்னிங்கின் இறுதியில் தனியாக தொழில் நடத்தும் அளவு வளர்ந்து விட்டது வீரப்பனின் வளர்ச்சி!

 

புது தொழிலின் பலனாக முதுமலைக் காட்டில் (தமிழ்நாடு கேரள கர்நாடகா பகுதிகளில்) மட்டும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டு, வீரப்பனுக்கு இலாபமாக சுமார் நாற்பது லட்சம் ரூபாய்களோடு காட்டு இலாகாவினரின் கெடுபிடிகளும், பல வழக்குகளும் வந்து சேர்ந்தன. இந்த நிலையில் உலகம் முழுவதும் யானைத் தந்தத்தால் செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட, வீரப்பனின் தொழிலும் சேர்ந்தவாறு முடங்கிப்போக... வீரப்பனின் அடுத்த இலக்கு சந்தனமர கடத்தல்!

 

சந்தனமரகடத்தல் வியாபாரத்தில் ஏற்கெனவே ஜாம்பவான் ஆன மேட்டூர் மாஜி  எம்.எல்.ஏ. நாச்சிமுத்துவிடம் அசிஸ்டென்ட் ஆன வீரப்பன் தன் சாதுர்யத்தால் முன்னேற வெகு விரைவில் தனி ஆவர்த்தனம் ஜோராக துவங்கியது.

 

ஏகப்பட்ட அரசியல் பிரஷர் காரணமாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்த வீரப்பன் வெகு சாதுவாக சந்தன மர கடத்தலை மட்டும் செய்துவர கொலை விவகாரங்களில் சிக்கிக் கொள்ள காரணமே சந்தர்ப்பவசம்தான்.

 

வீரப்பன் செய்த கொலைகளில் முதல் போணி கர்நாடகாவில் நடந்தது. தன்னைப் பிடிக்க வந்த கார்ட் + வாட்சர் ஆகிய இருவரையும் கொலை செய்ய, கர்நாடக போலீஸ் கடுப்பாகி இன்று வரை வீரப்பனை தேடிக் கொண்டிருக்கிறது. 

 

இதற்கிடையில் மேட்டூரில் இருந்து சத்தியமங்கலம் வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளில் மாதையன் என்ற உறவினர் உதவியோடு வீரப்பனின் ராஜாங்கம் துவங்கி இருந்தது. தன்னை காட்டிக்கொடுக்க முயன்ற இருவரை எமலோகம் அனுப்பிய கையோடு வீரப்பன், 87 -ம் ஆண்டு சிதம்பரம் என்ற சத்தியமங்கலம் ரேஞ்சரை மலைப்பகுதி பொதுமக்கள் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்ல போலீஸ் துறையே திடுக்கிட்டு போனது.

 

அடுத்ததாக சிக்கியவர்கள் அதே சத்தியமங்கலத்தை சேர்ந்த துரைசாமி,சுப்பிரமணியம் என்ற இரு காட்டிலாகா ஊழியர்கள். 1.12.88. அன்று காணாமல் போன இவர்களின் முடிவு வீரப்பனால்தான் என்று பொதுமக்கள் கொந்தளிக்க, ஐ.ஜி...டி.ஐ.ஜி.களின் விசிட் எல்லாம் அமர்க்களமாக நடந்தேறிய பின் கொலைப்பழி லோக்கல் சாராயக்காரர்கள் மேல் போடப்பட்டு ஃபைலும் கூட மூடப்பட்டது. 

 

அடுத்த மாதமே தன்னை பற்றி துப்புக் கொடுத்ததாக எண்ணி தன் உறவினர்கள் 7 பேர்களை நைசாக பஞ்சாயத்துக்கு வரவழைத்து சரமாரியாக சுட்டுத்தள்ள, அதில் இருவர் தப்பி விட...மீதி ஐந்து பேர்களும் அனாவசியமாக செத்துப்போனார்கள்.  பிணங்களை தேடிய காவல்துறைக்கு ஆற்றில் அனாதையாக மிதந்து வந்த ஒரே ஒரு கால் மட்டுமே கிடைத்தது. பொதுவாக தான் கொன்று விடுபவர்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றுமீன்களுக்கு டிபன் ஆக கொடுப்பது வீரப்பனின் ஸ்டைலாம்.  

 

வீரப்பனின் அடுத்த கைவரிசையின் முடிவில் 1989 ஆகஸ்ட்1 ல் கர்நாடகா காட்டிலாகா அதிகாரி மோகனய்யா உயிரிழந்தார்.

 

எண்ணி ஐந்து நாட்கள் கழித்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி பர்கூரில் பழனிச்சாமி, சுப்பிரமணியம் என்ற இரு காட்டிலாகா ஊழியர்களோடு மாஸ்தி என்ற அந்தப் பகுதிவாசி அப்பாவி ஒருவரும் வீரப்பனால் கொல்லப்பட்டனர்.

 

சற்றேறகுறைய மர்மத் தொடர்கதை போல நீண்டு கொண்டே போகும் வீரப்பனின்''அதிரடி ஆப்பரேசன்'' களால் பொதுமக்களை காட்டிலும் லோக்கல் காவல்துறைக்கு அதிக கிலி  ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

 

இந்த டென்ஷனான சூழ்நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நீண்ட டிஷ்கஷன் நடத்தி விட்டு வீரப்பனை பிடிக்க தேதியும் குறித்த எஸ்.பி.கோபாலகிருஷ்ணா (நீண்ட காலமாக கொடுக்காமல் இழுத்தடித்த)
டி.ஐ.ஜி.பிரமோஷன் கொடுத்து மாற்றப்பட, பிரச்சனையின் இன்னொரு பரிமாணம் வெளிச்சத்துக்கு வந்தது.

 

புதிதாக வந்த எஸ்.பி.பாஸ்கர் க்ரைம் விஷயத்தில் கில்லாடி. மீண்டும் காவல்துறை முஷ்டியை மடக்கிக் கொண்டு களத்தில் இறங்க அக்டோபர் 15 ல் ரேஞ்சர் பத்ரசாமி, வீரப்பனின் லேட்டஸ்ட்''கேம்ப்'' ஆன மாக்கம்பாளையம் சென்றபோது குண்டு மழையால் துரத்தப்பட பத்ரசாமியும் தன் பங்குக்கு சுட்டுவிட்டு தப்பி வந்துவிட்டார்.

 

பத்ரசாமியின் துப்பாக்கி உமிழ்ந்த குண்டுகளுக்கான விசாரணை சடங்குகளுக்காக போன சப்-கலெக்டர் மோகன்ராஜ்(கோபி)அன் கோ மீது குண்டு மழை பொழிய, சட்டை இல்லாமல் சப் கலெக்டர் ஓடிவர, மாக்கம்பாளயத்தில் பாராளுமன்ற தேர்தல் நின்று விடுகிற சூழ்நிலை! வேறு வழி இல்லாமல் வெள்ளைக்கொடி பிடித்த அதிகாரிகளின் சார்பில் மாக்கம்பாளைய பஞ்சாயத்து தலைவர் பத்ரையன்+கிராம அதிகாரி+ஆர்.ஐ.போன்றவர்கள் வீரப்பனின் பிரதிநிதி மாரியப்பனுடன் (சித்தப்பா மகனாம்) பேச்சு நடத்தி தேர்தலை ''அப்பாடா'' என நடத்தி முடித்தனர்.

 

இதற்கிடையில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய வீரப்பனின் எலெக்சன் கேன்வாசிங் துவங்கியது. தனது சொந்த ஊரான குளத்தூரை சுற்றிய கோமுந்தபாடி, கத்திரிப்பட்டி, தார்க்காடு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு டோர் கேன்வாசிங் செய்ததோடு, அங்கிருந்த உதயசூரியன், இரட்டைஇலை சின்னங்களையும் வீரப்பன் அழித்துவிட, விஷயத்தை கேள்விபட்ட மேட்டூர் டி.எஸ்.பி.ராமசுப்ரமணி, 2 லாரி, 2 ஜீப் சகிதம் 17.11.89. அன்று அதிரடிப்படையோடு சென்று விசாரித்து விட்டு திரும்பும்போது கத்தரிமலை உச்சியில் இருந்து வீரப்பன் கோஷ்டியினர் துப்பாக்கி சூடு நடத்த, எல்லா வாகனங்களும் குண்டுத் துளையோடு தலை தெறிக்க திரும்பி வந்தன. காவிரி ஆறு சூழ்ந்த தீபகற்பமான ஓமலூரில் பிற கட்சிகளுக்கு ''பூத்'' ஏஜென்டுகளே இல்லாமல் தேர்தல் நடந்திருக்கிறது. சேலம் மாவட்ட கலெக்டரும் சரி, தருமபுரி மாவட்ட கலெக்டரும் சரி(தேர்தல் அதிகாரி) அந்த பக்கமே தலை வைத்தும் படுக்கவில்லை. காரணம் வீரப்பன் பயம்! 

 

இதே ஸ்டைலில் 5.12.89. அன்று லோக்கல் ஜீவா பஸ்ஸில் சிறப்பு போலீஸாரை அள்ளிப்போட்டுக் கொண்டு வீரப்பனை பிடிக்க மாக்கம்பாளையம் சென்ற கோபி டி.எஸ்.பி.சைலேந்திரபாபு , வீரப்பன் தாக்குதலினால் குண்டு துளைத்த ஜீவா பஸ்ஸில் குண்டடிபட்ட மூன்று போலீஸாரை தூக்கிப் போட்டுக்கொண்டு வெற்றிகரமாக புறமுதுகிட்டு திரும்பினர்.

 

ஏறக்குறைய கடந்த பத்து வருடமாக காவல்துறையிடம் போர் புரிந்துவருகிற வீரப்பனிடம், சீக்கிய தீவிரவாதிகள் ஸ்டைலில் ஒரு ''ஹிட் லிஸ்ட்'' உண்டு. அதில் முதல்பெயர் சத்தியமங்கலம் ரேஞ்சர் பத்ரசாமி. அடுத்து மேட்டூர் மாஜி எம்.எல்.ஏ.நாச்சிமுத்து. இந்த நாச்சிமுத்துவை வீரப்பன் கடத்த முயன்றதாக நாளிதழ்களில் ஒரு செய்தி வந்திருந்தது. அதன் பின்னணியில் த்ரில்லிங்கான சம்பவம் ஒன்றுண்டு.

 

17.7.89. அன்று அதிகாலை 2 மணிக்கு சேலம் குளத்தூர் செக்போஸ்ட்டை அதிரடியாக தாண்டி சென்ற வீரப்பனின் 2 சந்தனமர கடத்தல் லாரிகளில் ஓன்று கரடிப்பட்டி பிரிவு அருகே பிரேக் டவுனாகி நின்றுவிட்டது. அதேநேரம் செக்போஸ்ட் அருகே வந்த கே.பி.என். (குளத்தூர்-கண்ணாமூச்சி ரூட்) டவுன் பஸ்ஸில் காட்டிலாகாவினர் கரடிப்பட்டி பிரிவை நெருங்க, பஸ்ஸில் இருந்த பயணிகள் கூச்சலிட ,பிரேக் டவுனாகி இருந்த கடத்தல் லாரியில் இருந்த இருவரும் தப்பித்துவிட்டனர். லாரியைப் பிடித்த போலீஸிடம் 10 டன் சந்தனமரம்+2 நாட்டுதுப்பாக்கி+16 குண்டுகள்+ காட்டிலாகா யூனிபார்ம் இரண்டு பிடிபட்டன. அதிகாரிகளை ஏற்றிவந்த கே.பி.என்.பஸ் மாஜி எம்.எல்.ஏ. நாச்சிமுத்துவுக்கு சொந்தமானது என்பதால், வீரப்பன் தன் முன்னாள்  முதலாளியான நாச்சிமுத்துவிடம் 6 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்க.....

 

கர்நாடகா கொள்ளேகால் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ராஜகௌடா (வீரப்பனின் தோஸ்த்) முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தின் இறுதியில் நாச்சிமுத்துவும் 6 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுவிட்டு பணம் தராமல் இழுத்தடிக்க, வெகுண்ட வீரப்பனின் விஸ்வரூபம்தான் நாச்சிமுத்து கடத்தல் முயற்சி! கத்திரிப்பட்டியில் தனது தோட்டத்தில் இருந்த நாச்சிமுத்துவை ''கிட்நாப்'' செய்ய வந்த மூவர் நாச்சிமுத்து சென்னைக்கே நிரந்தரமாக ஓடி விட்டதால் அங்கிருந்த வீரபத்திரன், ரங்கராஜன் என்ற இருவரை உதைத்த உதையில் அவர்கள் இருவரும் மேட்டூர் ஜி.எச்.இல் வந்து விழுந்தனர்.

 

ஏற்கெனவே பர்கூர் பகுதியில் உள்ள சந்தன மரங்களை ஸ்வாகா செய்துவிட்ட வீரப்பனின் ஆட்கள் தற்போது சத்தியமங்கலத்தில் மும்முரமாக ஸ்வாகா நடத்தி வருகின்றனர்.

 

ஆனால்,தற்போது ட்ரான்ஸ்போர்ட் செய்ய முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட, 2 கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் மாக்கம்பாளையத்தில் ஸ்டாக் இருக்கிறது. லோக்கல் போலீஸை வீணாக நம்பி இராமல் பாதுகாப்புக்கு வந்த எல்லை காவல் படையினர் உதவியோடு,அந்த ஸ்டாக் சரக்கில் 27 லட்சம் மதிப்புள்ள கொஞ்சூண்டு மரங்களை காட்டிலாகா அரும்பாடுபட்டு மீட்டு விட்டது. இதனால் லோக்கல் போலீஸுக்கு காட்டிலாகாவினர் மீது மனக்கசப்பு !

 

தற்போது தன்னை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றும் மாக்கம்பாளைய மக்களுக்காக 50 ஆயிரம் செலவில் கோவில் கட்டிக் கொடுப்பதாக வீரப்பனிடம் இருந்து உறுதிமொழி வந்திருக்கிறது. இதனால், மாக்கம்பாளைய பஸ்ஸில் யாராவது புதுமுகம் தென்பட்டாலே வீரப்பனுக்கு விஷயம் போய்விடும். அந்த பகுதி மக்களே தங்கள் மாட்டுவண்டிகளில் பச்சைக்கொடி (சிம்பல்) கட்டிதான் நடமாடுகின்றனர். சமீபத்திய ஜீவா பஸ் தாக்குதலுக்கு பின் சத்தியமங்கலம் ஜீவா போக்குவரத்து கழக பிராஞ்ச் மேனேஜருக்கு ''கண்டக்டரும்,டிரைவரும் உயிரோடு திரும்ப முடியாது'' என்று வீரப்பனின் ஸ்பெஷல் மெசேஜ் வந்ததால், மாக்கம்பாளையத்துக்கு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏற்கெனவே பர்கூரில் இதே முறை அமலில் இருந்து வருகிறது..

 

பகீரத பிரயத்தனத்துடன் வீரப்பனுக்கு வலைவிரித்து தேடிவரும் போலீஸ், வீரப்பன் முன்பு ஒருமுறை கர்நாடக போலீஸிடம் மாட்டிய போது எடுத்த போட்டோவை அடையாளம் வைத்தே தேடுகிறது. உண்மையில் தற்போது வீரப்பனின் கெட்டப் வேறுவிதமானது. சில மாதங்களுக்கு முன்பு குளத்தூரில் பிடிபட்ட ஒரு கடத்தல் லாரியில் இருந்த வடநாட்டு டிரைவரை போலீஸ் அடித்த போது, 'என்னை ஏன் அடிக்கிறீங்க'' வீரப்பன் இரண்டு நாள் சேலம் ஆஸ்பத்திரியில் தான் இருந்தான் அப்ப மட்டும் பிடிக்காம விட்டுட்டீங்களே'' என்றதும்தான் போலீஸுக்கு தனது தவறு புரிந்தது.

 

நாள் தவறாமல் பேப்பர் படிக்கிற வீரப்பன் தன்னை பற்றிய செய்திகளை படித்துவிட்டு நம்மை பேட்டி எடுக்கவே மாட்டேங்குறாங்களே என்று அடிக்கடி பட்டு வந்த வருத்தம், சமீபத்தில் ஒரு வார இதழில் ''வீரப்பனின் தங்கையை காட்டு இலாகாவினர் கற்பழித்ததால் வீரப்பன் பழி வாங்குகிறார்''என்று எழுதியதால் ''பொய் எழுதுகிறாங்களே'' என்ற எண்ணத்தால் மாறிவிட்டதாம்.

 

உண்மையில் வீரப்பனுக்கு தங்கையே கிடையாது!

 

உலகத்திலேயே சிறந்ததாக கருதப்படும் தமிழ்நாடு காவல்துறையே வீரப்பனிடம் சிக்கி விழிபிதுங்க காரணம் வீரப்பன் வசம் இருக்கிற அதி நவீன ரக ஆயுதங்கள்தான். இந்திராகாந்தி காலத்தில் மேட்டூர் பகுதி லக்கம்பட்டியில் போர் பயிற்சி அளிக்கப்பட இலங்கைப் போராளிகள் மூலமாக வீரப்பனுக்கு ஆயுதங்கள் கிடைத்திருக்கிறது. இந்த ஆயுதங்களுடன் 50 பேர் +அரிவாள் கத்திகளோடு சுமார் 300 பேர் போதாக்குறைக்கு மலைப்பகுதி வாசிகளின் ஆதரவும் இருப்பதால் அவனைப் பிடிப்பது இதுவரை கனவாக இருக்கிறது.

 

வீரப்பனே தன் சகாக்களிடம் ''நான் பயப்படுகிற ஒரே போலீஸ் அதிகாரி தேவாரம்தான்'' என்று கூற, தேவாரமும் வந்தார். தேர்தல் சந்தடியில் ஓசைப்படாமல் வீரப்பனை பற்றிய 'இன்பர்மேஷன்கள்' தேவாரத்தால் கலெக்ட் செய்யப்பட்டன. இதற்கிடையில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ஜி.பி.துரையும் தனது கவனத்தை வீரப்பன் பக்கம் திருப்ப, அதிரடித் திட்டம் தயாரானது. ''ஆபரேஷன் ஸ்நாப்'' என்ற பெயரில் கடந்த வாரம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஈரோட்டில் குவிக்கப்பட்டனர்.

 

காட்டிலாகா ஐ.ஜி.சர்மா, டி.ஐ.ஜி.காளிமுத்து, கோபாலன்,எஸ்.பி.க்கள்..,ராஜேந்திரன், பாஸ்கர், தர்மராஜன், சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் தயார்நிலைபடுத்தப்பட்டது. கூடவே ஆயுதப்படை காவலர்கள் 500 பேர்களும், கைகளில் ஆயுதங்களுடன் தோள்தட்டி நிற்க சத்தியமங்கலம், பர்கூர், மாக்கம்பாளைய பகுதி எங்கும் ஒரே போலீஸ் வாசனை!

 

சற்றேறக்குறைய வீரப்பனுடன் போர் நடத்த காவல்துறை தயாராகி களம் புகுந்துவிட்ட செய்தி எப்படியோ வீரப்பனுக்கு கசிந்து செல்ல, முதல்கட்டமாக தனது படையை தயார்நிலைபடுத்தியதோடு, மலைப்பகுதியில் ஸ்டாக் வைத்திருந்த சந்தன மர குவியல்களை அப்புறப்படுத்த தொடங்கிவிட்டான்.

 

கடந்த 3 ஆம் தேதி அதிகாலை பர்கூர் பகுதியில் உள்ள சிங்காபுரத்தில் இவ்வண்ணமே ட்ராக்டரில் கடத்தப்பட்ட சந்தனமரங்களை போலீஸ்படை சுற்றிவளைக்க, அரைமணிநேர டமால் டுமீலுக்கு பின் வீரப்பன் தரப்பில் 2 பேர் மரணம். இந்த சம்பவம் நடந்த அதேநேரம் கீர்கைகண்டியிலும் வீரப்பனின் கடத்தல் லாரி ஓன்று அனல் பறந்த துப்பாக்கி சண்டைக்கு பின்பு போலீஸ் வசம் வந்துள்ளது.

 

மாக்கம்பாளையம், ஜல்லிபாளையம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் இருந்தும் போலீஸ் படை வெற்றிகரமாக முன்னேறி வருவதாக 4.1.90. அன்று மாலை வரை வயர்லெஸ் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் காட்டின் ஒவ்வொரு அங்குலமும் வீரப்பனுக்கு பரிச்சயம் என்பதால் திக்குத் தெரியாத காட்டில் திணறும் காவல்துறைக்கு வீரப்பன் டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், போலீஸும் எதற்கும் துணிந்துவிட்ட நிலையில் காடுகளில் ஆக்ரோசமாக தொடர்ந்து முன்னேறுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பிரதேசம் எங்கும் ஒரு வித திகில் வியாபித்துள்ளது! காவல் துறையின் இந்த உச்சகட்ட போரில் வீரப்பன் அட்டகாசம் முடிவுக்கு வருமா? தொடருமா?