Skip to main content

பாமகவின் முதல் சட்டமன்ற தேர்தல் அனுபவம்... ராமதாஸ் சிறப்பு பேட்டி...

 

dr ramadoss interview about pmk first assemly election

 

1989 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பாமக, கட்சி துவங்கப்பட்ட மூன்று மாதங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. இதுவே அக்கட்சியின் முதல் தேர்தலாகும். கட்சி தொடங்கியவுடன் நேரடியாக மக்களவை தேர்தலையே தனது முதல் தேர்தலாக சந்தித்த பாமக, தனது முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது புதுச்சேரியில் தான். 1990 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை, புதிய கட்சியான பாமக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்கொண்டது. இப்படி, தனது முதல் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருந்த பாமக -வின் நிறுவனர் ராமதாஸ் நக்கீரனுக்கு அளித்த பேட்டி 21.2.1990 நக்கீரன் இதழில் வெளியானது.   

 

"எங்களை தவிர யாரும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை" - டாக்டர்.ராமதாஸ் பேட்டி

 

தமிழக அரசியல்வாதிகளுக்கும் பாண்டிச்சேரி மாநில அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்?

 

வித்தியாசம் ஒன்றும் பெரிய அளவில் கிடையாது.  இதே அரசியல்தான் அங்கும் நடக்கிறது. அதே ஊழல் கட்சிகள்தான் இங்கும் இருக்குது. அங்கே பெரும் தலைகள். இங்கே குட்டி தலைகள். அவ்வளவுதான்.

 

ஒருவர் அடிக்கடி கட்சி மாறி தேர்தலில் நின்றாலும் அவர்களையும் வெற்றி பெற வைக்கிறார்களே பாண்டிச்சேரி மக்கள்?

 

இந்த மாநிலம் ஒரு சின்ன ஏரியா. தொகுதிகள்  சின்ன சின்ன தொகுதிகளாக இருக்கும். வேட்பாளர்கள் மக்களை விலை கொடுத்து வாங்கிடுறாங்க. உதாரணமா...டி.ஆர்.,பரூக் போன்றவர்களை எடுத்துக் கொள்ளுங்களேன்.இவர்கள் அடிக்கடி கட்சிமாறினால் கூட, தங்கள் தொகுதியில் காசு,பணம்,சாராயம் அவ்வப்போது சப்ளை செய்றாங்க. இதனால் வர்ற சொந்த செல்வாக்கை வச்சுக்கிட்டுத்தான் ஜெயிக்கறாங்க. ஆனா, ஒட்டுமொத்தமா வந்து மக்களை ஏமாத்துறாங்க. இவங்களெல்லாம் நமக்கு குழி பறிக்கிறாங்க என்று மக்களுக்கு தெரியல. அதை எங்க பாட்டாளி மக்கள் கட்சி தெளிவுபடுத்தும்.

 

பண பலம் கொண்ட காங்கிரஸ், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அனைத்து பலமும் கொண்ட தி.மு.க. - போன்ற பல கட்சிகளை எதிர்த்து எந்த துணிச்சலில் பாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறுகிறீர்கள்?

 

அதாவது,வெற்றி வாய்ப்பையே பெரிதாக எண்ணி நாங்க கட்சி ஆரம்பிக்கலை. ''அரசியல் ஒரு சாக்கடை''என்று படித்தவர்கள், அறிஞர்கள் கூட ஒத்துக்கறாங்க. ஆனா, ''அந்த அரசியல் சாக்கடையை கூட சுத்தம் பண்ண முடியும். அதன் மூலமா மக்களுக்கு நன்மை செய்ய முடியும்'' என்ற ஆதங்கத்தினால்தான் கட்சி ஆரம்பித்தோம். அதிலும் குறிப்பா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்கள், மொழி இன சிறுபான்மையினர் போன்றவர்களை 'எஜுகேட் ' பண்ணி அரசியல் நடத்தலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பித்தோம்.

 

இதுவரைக்கும் தமிழ்நாட்டுல அரசியல் நிலைமை எப்படி இருக்குன்னு சொன்னா, கவர்ச்சி அரசியல், மேடைப்பேச்சு அரசியல் இதன் மூலம் மக்களை ஏமாத்திட்டு வர்றாங்க. ஆனால் இப்ப பாட்டாளி  மக்கள் கட்சி மக்கள் கிட்ட அரசியல்வாதிகளின் ஊழல்களை பற்றி சொல்கிறது. வறுமையில் வாடும் பாட்டாளிகளின் நிலைமை, ஏழைகளிடம் பணத்தை கொடுத்து ஒட்டு வாங்குவது - இதை எல்லாம் மக்களிடம் விளக்கமாக சொல்கிறோம்.

 

கட்சி ஆரம்பிச்ச 3 மாசத்துலேயே யூனியன், பஞ்சாயத்து ,எம்.எல்,ஏ., என்று படிப்படியாக போகாமல் நேரடியாக எம்.பி.தேர்தலை சந்தித்தோம். மொத்தம் 15 லட்சம் ஓட்டும் வாங்கினோம்.அதாவது அந்த 15 லட்சம் வாக்காளர்களை தமிழ் நாட்டுல எஜுகேட் பண்ணி இருக்கோம். அவங்களுக்கு சாராயம் கொடுக்காம, எந்த கவர்ச்சியையும் காட்டாம எஜுகேட் பண்ணியிருக்கோம். இதை நாங்க பெரிய வெற்றியா நினைக்கிறோம். நாங்க பதவியை முக்கியமா நினைக்கல. கூட்டுக்கு கூப்பிட்ட கட்சிகளிடமும் நாங்க வர மாட்டோம் என்று சொல்லிவிட்டோம். ஆக,வெற்றியை லட்சியமாக கொள்ளாம போட்டி இட்டோம்.

 

இதே பாணியில்தான் பாண்டி தேர்தலிலும் தனியாக பாட்டாளி மக்கள் கட்சி நிற்கிறது. மொத்த வாக்காளர்களே 4.5 லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். அவர்களை முழுமையாக எஜுகேட் பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

 

அதேநேரத்தில் இதுவரை ஆண்ட கட்சிகளின் ஊழல்கள் எல்லை மீறி இருக்கிறது. மக்களே ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். சென்ற எம்.பி.தேர்தலில் 25 ஆயிரம் ஓட்டுக்கள்தான் வாங்க முடிந்தது. அதுக்கு காரணம் என்னன்னா எங்ககிட்ட அப்ப பணம் இல்லை. பிரச்சாரம் பண்ண வசதியில்லை. போஸ்டர்,நோட்டிஸ் கூட 
பெருமளவில் ஓட்ட முடியல. மக்களை நேரடியாக சந்திக்கவும் நேரம் போதல. ஆனா, ஒரு 25 ஆயிரம் பேரை அப்ப தெளிய வைச்சிருக்கோம். அதுவே பெரிய வெற்றி.

 

அந்த வகையில் பார்க்கும்போது இந்த எலெக்சன்ல மக்களை பலமுறை தனித்தனியா சந்தித்து எடுத்து சொல்லி அவர்களை தெளிய வைக்க முடியும்னு நம்புறோம். அதன்மூலம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.

 

நீங்கள் நடத்திய ஊர்வலத்திலும்,பொதுகூட்டத்திலும் பலருடைய மண்டைகள் உடைந்ததையும், வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் நான் நேரிலேயே பார்த்தேன். இன்று உங்கள் கட்சி அலுவலகத்தைக் கூட காலி பண்ணாவிட்டால் வெடி குண்டு வீசி தகர்ப்போம் என்று சிலர் பட்டப்பகலிலேயே மிரட்டி சென்றதையும் பார்த்தேன். இதனால் உங்கள் கட்சியினர் கொதிப்படைந்து போய் உள்ளனர். தமிழகத்தில் இருந்து போய் தேர்தல் பணி செய்யும் உங்கள் கட்சியினருக்கு பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டால் அப்போது உங்கள் நிலை என்ன? பாண்டிமக்கள் , ''இது வன்முறை தேர்தலாக முடிந்துவிட கூடாது'' என்று அஞ்சுகின்றனரே?

 

பாண்டிச்சேரியில் வன்முறைக்கு விடிவுகாலமே எங்கள் கட்சியினால்தான் வரும் என்று நம்புகிறேன். ஊர்வலத்தில் வந்த பல்லாயிரக் கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தேர்தல் தோல்வி பயம் கண்ட சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் சில ரௌடிகளால் என் சொந்தங்கள் எல்லாம் அடிபட்டு ரத்தம் சிந்தினாங்க. இப்ப அலுவலகத்தையே குண்டு வீசி தகர்ப்போம் என்று மிரட்டுறாங்க. இதை எல்லாம் போலீஸ் துறையின் உதவியோடதான் செய்யிறாங்க. ஏன்னா, போலீஸ் ஐ.ஜி.நாங்க வன்முறை பண்றதற்காகவே தமிழ்நாட்டுல இருந்து வந்திருந்ததா சொல்லியிருக்காரு.

 

நாங்க வன்முறை பண்றதுன்னா, ராத்திரி அவங்க பண்ணுனதுக்கு நாங்கள் நினைத்திருந்தால் சரியான பதிலடி கொடுத்திருக்க முடியும். அதை ஐ.ஜி.புரிந்து கொள்ளட்டும். நாங்கள் அரசியல் நடத்ததான் பாண்டி போனோமே தவிர, வன்முறை நிகழ்த்த அல்ல. ஆனா, பாண்டியில் உள்ள மத்தகட்சிகள் திட்டமிட்டு வன்முறையில் இறங்கினாலும் நாங்கள் தேர்தல் வரைக்கும் சமாளிப்போம். சமாளிக்கறதுன்னா எதுத்து அடிக்கறது அல்ல.

 

அந்த கட்சி அரசியல்வாதிகள் செய்த கற்பழிப்புகள், கொலைகள், இப்ப செய்யுற அராஜகங்கள் எல்லாவற்றையும் மக்கள் கிட்ட சொல்லி ஒட்டு வாங்குவோமே தவிர திருப்பி அவங்க மேல தாக்குதல் நடத்த மாட்டோம். எங்களால் அதுவும் முடியும். அந்த துணிச்சலும் இருக்கு. ஆனா,அதை நாங்க செய்தோம் என்றால் ஆதாயம் அவங்களுக்கு தான் இருக்கும்.

 

அதனால் அமைதியான வழியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நாங்கள் நடந்துக்குவோம். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற எங்கள் கட்சி முன்னணியில் நிற்கும். எங்க கட்சிக்காரங்க எதுவும் செய்தாங்கன்னா அவங்களுக்கு தண்டனை கொடுக்க கூட நாங்க தயாரா இருக்கோம். எங்களுக்கு எந்தவித பாதிப்புகள் இழப்புகள் வந்தாலும் எலெக்சன் வரைக்கும் அதை எல்லாம் நாங்கள் ஏத்துக்குவோம்.

 

உங்களுக்கு ஆதரவாக பேசிவந்த இளையபெருமாள் தி.மு.க.வுக்கு ஆதரவு தந்துள்ளாரே....இதனுடைய பின்னணி என்ன?

 

இளையபெருமாளை பொறுத்தவரைக்கும் அவர் அந்த சமுதாய மக்களாலும், இளைஞர்களாலும் தூக்கி எறியப்பட்ட ஒரு ''பீஸ்''போன பல்பு. 40 வருசமா அரசியல் பன்ற அவர், அவரது சொந்த தொகுதியிலயே எம்.பி.தேர்தலில் அவருடைய சமுதாய மக்களாலேயே தூக்கி எறியப்பட்டவர்.

 

தாழ்த்தப்பட்டோர்களின் சமுதாய அமைப்பில் உள்ள ஸ்காமில்(Scam -அரிஜன சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக கூடக்கூடிய அமைப்பு) இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இப்படி அவருடைய செயல்களாலேயே அவருடைய மக்களால் ஒதுக்கப்பட்டு வருகிறார். என்னுடன் கூட போகி பண்டிகை அன்று 2 மணி நேரம் பாண்டியில் பேசினார். ''நாம இனிமே ஒத்துமையா இருப்போம்'' அப்படின்னு உறுதியா சொல்லிட்டு அன்னைக்கே மத்த கட்சிகளோடவும் பேசினார்.

 

அவரை பொறுத்தவரைக்கும் சொல்றது ஒண்னு, செய்றது ஒண்னு.அவருடைய நோக்கமே என்னன்னா வன்னிய மக்களும் ஆதி திராவிட மக்களும் ஒற்றுமையாகி விடக் கூடாது... ஏன் ஆகக் கூடாதுன்னு விரும்புறார்னா... ஒற்றுமையா ஆனா தனக்கு வேலை இல்லாமல் போய் விடும் என்றுதான். ஏன்னா... இரண்டு சமுதாயத்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டது இளையபெருமாள் போன்ற தலைவர்களால் தான். ஆனா, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்களும், அரசு ஊழியர்களும் நாம ஒண்ணாயிடலாம் என்ற நிலைமைக்கு வந்துட்டாங்க. நான் இந்த இரண்டு சமுதாயத்தையும் எப்படியும் இணைச்சுடனும்கற வேலையில் குறியா இருக்கேன்.

 

இளையபெருமாள் தி.மு.க.வில் சேர்ந்த பின்னணி?

 

என்ன பின்னணி....காசுதான் பின்னணி . அதாவது செட்டிலாயிட்டாருன்னு அர்த்தம். அவருக்கு காசு கொடுக்கிறதுக்கு எங்ககிட்ட காசும் கிடையாது. நாங்களே அந்த மக்கள்கிட்ட- அந்த இளைஞர்கள்கிட்ட போயி பிரச்சனைகளை சொல்லி ஒற்றுமைக்கு வழி காணுவதுதான் இனிமேல் எங்களுடைய வேலையே தவிர, இந்த மாதிரி ஆளுங்களை பணம் கொடுத்து வாங்க நாங்க விரும்பல. அது தேவையும் அல்ல.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

 

இந்த ஊழல் கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி மக்களை தெளிய வைக்க போறோம். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஆதி திராவிடர்கள் போன்ற வெகு ஜன மக்கள் கையில் ஆட்சி அதிகாரம் வரணும்.வெகுஜன மக்களை புரிஞ்சவங்க ஆட்சி அதிகாரத்துல இருக்கணும். அந்தமாதிரி நிலைமையை உண்டாக்கணும்னா..... கவர்ச்சியை கண்டவுடன் ஆட்டு மந்தைகள் மாதிரி ஓடுற அந்த கூட்டத்தை மாத்தணும். அதற்கு அவர்களை எஜுகேட் பண்ணனும். அந்த வேலைதான் நாங்க இப்ப செஞ்சுட்டு வர்றோம். இதன்மூலம் எதிர்காலத்தில் சிறப்பான ஒரு ஆட்சி அமைய வழிவகுப்போம்.

 

இறுதியாக இதையும் எழுதிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு 30 சதவீதம் தேர்தலில் இடஒதுக்கீடு செய்வோம் என்று சொன்ன தி.மு.க. காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் பாண்டிச்சேரியில் எந்த ஒரு பெண் வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

 

கற்பழித்து கொலை செய்யப்பட்ட பத்மசுந்தரியின் தாயாரை நாங்கள்தான் காசிக்கடை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.