அதிரடி சண்டை, புழுதி பறக்கும் சேஸிங் காட்சிகள், மூச்சு பிடித்து மூன்று நிமிஷம் பேசும் பரபரப்பான பஞ்ச் வசனங்கள், காதைக் கிழிக்கும் புல்லட் சத்தம் என நாம் இதுவரை பார்த்துப் பழகிய பல்வேறு போலீஸ் படங்களின் மத்தியில், இது எதுவுமே இல்லாமல் மென்மையான போலீஸ் படமாக வெளிவந்துள்ளது ‘ரைட்டர்’ படம். நாம் பார்த்துப் பழகிய போலீஸ் படங்கள் நமக்குக் கொடுத்த அதே கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ்களை இப்படம் கொடுத்ததா...?
போலீசில் சீனியர் ரைட்டராக இருக்கும் சமுத்திரக்கனி, போலீசுக்கு என ஒரு சங்கம் அமைக்க முயற்சி செய்கிறார். இது பிடிக்காத சில போலீஸ் அதிகாரிகள், அவரை வேறு ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் செய்கின்றனர். வந்த இடத்தில் சமுத்திரக்கனி, அப்பாவி கைதியான ‘மெட்ராஸ்’ பட ஜானி புகழ் ஹரிக்கு பாரா டூட்டி பார்க்கிறார். அப்போது சமுத்திரக்கனி உதவியுடன் தேசத் துரோக வழக்கில் ஹரி சிக்க வைக்கப்படுகிறார். இதை அறிந்த சமுத்திரக்கனி குற்ற உணர்ச்சியால் ஹரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா, இல்லையா? என்பதே ‘ரைட்டர்’ படத்தின் மீதி கதை.
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அழுத்தமான போலீஸ் கதையை சிறப்பாக கையாண்டு, அதை ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார் இயக்குநர் ஃபிராங்கிளின் ஜேக்கப். கதையாடல் உண்மைக்கு நெருக்கமாகவும், அதே சமயம் சொல்லப்படாத ஒரு கதையை அழுத்தமான திரைக்கதை மூலமும் கொடுத்துள்ளது. இது பல இடங்களில் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. உண்மை சம்பவங்களுடன் சற்று சினிமாத்தனத்தையும் கலந்து அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பாக பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர். குறிப்பாக கமர்சியல் அம்சங்களைத் தவிர்த்துவிட்டு போலீசில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்களை சரிவர படம்பிடித்து, கரப்ட் ஆபீசர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.
சமுத்திரக்கனி ரைட்டர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் அப்படியே கதாபாத்திரத்துடன் ஒன்றி உயிர் கொடுத்துள்ளது. மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்கும் காட்சிகளிலும் சரி, கைதிகளிடம் பரிவு காட்டும் காட்சிகளிலும் சரி, சக காவலர்களுடன் பழகும் காட்சிகளிலும் சரி முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சமுத்திரக்கனியுடன் நடித்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் புகழ் ஆன்டணி கலகலப்பான வசனங்கள் பேசி, தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பக்கபலமாய் அமைந்துள்ளது. அதுவே படத்திற்கு வேகத்தையும் கூட்டியுள்ளது.
நடிகர் ஹரியின் அண்ணனாக வரும் இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது நடிப்பால் கண்கலங்க வைத்துள்ளார். இவரது அப்பாவியான நடிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும் படியான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இனியா. தைரியமான பெண்மணியாக வரும் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது. சமுத்திரக்கனியின் மனைவியாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி நடிகை மகேஸ்வரி அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாபாரதி, டிசியாக வரும் கவின் ஜெய் பாபு ஆகியோர் அக்கதாபாத்திரங்கள் மீது எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காவல் நிலையத்தில் நடக்கும் அட்டூழியங்களை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அது பார்ப்பவர் மனதிலும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில் போலீஸ் நிலைய காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது. கோவிந்த் வசந்தா பின்னணி இசை படத்துக்குத் தூணாக அமைந்து, படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது.
கமர்சியல் அம்சங்களுடன் கூடிய பரபரப்பான போலீஸ் படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு இந்தப் படம் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்து 'அடடே' போடவைத்துள்ளது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அமைய பிரகாசமான வாய்ப்பு உண்டு.
‘ரைட்டர்’ - அழுத்தமான சாட்டையடி!