Skip to main content

தமிழகத்துக்கு விஜய் சேதுபதி தந்திருப்பது என்ன? மேற்குத் தொடர்ச்சி மலை - விமர்சனம் 

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

அதிகாலை நாலு மணிக்கு 'நேரமாயிடுச்சுடா எந்திரிடா' என்று மகனை எழுப்பும் தாய், எழுந்தவுடன் பெய்யும் மழை நீரில் முகத்தைக் கழுவிவிட்டு ஒரு சாக்குப்பையை தலையில் போட்டுக் கொண்டு தன் நாளைத் தொடங்கும் மகன், அவனது நாளுடன் தொடங்கும் படம், அதைப் போலவே நம்மையும் மெதுவாகவேதான் அழைத்துச் செல்கிறது. கதையைத் தொடங்கும் அவசரமில்லாத இந்தப் பொறுமையே ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கு அதிர்ச்சிதான். ஆனால், அவசரமாக சொல்ல இது கதையில்லை, வாழ்க்கை என்பதை மெல்ல உணரும்போது நாமும் கோம்பையில், பண்ணைபுரத்தில், தேவாரத்தில் உலாவத்தொடங்குகிறோம்.

 

merku thodarchi malai1



சினிமா என்னும் ஊடகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். இயக்குனர் லெனின் பாரதியின் நிலைப்பாடு, 'சொல்லப்படாத கவனிக்கப்படாத வாழ்வை, அந்த வாழ்வில் விளையாடும் அரசியலை, அதிகம் பேசாமல், அப்படியே காட்டுவது' என்பது தெரிகிறது. இந்த நிலைப்பாட்டினால் படம் பார்ப்பவர்களை அதிகமாக சோதிக்கவுமில்லை என்பது அவரது பலம். கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவு லெனின் பாரதி. வெல்கம் வித் பொக்கே... 

 

 


செமகார (சுமை தூக்குபவன்) இளைஞன் ரங்கசாமிக்கு தனக்கென ஒரு நிலம் வாங்கவேண்டுமென்பதே கனவு. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடையால் கலையும் அந்தக் கனவு இறுதியில் என்ன ஆனது என்பது மட்டும் கதையல்ல, இதை அடிப்படியாகக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் பிணைந்திருக்கும் பல வாழ்க்கைகளை சொல்லியிருக்கிறார் லெனின் பாரதி.

  merku thodarchi malai 2



அந்த மலையில் நடைபாதையிலும், சுமை தூக்கும் மனிதர்கள், கழுதைகள் வழியாக தமிழ் - மலையாள மக்களிடையேயான உறவு, அந்தத் தொழிலாளர்களின் வாழ்வை ட்ரேட் யூனியன் காக்கும் விதம், முதலாளித்துவம் எடுக்கும் தந்திர ஆயுதம், உற்பத்தி செய்தவர்கள் உளைந்து போக பிழைக்க வந்த இடைத்தரகர்கள் வளர்ந்து நிலத்தை வளைப்பது... இப்படி சத்தம் போடாமல் படம் பேசும் அரசியல் நிறைய. 'நாளைக்குதானப்பா பத்திரம், நீயும் உள்ளூர்க்காரன், நானும் உள்ளூர்க்காரன்' என அட்வான்ஸ் வாங்க மறுக்கும் நிலவுரிமையாளர், 'உங்க அப்பன்தான் என்னை கடன்காரனா வச்சிருந்தான், நீயும் அப்படி பண்ணாத' என உரிமையுடன் உதவும் பாய், 'இவனை யூனியன் மெம்பராக்கிவிட்டா பொண்டாட்டியோட நல்லா பொழச்சுக்குவான்' என பரிந்துரைக்கும் கங்காணி... இப்படி மலை நெடுகிலும் ஈரமான  மனிதர்கள்.

 

 


'சாத்தா' கோவில், கிறுக்கு கெழவி, மரணம் வரை வைராக்கியமாக மூட்டை சுமக்கும் முதியவர், அதையே தன் சாதனையாக நம்பி பெருமையாக பேசுவது, கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க மலைக்கு வந்து ஏற முடியாமல் முழிக்கும் நம்மைப் போன்ற தரைவாழ்வின் பிரதிநிதி, ஊரில் அனைவரும் வம்பிழுக்கும் கங்காணி என மலையின் சுவாரசியங்களுக்கும் குறைவில்லை. இறுதிக் காட்சி பெரும் கோரமெல்லாம் இல்லை, ஆனால் மனதில் பெரும் கணம். நகரம், வளர்ச்சி, முதலீடு போன்ற சுயநலங்கள், சூட்சமங்கள்  தெரியாத எத்தனை உயிர்கள் இப்படி வாழ்கின்றன என்ற உண்மை ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றது.

  merku thodarchi malai 3



'ஊருக்குள்ள ரோடு வந்தா மெஷின் வரும், மெஷின் வந்தா நம்ம மக்கள் வேலை போகும்' என தொழிலாளர்களுக்காகவே வாழும் சகாவு சாக்கோ, நிகழ்கால  வளர்ச்சியின் பலத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அதே நேரம் மக்கள் அதற்கு இரையாக விடக்கூடாது என்ற தவிப்போடு வாழும் பொதுவுடைமை அரசியலின் குறியீடாக இருக்கிறார். நிலமில்லாதவர்களின் துயரை சொல்லியிருப்பதோடு, நிலமிருப்பவர்களும் கூட இயற்கையாலும் பிறராலும் விவசாயத்தில் அடையும் இழப்புகளையும் பேசியிருப்பது நலம். மொத்தத்தில் ஒரு நில அமைப்பின் வாழ்வியலை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

 


பொதுவாக ஒளிப்பதிவு வேறு ஒரு இடத்தின் அழகை நமக்கு எடுத்துக் காட்டும், ரசிக்க வைக்கும். சில நேரங்களில் மட்டும்தான் நம்மையே அந்த இடத்துக்குள் அழைத்துச் செல்வது போன்ற ஒளிப்பதிவு அமையும். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மை மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. படத்தின் மிக மிக முக்கிய பங்கு, அந்த மலையை, அந்த வாழ்வை கடத்தியதில் அவருக்கு இருக்கிறது. பிரம்மாண்டத்துக்காக 'ஏரியல் வியூ' கொண்டு செல்லாமல், ஒவ்வொரு முறை 'ஏரியல் வியூ' செல்லும்போதும் ஒரு தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது ஈஸ்வரின் ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசை படத்தை வெளியே  தூக்கிநிறுத்தாமல், உள்ளிருந்து ஒரு கணத்தைத் தருகிறது.

  merku thodarchi malai 4



இப்படி ஒரு படத்தை இன்னும் முழுமையாக வெகுமக்கள் அனுபவிக்கத் தடையாக இருக்கும் சில விசயங்கள்... இயக்குனர் முன்பே சொன்னது போல அங்கிருக்கும் மக்களையே பல பாத்திரங்களில் நடிக்கவைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில், ஒருவர் வசனம் பேசும்பொழுது மற்றொருவர் 'என்ன பாவனை காட்டுவது' என்ற குழப்பத்தில் இருப்பதும், பேசுபவர்களுமே கூட நடிக்க வராமல் சற்று செயற்கையாகத் தோன்றுவதும் குறை. உண்மை வாழ்வில் நகைச்சுவை இன்னும் பலமாகவே இருக்கும், இன்னும் அதிகமாக சிரிக்கவைக்கக்கூடியதாகவே இருக்கும். அதையும் கூட தவிர்த்து மெல்லிய வெறுமை இழையோட விட்டிருப்பது இயக்குனரின் முடிவாகக்கூட இருக்கலாம், ஆனாலும் அது ஒரு குறை. ஆண்டனி, காயத்ரி, ஆறு பாலா, அபு என நடிகர்களின் நடிப்பில் குறையில்லை.

இவற்றையெல்லாம் தவிர்த்து, இந்தப் படம் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தமிழகத்துக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு. அவர் மீதான அன்பு இன்னும் சற்று அதிகமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலை... ஒரு வாழ்வின் முக்கியமான உண்மை ஆவணம். படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.      

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!