நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கலகலப்பான கல்லூரி திரைப்படமாக வெளிவந்துள்ளது டான் திரைப்படம். கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் டைட்டில் தொடங்கி, அனிருத்தின் கலக்கல் இசை, கல்லூரி பேக் ட்ராப் என மாணவர்களையும் இளைஞர்களையும் மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிக்கும்படி இருந்ததா..?
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கண்டிப்பான அப்பாவான சமுத்திரக்கனி, தன் மகன் சிவகார்த்திகேயனை எப்படியாவது இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று அவரை இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். அங்கு வேண்டாவெறுப்பாக சேரும் இன்ஜினியரிங் பிடிக்காத சிவகார்த்திகேயன் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்னவெல்லாம் அட்டகாசம் செய்வார்களோ அதை எல்லாம் செய்து கல்லூரிக்கே டானாக மாறிவிடுகிறார். அப்போது ஒழுக்கம் தான் முக்கியம் என நினைக்கும் கண்டிப்பான ஆசிரியரான எஸ் ஜே சூர்யாவுக்கும் இவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே தனக்கு என்ன வேலை சரியாகவரும் என்பதைத் தேடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கான பேஷனை கண்டுபிடித்து அதில் பயணிக்க நினைக்கிறார். இப்படி ஒருபுறம் கண்டிப்பான அப்பா, இன்னொருபுறம் கண்டிப்பான ஆசிரியர், இன்னொருபுறம் தனக்கு பிடித்தமான கரியரை தேர்வு செய்ய முடியாத சூழல் என தனக்கு இருக்கும் தடைகளை சிவகார்த்திகேயன் எவ்வாறு எதிர் கொண்டார் என்பதே டான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் போஸ்டர்கள், மேக்கிங், அதில் வரும் கதாபாத்திரங்கள் எனப் பல விஷயங்கள் விஜய்யின் நண்பன் படத்தை நினைவூட்டும்படி அமைந்திருந்ததால், படமும் அதே டெம்ப்ளேட்டில் தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால், படம் போகப்போக வேறு ஒரு புதிய கோணத்தை அடைகிறது. முதல்பாதி காமெடி காட்சிகளுடன் சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி வேகமாகவும் அதே சமயம் உணர்ச்சிப் பூர்வமாகவும் அமைந்து கிளைமேக்ஸில் 'அடடே' போட வைக்கிறது. இக்கால கல்லூரி இளைஞர்களின் பல்ஸை சரியாகப் பிடித்துப் படத்தின் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. முதல் பாதி முழுவதும் ஹீரோயிஸம், ஆடல் பாடல், கலகலப்பு எனப் பழைய டெம்ப்ளேட்டிலேயே பயணித்த இயக்குநர் இரண்டாம் பாதியில் சற்று கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, காட்சிகளையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்திப் படத்தைக் கரை சேர்த்துள்ளார். குறிப்பாகப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து முழு படத்தையும் தாங்கி பிடித்துள்ளது.
இளமை துள்ளலான ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு ஜாலியான ஹீரோவாக கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். கல்லூரி காட்சிகளைக் காட்டிலும் பள்ளிப்பருவ காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். அம்சமாக நடித்துள்ளார். சிறிய தொய்வுக்குப் பிறகு, தனக்கு என்ன வருமோ அதைச் சரியாகக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல் கதாபாத்திரத்தைச் சிறப்பாகத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இந்த படமும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். குறிப்பாக இவரும் கல்லூரி பருவ காட்சிகளைக் காட்டிலும் பள்ளிப்பருவ காட்சிகளில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
கல்லூரி பேராசிரியராக வரும் எஸ் ஜே சூர்யா அந்த கதாபாத்திரத்திற்கு என்னவெல்லாம் நியாயம் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்து அசத்தியுள்ளார். காட்சிக்குக் காட்சி இவர் காட்டும் முகபாவனைகளும், வசன உச்சரிப்பும் தியேட்டரில் கைத்தட்டல் பெறுகின்றன. இவரைப்போலவே சமுத்திரக்கனியும் ஏழை நடுத்தர அப்பாவாக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார் எனலாம். மிகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் இவர் அதை நிறைவாகவும், நெகிழ்ச்சி ஏற்படுத்தும்படியும் நடித்து இறுதிக்கட்ட காட்சிகளில் கண்கள் குளமாக்கி உள்ளார். சமுத்திரக்கனியும் எஸ் ஜே சூர்யாவும் போட்டிப் போட்டு நடித்துள்ளனர் என்றுகூடச் சொல்லலாம். காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. இவரது கதாபாத்திரம் படத்திற்குப் பெரிய சாதகமாக அமையாவிட்டாலும் பாதகமாகவும் அமையவில்லை. சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்திருக்கும் மிர்ச்சி விஜய், பாலசரவணன், சிவாங்கி, மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக வரும் முனீஸ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி ஆகியோர் படத்திற்குத் தேவையான அளவு நடித்துவிட்டுச் சென்றுள்ளனர். கல்லூரி முதல்வராக வரும் ஜார்ஜ் மரியான் சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பூட்டி சிரிக்க வைத்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டி லட்சுமி சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்து கவனம் பெற்றுள்ளார்.
படத்தின் இன்னொரு நாயகனாகவே இருந்து அதகளபடுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசையில் உருவான அனைத்து பாடல்களும் தியேட்டரை அதிரச் செய்துள்ளது. அதேபோல் தனது ட்ரேட்மார்க் பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு சரியான இடங்களில் சரியான உணர்வுகளைக் கடத்தியுள்ளார். பாஸ்கரன் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்ஃபுல்லாக அமைந்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளது. படத்தின் பெரும்பகுதி கல்லூரியிலேயே நடப்பதால் ஒவ்வொரு பிரேமிலும் மாணவர்கள் நிரம்பிக் காணப்படுகின்றனர். அப்படியான காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் பாஸ்கரன்.
கதையும், காட்சி அமைப்புகளும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய பல படங்களை நினைவுபடுத்தினாலும் அவை ரசிக்கும்படி அமைந்து ஒரு கலகலப்பான படம் பார்த்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாகப் படத்தின் சில காட்சிகள் நண்பன் படத்தை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ளது மட்டும் சற்று பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் அவற்றையெல்லாம் மறக்கச் செய்து ஒரு நிறைவான படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. சம்மர் டைமில் இளைஞர்கள் கொண்டாடுவதற்கான படம் என இதனை நிச்சயம் சொல்லலாம்.
டான் - இளைஞர்களுக்கான டிரீட்