காதலித்து திருமணம் செய்த ஒருவனின் வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசப்பாக மாறுகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்த அவனுக்கு, கடந்த காலத்திற்குச் சென்று தனது தவறுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால்...? இப்படியொரு கதைக்களத்தை நகைச்சுவையைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படமே ‘டிக்கிலோனா’.
தேசிய ஹாக்கி வீரர் ஆகும் கனவில் இருக்கும் சந்தானம், அனாகாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஹாக்கி வீரர் கனவு கைகூடாமல் போக, ஈ.பியில் லைன் மேனாக வேலைக்குச் சேர்கிறார். காதலின்போது இனித்த வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசக்க துவங்குகிறது. அந்த சமயம் டைம் டிராவல் மெஷின் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு ஆராய்ச்சி குழுவைச் சந்திக்கிறார் சந்தானம். அக்குழுவில் உள்ள யோகிபாபு மூலம் 2020இல் தனக்கு நடந்த திருமணத்தை நிறுத்திவிட்டு வாழ்க்கையை சரி செய்ய கடந்த காலத்துக்குச் செல்கிறார். அதேசமயம் கடந்த காலத்தில் இருக்கும் திருமணமாகாத சந்தானத்தை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறார். இருவரும் மாறி மாறி அந்தந்த காலக்கட்ட வாழ்கையை அனுபவிக்கிறார்கள். இதையடுத்து கடந்த காலத்துக்குச் சென்ற ஈ.பி. சந்தானம் திருமணத்தை நிறுத்தினாரா, இல்லையா? நிகழ்காலத்திற்கு வந்த கடந்தகால சந்தானத்தின் நிலை என்னவானது? என்பதே ‘டிக்கிலோனா’ படத்தின் மீதி கதை.
உடல் மெலிந்து காணப்படும் நடிகர் சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடியில் கம்பேக் கொடுத்துள்ளார். இவர் தொடர்ந்து தனக்கு செட்டாகும் கதைகளைக் கவனமுடன் தேர்வுசெய்து நடித்து வெற்றிபெற்று வந்தாலும், அண்மைக்காலங்களில் ‘A1’ படத்தைத் தவிர்த்து மற்ற படங்களில் சந்தானத்தின் காமெடி சுமாராகவே இருந்துவந்தது. அதை தற்போது ஓடிடியில் ரிலீசாகி இருக்கும் ‘டிக்கிலோனா’ படம் மூலம் மாற்றியமைத்துள்ளார். காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் காட்சிகளில் கூட அனுதாபம் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.
வெவ்வேறு டைம்லைன்களில் பயணிக்கும் ஒரு குழப்பமான கதையைத் தெளிவாகவும், காமெடியாகவும் சொன்னதற்கே அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகியைப் பாராட்டலாம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் மனிதனின் நிலை என்னவாகும்? என்ற சோஷியல் மெசேஜை சிறப்பாகவும், ஜனரஞ்சகமாகவும் கூறி கைத்தட்டல் பெற்றுள்ளார். அதேசமயம் படத்தில் பங்குபெற்ற அனைத்து நடிகர்களுக்கும் சரிசமமான ஸ்பேஸ் கொடுத்து அவர்களின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.
நாயகிகள் அனாகா மற்றும் ஷ்ரின் ஆகியோர் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தங்களுக்குக் கிடைத்த ஸ்க்ரீன் ஸ்பேஸ் சிறியதாக இருந்தாலும் அதில் காமெடி, எமோஷனல் என அனைத்திலும் இருவருமே நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர். யோகிபாபு சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல் மூத்த நடிகர் ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் திரையில் தோன்றும்போதெல்லாம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக இவர்களை எல்லாம் தாண்டி ப்ரீ- கிளைமாக்ஸில் வரும் நடிகர் மாறன் காமெடியில் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குத் தனக்குக் கிடைத்த ஸ்பேஸில் சிக்சர் அடித்துள்ளார். அதேபோல் நடிகர் சித்ரா லட்சுமணனும் காமெடியில் கலக்கியுள்ளார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், சேசு, அருண் அலெக்சாண்டர், ஷா ரா, இட்டிஸ் பிரஷாந்த் ஆகியோர் தங்களது பங்குக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உத்வேகம் அளிக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து மறைந்துள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'பேர் வெச்சாலும்' ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைத்துள்ளது. பின்னணி இசை மூலம் காமெடி காட்சிகளை என்ஹான்ஸ் செய்துள்ளார். அர்வி ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஜோமினின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்துக்கு வேகம் கூட்டியுள்ளது.
பொதுவாக டைம் மெஷின் படங்கள் என்றாலே திரில்லர் வகை படங்களே அதிகமாக வெளிவரும். அதில் காமெடி படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் வெற்றிபெற்ற காமெடி படங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அப்படி குறைவான எண்ணிக்கையில் உள்ள படங்களின் வரிசையில் ‘டிக்கிலோனா’ இணைந்ததா என்றால் சிரித்துக்கொண்டே ஆம்! என்று சொல்லலாம்.
டிக்கிலோனா - சிரிப்பு கலந்த சிந்தனை எக்ஸ்பிரஸ்!