
அடல்ட் காமெடி படங்கள் மூலம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஒரு வித்தியாசமான திரைப்படம் பொய்க்கால் குதிரை. தன்னால் குடும்பங்களுடன் ரசிக்கக்கூடிய வகையிலான திரைப்படங்களையும் கொடுக்க முடியும் என்று நம்பி பொய்க்கால் குதிரையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா?
ஒற்றைக் காலுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பிரபுதேவா, தன் ஒரே மகள் ஆழியாவுடன் வசித்து வருகிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சமயத்தில் மகள் ஆழியாவுக்கு தீவிரமான இதயநோய் ஏற்படுகிறது. அதை சரி செய்ய 70 லட்சம் தேவைப்படுவதால் பெரிய தொழிலதிபரான வரலட்சுமி சரத்குமார் மகளை கடத்தி மிரட்டி பணம் வாங்க முடிவெடுக்கிறார் பிரபுதேவா. வரலட்சுமி மகளை பிரபுதேவா கடத்துவதற்கு முன் வேறு யாரோ கடத்தி விடுகின்றனர். பழி பிரபுதேவா மேல் விழுகிறது. இதையடுத்து தன் மேல் விழுந்த பழியை எப்படி பிரபுதேவா தீர்க்கிறார்? தன் குழந்தையின் ஆபரேஷனுக்கான பணத்தை தயார் செய்தாரா? இல்லையா? கடத்தப்பட்ட வரலட்சுமியின் குழந்தையின் கதி என்ன? என்பதே பொய்க்கால் குதிரை படத்தின் மீதி கதை.

அடல்ட் பட இயக்குநர் என்ற பெயரை துடைப்பதற்கான முயற்சியில் பொய்க்கால் குதிரை படத்தை உருவாக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார், அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். தந்தைக்கும் மகளுக்குமான கெமிஸ்ட்ரியை நன்றாக ஒர்க்கவுட் செய்து அதன்மூலம் செண்டிமெண்ட் கலந்த ஒரு திரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர், அதை ஓரளவு ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார். படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் கலகலப்பான காட்சிகளாக நகர்ந்து பின்னர் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகளோடு பயணித்து கடைசியில் திரில்லிங்கான திருப்பங்களுடன் முடிந்து பார்ப்பவர்களை சீட் நுனிக்கு இழுத்து செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அடுத்தடுத்த டிவிஸ்டுகள் சிறப்பாக அமைந்து படத்தை பாசிட்டிவ் நோட்டில் முடித்திருக்கிறன. ஆனாலும் படம் முழுவதும் ஆங்காங்கே வரும் க்ளீஷேவான காட்சிகள் சில இடங்களில் அயர்ச்சியை கொடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. படத்தின் ட்ரீட்மெண்டை குடும்பங்கள் ரசிக்கும்படி அமைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே இப்படத்தை இயக்குநர் இயக்கி உள்ளதால் திரைக்கதையில் புதுமைகளை புகுத்த சற்று தவறியிருக்கிறார். இருந்தும் கிளைமாக்ஸ் பகுதி படத்தை காப்பாற்றியுள்ளது.
ஒற்றைக் காலுடன் பாசமிகு தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிரபுதேவா, ஆங்காங்கே தனது நடிப்பால் கண்கலங்க வைத்து கவனம் ஈர்த்துள்ளார். இவருக்கும் மகள் ஆழியாவிற்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு கலகலப்பூட்டியுள்ளது. அதேபோல் இவர்கள் இடையே இருக்கும் பாசப் பிணைப்பும் பார்ப்பவர்களை பல இடங்களில் நெகிழச் செய்துள்ளது. படத்தில் நாயகி இல்லை. ஆனால் கடமைக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன். வரலட்சுமி சரத்குமார் அலட்டலான தொழிலதிபராகவும் அன்பான தாயாகவும் நடிப்பில் மிளிர்கிறார். குழந்தையை பறிகொடுத்துவிட்டு ஏங்கும் காட்சிகளில் நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். டம்மி தந்தையாக நடித்திருக்கும் சார்பட்டா புகழ் ஜான் கொக்கைன் ஆரம்பத்தில் அனுதாபம் பெற்று பிற்பகுதியில் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். பிரபுதேவாவின் நண்பனாக நடித்திருக்கும் நடிகர் ஜெகன் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக செய்துவிட்டு சென்றுள்ளார்.

பிரபுதேவா மகளாக வரும் பேபி ஆழியா அழகான நடிப்பை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி வந்து செல்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பல்லு ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. டி இமான் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.
ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதையை சிறப்பான டிவிஸ்டுகள் மூலம் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் சிறப்பான திரைக்கதை மூலம் கொடுத்திருந்தால் இப்படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
பொய்க்கால் குதிரை - வேகம் குறைவு!