எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் அறியப்பட்ட இசையமைப்பாளர் தர்புகா சிவா டைரக்டராக அறிமுகமாகியுள்ள படம். ஆட்டோகிராப், ப்ரேமம், 96 பட வரிசையில் பள்ளி பருவ காதலை மையப்படுத்தி ஒடிடியில் ரிலீஸாகியுள்ள இப்படம் வரவேற்பை பெற்றதா..?
பதினோராம் வகுப்பில் மாணவர்கள் காலடி எடுத்து வைக்கின்றனர். இதில் கிஷன் தாஸ்(வினோத்), ஹரிஷ் கே(சைனீஸ்), அம்ரிதா மாண்டரின்(அணு), பூர்வா ரகுநாத்(கேத்தரின்), சரண் குமார்(துரை), ராகுல் கண்ணன்(பிரான்சிஸ்), மஞ்சுநாத்(நவ்ஷாத்), வருண் ராஜன்(ரிச்சர்ட்), சச்சின் நாச்சியப்பன்(டிஜே வட்ஸ்), கெளதம் ராஜ்(சு), ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன்(விக்கி) மற்றும் மற்றொரு வகுப்பில் மீதா ரகுநாத்(ரேகா) ஆகியோர் படிக்கின்றனர். இதில் கிஷன் தாஸ், மீதா ரகுநாத் இருவரும் 7ஆம் வகுப்பில் இருந்தே காதலிக்கின்றனர். இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக அம்ரிதா மாண்டரின் வருகிறார். இவர் கிஷனை ஒரு தலையாக காதலிக்க இதை பிடிக்காத மீதா ரகுநாத் கிஷனிடம் சண்டையிட்டு பிரிந்து விடுகிறார். இதை சரி செய்ய காதல் கடவுளான தர்புகா சிவா வருகிறார். தர்புகா சிவா என்ட்ரிக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களுடன் படித்த மாணவர்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்பதை கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் விவரித்துள்ளது 'முதல் நீ முடிவும் நீ' படம்.
முதல் பாதி பள்ளி பருவ நாட்களையும், இரண்டாம் பாதி ரீயூனியன் நாளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் தர்புகா சிவா. 90ஸ் காலகட்ட பள்ளி பருவ நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். மாணவர்களுக்கு இடையே நடக்கும் சேட்டைகள், காதல், நட்பு, சோகம், கொண்டாட்டம் என அத்தனை உணர்ச்சிகளையும் சரியான கலவையில், சரியான விகிதத்தில் உணர்ச்சிபொங்க ரசிக்கும்படி கொடுத்துள்ளது இப்படம். அதேபோல் ரீயூனியன் நாளில் நடக்கும் சம்பவங்களை ஒரேயொரு இடத்தில் வைத்து எந்த இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு நிறைவான படமாக இப்படம் அமைந்துள்ளது. இருந்தும் படத்தின் நீளத்தில் சற்று கவனமாக இருந்திருக்கலாம்.
வினோத் - ரேகா காதல் படத்துக்கு அடிநாதமாக அமைந்துள்ளது. கிஷனும், மீதாவும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இவர்களது எதார்த்த நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. அதேபோல் சைனீஸாக வரும் ஹரிஷ் கதாபாத்திரம் படத்துக்கு பெரிய பலம். இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக அமைந்துள்ளது. இவருடன் நடித்துள்ள சு என்கின்ற கெளதம் ராஜ் கதாபாத்திரம் சைனீசுக்கு ஈடுகொடுத்து நடித்து திரைக்கதை வேகத்துக்கு உதவி புரிந்துள்ளது. கேத்தரீனாக நடித்திருக்கும் பூர்வா பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துடுக்கான இளைஞராக வரும் வருண் கவனம் பெற்றுள்ளார். அதேபோல் டிஜே வட்ஸ் ஆக வரும் சச்சின் நாச்சியப்பன் இரண்டாம் பாதியில் கலகலப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். இவரது உடல்மொழி அங்கங்கே சிரிப்பை வரவழைக்கிறது. இவர்களுடன் நடித்த மற்ற மாணவர்கள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்துள்ளார். குறிப்பாக படத்தில் நடித்த அனைவருமே நடிப்பில் அறிமுக நடிகர்கள் என்ற உணர்வை தர மறுக்கின்றனர். அதுவே படத்துக்கு மிக பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை உணர்பூர்வமாக அமைந்து படத்துக்கு வலு சேர்த்துள்ளது. சுஜித் சாரங்க ஒளிப்பதிவில் 90ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்.
90களில் ட்ரெண்டிங்கில் இருந்த மைக்கேல் ஜாக்சன், ஏ.ஆர் ரஹ்மானின் எழுச்சி, பாடல் கேசட்டுகள் ஆதிக்கம், ஸ்டைல் ஃபேஷன் மற்றும் பள்ளிப்பருவ நாட்களில் இருந்த விளையாட்டுகள், அக்கால எதார்த்த காதல், உணர்ச்சி மிகுந்த ஊடல், பரீட்சை, நட்பு. காதல். வலிகள் என அத்தனை நாஸ்டால்ஜிக் மெமரிசை தட்டி எழுப்பி நெகிழ்ச்சியான உணர்வை தந்துள்ளது 'முதல் நீ முடிவும் நீ' திரைப்படம்.
முதல் நீ முடிவும் நீ - நாஸ்டால்ஜிக் மெமரிஸ்!