கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து பல கோடி மதிப்பிலான ஆபரணங்கள், காசுகள் ஆகியவை சில ஆண்டுகளுக்கு முன் தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து முதல் முறையாக தமிழில் உருவாகியுள்ள படம் மாயோன். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதே பரபரப்பை இப்படமும் பார்வையாளர்களுக்கு கொடுத்ததா...?
மாயோன் மலையை ஒட்டியுள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் கே.எஸ் ரவிகுமார் தலைமையிலான தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் குழு ஆய்வு செய்கிறது. இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் ஹரிஷ் பெரொடி, சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பக்ஸ் ஆகியோர் கோவிலுக்குள் இருக்கும் ரகசிய அறை பற்றியும் அதனுள் இருப்பவை பற்றியும் கண்டுபிடிக்கின்றனர். அதை எப்படியாவது அரசாங்கத்திற்கு தெரியாமல் கொள்ளையடிக்க இவர்கள் திட்டமிடுகின்றனர். இதை அடுத்து இவர்கள் அந்த ரகசிய அறைக்குள் செல்ல வழி கண்டுபிடித்தார்களா? அதனுள் இருக்கும் புதையலை கைப்பற்றினார்களா? இல்லையா? என்பதே மாயோன் படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதையல் வேட்டை படம், பேண்டசி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. கடவுளையும், விஞ்ஞானத்தையும் இணைத்து இரு தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு படத்தை கொடுத்துள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளரும், கதை வசனகர்த்தா அருள்மொழி மாணிக்கம் மற்றும் இயக்குநர் கிஷோர் ஆகியோர். முதல்பாதி ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து வேகமெடுக்கும் படம் இடைவேளை வரை சீரான வேகத்துடன் பயணித்து இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சில இடங்களில் தட்டுத் தடுமாறி கரை சேர்ந்துள்ளது. விஞ்ஞானத்தையும் கடவுளையும் இணைத்து அதில் சொல்லப்படும் கருத்துக்களும், ஆங்காங்கே தென்படும் சில திருப்பம் நிறைந்த திரைக்கதையும், ரகசிய அறையை கண்டுபிடிக்கும் காட்சிகளும் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது. இருந்தும் இந்த விஷயங்களை தவிர்த்து பல்வேறு சம்பிரதாய காட்சிகளும் படத்தில் நிரம்பி இருப்பதால் பல இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக கோவிலுக்குள் சிபிராஜ் குழு சென்ற பிறகு இவர்களை பயமுறுத்த நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சோதிக்கிறது. இந்த காட்சிகளில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தனக்கான கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு செய்து இருக்கிறார் நாயகன் சிபிராஜ். நடிப்பதற்கு அதிகம் ஸ்கோப் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். வழக்கமான வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெரோடி வழக்கத்திற்கு மாறான வில்லத்தனம் காட்ட முயற்சி மட்டுமே செய்துள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.எஸ் ரவிக்குமார், பக்ஸ், ராதாரவி ஆகியோர் அவர் அவருக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளனர்.
கமர்சியல் பாடல்களை காட்டிலும் பக்தி பாடல்களை சிறப்பாக கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. அதேபோல் பின்னணி இசையையும் சிறப்பாக கையாண்டுள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவில் கோயில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடவுளையும் விஞ்ஞானத்தையும் இணைத்து ஒரு ஃபேன்டஸி திரில்லர் படத்தை கொடுக்க முயற்சி செய்த கதாசிரியர் மற்றும் இயக்குநர் அதை இன்னமும் நல்ல மேக்கிங்கில் தரமாக கொடுத்திருந்தால் இப்படம் இன்னமும் நன்றாக பேசபட்டிருக்கும்.