ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை யதார்த்தத்தோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குநர்.
பண்ணை புரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளோடு வாழ்ந்து வருகிறார். தன்னை போல் இல்லாமல் தன் பிள்ளைகளாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் சேதுபதி, தனது பிள்ளைகளைப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவெடுக்கிறார். இதற்காக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கும் விஜய் சேதுபதியை அவரது முதலாளி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகி விடுகிறார். விஜய் சேதுபதியை நம்பி நிலத்தின் மேல் பணம் போட்ட ஊர்க்காரர்களும் ஏமாந்துவிடுகின்றனர். இதனால் விஜய் சேதுபதி தன் முதலாளியைத் தேடி ஊரை விட்டு ஓடி விடுகிறார். விஜய் சேதுபதியை நம்பி தனியாக நிற்கும் அவரது குடும்பத்தின் நிலை என்னவானது? முதலாளியைத் தேடிச்சென்ற விஜய் சேதுபதி அவரை கண்டுபிடித்து மீண்டும் தன் குடும்பத்தோடு இணைந்தாரா? இல்லையா? என்பதே மாமனிதன் படத்தின் மீதி கதை.
தர்மதுரை படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து தர்மதுரையில் கொடுத்த அதே வெற்றியைக் கொடுக்க சீனு ராமசாமி முயற்சி செய்துள்ள இப்படம், அதில் வெற்றி பெற்றதா என்றால் கேள்விக் குறியே! படம் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் திருப்பம் எதுவும் இல்லாமல் ஃபிளாட்டாகவே சென்று முடிவதால் ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடிய வகையிலான காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிவதால் படத்திற்கு அது பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. மற்றபடி கதாபாத்திர தேர்வு மற்றும் காட்சி அமைப்புகள் பல இடங்களில் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.
குறிப்பாக விஜய் சேதுபதி குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பல இடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்து பார்ப்பவர் கண்களை ஆங்காங்கே கலங்கச் செய்துள்ளது. படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களைச் சிறப்பாக வேலை வாங்கி உள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கதாபாத்திரமாகவே மாரி அதற்கு உயிர் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கு முன் வெளியான படங்களில் கேங்ஸ்டர் ஆகவும், லவ்வர்பாய் ஆகவும் நடித்து கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி இப்படத்தில் தந்தையாக நடிப்பதைக் காட்டிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் எனலாம்.
காட்சிக்கு காட்சி உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நெகிழச் செய்துள்ளார் நாயகியாக நடித்துள்ள காயத்ரி. விஜய் சேதுபதிக்கு மனைவியாகவும், இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்து கவனம் ஈர்த்துள்ளார். சின்ன சின்ன உணர்ச்சிகளுக்குக் கூட சிறப்பான முகபாவனைகளைக் கொடுத்து, நடிப்பதே தெரியாத அளவிற்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கதாபாத்திரம் அவருக்குத் திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குரு சோமசுந்தரம் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. கேரளாவில் டீ கடை நடத்தும் பெண்ணாக வரும் ஜுவல் மேரி, ரியல் எஸ்டேட் முதலாளியாக வரும் ஷாஜி சென் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கே.பி.ஏசி லலிதா, அனிகா ஆகியோர் அவரவருக்கான வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல்களை இன்னமும்கூட சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். மற்றபடி பின்னணி இசையில் உணர்ச்சிகரமான காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு நெகிழச் செய்துள்ளனர்.
சுகுமாரின் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணை புரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்தோடு மட்டும் எடுக்கப்படும் காட்சிகள் எதுவும் இன்றி மிகவும் எளிமையாகவும், ராவாகவும் படத்தைக் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி அதை இன்னமும் சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கலாம்.
மாமனிதன் - சுவாரஸ்யம் குறைவு