Skip to main content

‘தலைவி’: தாறுமாறா..? தடுமாற்றமா..? - விமர்சனம்

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

thalaivi

 

சமீபகால சினிமாவில் பயோபிக் படங்களுக்கு என தனி மவுசு கூடியுள்ளது. அதனாலேயே பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும் படமாக வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பல படங்கள் ரிலீஸிற்கு அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, நரேந்திர மோடி, மன்மோகன் சிங், நடிகை சாவித்ரி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான 'தலைவி' இந்த வெற்றி பட்டியலில் இணைந்ததா..?

 

1960களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நடிகர் எம்.ஜெ.ஆர். படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ஜெயா. சிறுவயதிலேயே எம்.ஜெ.ஆர். உடன் ஜோடியாக நடித்த ஜெயாவின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகின்றன. இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிறது. அந்த சமயம் ஜெயா, எம்.ஜெ.ஆர். இருவருக்குள்ளும் நட்புறவு மலர்கிறது. இது எம்.ஜெ.ஆரின் கேடயமாகச் செயல்படும் ஆர்.என்.வி.க்கு சுத்தமாகப் பிடிக்காததால், சூழ்ச்சி செய்து இருவரையும் பிரிக்க முயல்கிறார். இதையடுத்து எம்.ஜெ.ஆர். ஜெயாவை பிரிகிறார். அதன்பின் ஜெயாவிற்கும் சினிமா வாய்ப்புகள் குறைய எம்.ஜெ.ஆர் முதல்வர் ஆகிறார். காலங்கள் உருண்டோட ஒருநாள் நடன நிகழ்ச்சியில் ஜெயாவை சந்திக்கும் எம்.ஜெ.ஆர். அவரை அரசியலுக்கு வர அழைக்கிறார். ஜெயாவும் அரசியலில் குதிக்க, அவருக்கு எதிராக மீண்டும் ஆர்.என்.வி. வந்து நிற்கிறார். ஆனாலும், ஆர்.என்.வியை சமாளித்து எம்.பி. ஆகி டெல்லி வரை சென்று எம்.ஜெ.ஆரின் அன்பை இன்னும் அதிகமாகப் பெறுகிறார் ஜெயா.

 

இதையடுத்து மீண்டும் ஆர்.என்.வி. சூழ்ச்சி செய்து ஜெயாவை கட்சியிலிருந்தும், எம்.ஜெ.ஆரிடம் இருந்தும் பிரிக்கிறார். எம்.ஜெ.ஆர். மரணமடைந்ததும் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெயா, மீதும் அரசியல் களத்திற்கு வந்து கட்சியைக் கைப்பற்றுகிறார். எம்.எல்.ஏவாகி எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபைக்குள் செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் அடிதடியில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயா, "நான் இனி முதல்வரான பிறகுதான் இந்த சட்டசபைக்குள் நுழைவேன்" எனச் சபதம் செய்கிறார். இதையடுத்து ஜெயா முதல்வரானாரா, சட்டசபைக்குள் நுழைந்தாரா, இல்லையா..? என்பதே ‘தலைவி’ படத்தின் கிளைமாக்ஸ்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேர படமாகச் சுருக்க மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய். அதில் வெற்றி பெற்றாரா என்றால் சந்தேகமே..! படத்தின் மேக்கிங், நடிப்பு மற்றும் வசனங்களில் அதீத கவனம் செலுத்தியுள்ள இயக்குநர் விஜய், வாழ்க்கை கதையிலிருந்த முக்கியமான தருணங்களை சரிவர கோர்க்கத் தவறியுள்ளார். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை, சம்பந்தப்பட்டவரின் கண்ணோட்டத்தில் இல்லாமல், அடுத்தவரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் உருவாக்கியுள்ளார். இது பல நேரங்களில் நிஜத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிறது. எங்கு ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே திரைக்கதையை அமைத்திருப்பது போல சில இடங்களில் தோன்றுகிறது. மற்றபடி ஒரு படமாகப் பார்க்கும்போது திரைக்கதை அமைத்ததிலும், நடிகர்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்ததிலும், வசன உச்சரிப்புகளை வாங்கியதிலும், சரியான கலவையில் காட்சிகளை அழகாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியதிலும் அப்லாஸ் வாங்குகிறார் இயக்குநர் விஜய். இயக்குநர் விஜய்யின் பிளஸ் எதுவென்று இந்தப் படத்தின் மூலம் பளிச்சிட்டுள்ளது. அதை அவர் சரியாகக் கவனிக்கும்பட்சத்தில் இனிவரும் காலங்களில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் விஜய் இணைவதற்குப் பிரகாசமான வாய்ப்புள்ளது!

 

கதை முழுவதும் எம்ஜிஆர், ஆர்.எம். வீரப்பன், ஜெயலலிதா, சசிகலா, கருணாநிதி ஆகியோரையே சுற்றிச் சுற்றி வருவதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வந்த பிற நபர்களின் கதாபாத்திரங்களுக்கு இப்படத்தில் வேலை இல்லை. எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அரவிந்த்சாமி, எம்ஜிஆர் ஆகவே மாற மிகவும் முயற்சி செய்துள்ளார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால் சந்தேகமே! சில காட்சிகளில் எம்ஜிஆருடைய மேனரிசத்தில் அவர் நடிக்க முயற்சி செய்தது டூப் நடிகர்கள் செய்வது போல் இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிப்பை தன் ஸ்டைலில் அட்டகாசமாக வெளிப்படுத்தி சிலிர்ப்பூட்டியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். 

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

நடிப்பு ராட்சசி என பட்டம் தரும் அளவிற்கு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். ஒரு நடிகையாக, அம்மாவுக்கு மகளாக, அரசியல்வாதியாக நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அசால்ட்டாக காட்டி அமர்க்களப்படுத்தியுள்ளார் கங்கனா. குறிப்பாக எமோஷனலான காட்சிகளில் தன்னுடைய முகபாவனைகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள் கண்களைக் குளமாக்கியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அந்தந்த வயதுக்கு உண்டான நடிப்பைச் சரிவரப் பிரதிபலித்து நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். இந்தப் படத்துக்காகவும் கங்கனாவுக்கு விருதுகள் நிச்சயம்! 

 

ஆர்.என்.வியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, கங்கனாவுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் கங்கனாவின் நடிப்பைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வில்லத்தனத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் கங்கனாவை போல் முக பாவனைகளில் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன் காட்டி ஸ்கோர் செய்துவிடுகிறார். ஜெயாவின் உதவியாளராக வரும் தம்பி ராமையா, தனது அனுபவ நடிப்பால் கதைக்கு வலு சேர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சசிகலா கதாபாத்திரத்தில் வரும் பூர்ணா பெரிதாக வசனங்கள் பேசாமலே வந்து செல்கிறார். ஜெயாவின் அம்மா சந்தியாவாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடித்திருக்கும் மதுபாலா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலைகளை நிறைவாகச் செய்துள்ளனர். கலைஞர் கருணாநிதியாக நடித்திருக்கும் நாசர் குரலில் மட்டும் கருணாநிதியை அழகாகப் பிரதிபலித்துள்ளார். நடிப்பில் ஏனோ ஒரு இறுக்கமாகவே தெரிகிறார். எம்.ஆர். ராதா வேடத்தில் வரும் ராதா ரவி திடீரென தோன்றி மறைந்துள்ளார்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது மேக்கிங். அந்த மேக்கிங்கிற்கு விஷால் விட்டலின் ஒளிப்பதிவும், ராமகிருஷ்ணா மற்றும் மோனிகாவின் கலை இயக்கமும் சிறப்பாகச் செயல்பட்டு படம் பிரம்மாண்டமாக வர உதவி புரிந்துள்ளது. குறிப்பாக அந்தக் காலத்து செட் அமைப்புகள், சூழல்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாகக் கையாண்டு தங்களுடைய ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மூலம் அழகாகக் காட்சிப்படுத்தி, ஒரு பிரம்மாண்ட படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் இப்படத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

 

ஜி.வி. பிரகாஷின் ‘கண்கள் ரெண்டும்...’ பாடல் மட்டும் மனதை வருடுகிறது. ஆனால், அவரது பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார்.

 

ஒரு சாதாரண படமாக இதைப் பார்த்தால், ஒரு பெண் எப்படி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அவருடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் போராடி ஜெயித்து, பின் அரசியலிலும் எப்படி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதை உத்வேகம் தரும்படி சிறப்பாகக் காட்சிப்படுத்தி, அதை ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்துள்ளனர். 

 

ஆனால், இது ஜெயலலிதா பயோபிக் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தால் சற்று ஏமாற்றமே...!!!

 

‘தலைவி’ - ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார்...

 

 

சார்ந்த செய்திகள்