'இருட்டு அறையில் பயந்து போய் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ், முரட்டு குத்துக்காகக் காத்திருக்கும் பேய்' - அதிர்ச்சியடைய வேண்டாம், இது படத்தின் இடைவேளையின் போது வரும் வசனம். இதுதான் கதையும் கூட.
"ஏன் உள்குத்தோடயே பேசுற?" "_______ ஒழுங்கா _______யிருந்தா நான் ஏன் உள்குத்தோட பேசப் போறேன்?"
இது ஒரு சாம்பிள் வசனம்தான். இது போல ஒரு நூறு இரட்டை அர்த்த (ஒற்றைதான்) வசனங்களை எழுதிவிட்டு, அவற்றையெல்லாம் பொருத்த, காட்சிகளை எழுதியிருக்கிறார்கள்போல. அதுதான் படம். 'இஅமுகு'வை பொறுத்தவரை நமக்கு இரண்டு சாய்ஸ்கள்தான். ஒன்று, போஸ்டர், டீசர் எல்லாவற்றிலும் பார்த்தவுடனே தெரிந்துவிடுவது போல, இந்தப் படம் இப்படித்தான் இருக்குமென்பதை உணர்ந்து, 'இப்படிலாமா படம் எடுக்குறாய்ங்க? த்தூ...' என்று திட்டிவிட்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிடலாம். அல்லது லாஜிக், கதை, ரசனை, அழகியல் என எதையும் எதிர்பார்க்காமல், படத்தில் வரும் 'அந்த' வகை வசனங்களுக்கு சிரித்துவிட்டு வந்துவிடலாம். வேறு ஏதோ எதிர்பார்ப்போடு சென்று படத்தைப் பார்த்துவிட்டு, ஒழுக்கம், கலாச்சாரம் எக்ஸ்டராவெல்லாம் சிந்தித்துக் குறை கூறுவதில் ஒரு சாதாரண ரசிகருக்கு பலனில்லை. எனவே, 'ஹரஹர மஹாதேவகி' புகழ் சன்தோஷ் பி ஜெயக்குமாரின் இரண்டாவது படத்தை மேலே கூறப்பட்டுள்ள இரண்டாம் மோடில்தான் பார்த்தோம்.
பெண்களை செக்ஸ் பொம்மையாகக் கருதுவது, ஒழுக்கம், காதலின் அர்த்தம், உறவு வரைமுறை, சுய பாலின ஈர்ப்பை கேலி செய்தல், 'குடி' காட்சிகள், இன்னும் என்னென்னவோ, அத்தனையையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பார்க்கத் தயாராகிய நம்மை இவர்களே சொல்லிக் கொள்வது போல 'அடல்ட் ஹாரர் மூவீ'யாகிய 'இஅமுகு' திருப்திப்படுத்தியிருக்கிறதா? (இந்த 'திருப்தி'க்கு வேறு அர்த்தங்கள் எதுவுமில்லை). ஒரு முரட்டு 'பிளேபாய்' ஆன கௌதம் கார்த்திக்கிற்கு பெண் தேடுகிறார்கள். பார்க்கும் பெண்களெல்லோருக்கும் கௌதம் பற்றி முன்பே தெரிவதால் ஏற்கவில்லை. ஆனால், வைபவி ஷாண்டில்யாவுக்கு பிளேபாய் என்பதாலேயே கௌதம் கார்த்திக்கைப் பிடிக்கிறது. இருவரும் பழகிப் பார்ப்பதற்காக, அவர்களது குடும்பங்களே அவர்களை பட்டாயா (தாய்லாந்து) அனுப்புகிறார்கள். துணைக்கு ஷாரா, அவரது கேர்ள் ஃப்ரெண்ட் யாஷிகா ஆனந்த் (இவரும் கௌதம் கார்த்திக்கின் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட்) இருவரும் வர, அங்கு அவர்கள் தங்கும் பங்களாவில், இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத புதுமையான, கொஞ்சம் எசக்கு பிசக்கான பேயிடம் சிக்கிக் கொள்கிறார்கள். பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.
கௌதம் கார்த்திக், பளீரென அழகாக இருக்கிறார். இந்தப் பாத்திரம் அவருக்கு எளிதாகவே பொருந்துகிறது. ஷாரா கத்திக்கொண்டே இருக்கிறார், வெகு சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார். வைபவி, யாஷிகா இருவரும் எதற்காக படத்திற்கு அழைக்கப்பட்டார்களோ அதை சிறப்பாகவே, அதிகமாகவே செய்திருக்கிறார்கள் (தவறாக எண்ண வேண்டாம், இதற்கும் ஒரே அர்த்தம்தான்). நடிப்பில் பாராட்டுவதற்கோ ஏமாறுவதற்கோ இந்தப் படத்தில் எதுவுமில்லை. ஏமாற்றம் யாருக்கென்றால், முழு காமெடி ரைடாக இருக்குமென்றோ அல்லது தெறிக்கவிடும் திகில் படமாக இருக்குமென்றோ நம்பி வந்தவர்களுக்குத்தான். மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், ஜாங்கிரி மதுமிதா, கருணாகரன், ஜான் என வரிசையாக காமெடியன்கள் வந்தும் அந்த அளவுக்கு வேலை செய்யவில்லை (காமெடிதான்). அதுவும் அந்த 'சமையல் மந்திரம்' புகழ் டாக்டரை 'நீங்க வந்தா மட்டும் போதும்' என்று சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போல, திரு திருவென முழிக்கிறார். அதுபோல பேச்சுக்குக் கூட பேயைப் பார்த்து பயம் வரவில்லை. 'பிக் பாஸ்', 'சமையல் மந்திரம்' என சமீபத்திய டிவி ட்ரெண்டுகளைப் பயன்படுத்துவதில் இருந்த கற்பனை வளம், புதிய, ரசிக்கக் கூடிய அடல்ட் காமெடிகளை யோசிக்கவும் இருந்திருக்கலாம். இந்த வகையிலேயே 'சின்ன வீடு', 'நியூ' என சற்று விசயமுள்ள படங்களும் இருக்கின்றன.
இடைவிடாத அடல்ட் வசனங்கள், பாடல்களிலும் தொடர்கின்றன. மற்றபடி பாலமுரளி பாலு இசையமைத்துள்ள பாடல்கள் ஒரு பொருட்டாக நம் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு, கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. படத்தின் கலர் ரிச்சாக இருப்பதற்கும், இந்தப் படம் ஒரு உப்மா படம் ஆகாமல் இருப்பதற்கும் முக்கிய காரணமாக பல்லுவின் ஒளிப்பதிவு இருக்கிறது. பிரசன்னாவின் படத்தொகுப்பு ட்ரெண்டியாக இருக்கிறது, படத்தை சுருக்கமாக முடிக்கிறது, இன்னும் நீளவிட்டிருந்தால் பிரச்சனைதான். தமிழ் படங்கள், சீரியல்களில் பார்த்த, சென்னையிலுள்ள பங்களாவை தாய்லாந்து பங்களா என பெரிதாக நெருடல் இல்லாமல் காட்டும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக படம் திடமாகவே இருக்கிறது.
ஒரு பக்கம், ஒழுக்கம், கலாச்சாரம் என்ற பெயரில் பேசவேண்டியவற்றைக் கூட பேசாமல், தெரியவேண்டியது தெரியாமல் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன. இன்னொரு பக்கம், இது போல வெளிப்படையாகப் பேசுகிறோம் என்று கூறிக் கொண்டு சரியான அணுகுமுறையில், பார்வையில் இல்லாமல் ஏதேதோ பேசப்படுகிறது. கோட்பாடு ரீதியாகவெல்லாம் விமர்சிக்க வேண்டாம், பொழுதுபோக்காகப் பார்ப்போமென்றாலும் கூட, சுவாரஸ்யம் கம்மியான, ஆங்காங்கே சிரிக்கவைக்கக் கூடிய படம்தான் இது. 'அப்புறம் தியேட்டர்ல கூட்டம், விசில், கொண்டாட்டமெல்லாம் இருக்கே, அதெல்லாம் என்ன?'னு கேட்டா, 'ஆமா, கண்டிப்பாக இருக்கிறது. சில வார்த்தைகளைக் கேட்டாலே, சில விஷயங்களைப் பார்த்தாலே பரவசம் அடையும், குதூகலமடையும் பதின் வயது, மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்களின் சத்தம்தான் அது.
இருட்டு அறையில் முரட்டு குத்து - பில்ட் அப் அதிகம், பெர்ஃபாமன்ஸ் குறைவு!