2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ் ரவிக்குமார் தயாரித்து, நடித்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது?
கலாச்சாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் முதியவரான கே.எஸ் ரவிக்குமார், அவரது மகன் தர்ஷன் ஆகியோர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். ரோபோட்டிக் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள தர்ஷனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்து சென்றுவிடுகிறார். சிறிதுகாலம் கழித்து தன் அப்பா கே.எஸ் ரவிக்குமாரை பார்த்துக்கொண்டு பணிவிடைகள் செய்ய ஒரு ரோபோவுடன் இந்தியாவுக்கு வருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ் ரவிக்குமார் போகப்போக குட்டாப்பா ரோபோவுடன் பாசப் பிணைப்புடன் நெருக்கமாகி விடுகிறார். இதற்கிடையே, அந்த வகை ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தன்னுடைய எஜமானரை கொன்று விடுவது தர்ஷனுக்கு தெரியவர, அந்த ரோபோவை எப்படியாவது தன் அப்பாவிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து ரோபோவிடம் இருந்து கே.எஸ் ரவிக்குமார் தப்பித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கூகுள் குட்டப்பா படத்தை பழைய கே.எஸ் ரவிக்குமார் பாணியிலேயே இயக்கி உள்ளனர் அறிமுக இயக்குனர்கள் சபரி, சரவணன் ஆகியோர். பழைய 90ஸ் ட்ரெண்டில் இருக்கும்படியான திரைக்கதையை அமைத்து, அதை இக்கால ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்துள்ளனர். படத்தின் முதல் இருபது நிமிடங்கள் ரசிகர்களை சோதித்தாலும், குட்டப்பா ரோபோ வந்த பிறகு கதை கொஞ்சம் வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. ஆனால் அதனை ரசிக்க ஆரம்பிப்பதற்குள் மீண்டும் அயர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அடுத்த போர்ஷன் வந்துவிடுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட அயற்சிகளை செண்டிமெண்ட் காட்சிகள் ஓரளவு ஈடுசெய்துள்ளதால் படத்தின் இறுதிவரை பார்க்கமுடிகிறது. படத்தின் கதை கேஎஸ் ரவிக்குமாரை சுற்றியே நகர்ந்தாலும், அவருக்கும் ரோபோவுக்கு இடையேயான காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைத்துள்ளன. அதே போல், ஐபிஎல் போட்டிகளில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மேட்சை ஜெயிப்பதை போல, படம் முடியும் தருவாயில் வரும் காட்சிகள் சரியாக ஒர்கவுட் ஆகி படத்தை பாசிட்டிவ் நோட்டில் முடித்துள்ளன. இதற்கு முழுமுதல் முக்கிய காரணமாக கே.எஸ் ரவிக்குமார் மட்டுமே தென்படுகிறார்.
படத்தின் நாயகனாக கே.எஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் நாட்டாமை விஜயகுமார், முத்துவில் வரும் வயதான ரஜினி ஆகியோரை ஆங்காங்கே நினைவுபடுத்தினாலும் கதாபாத்திரத்தோடு ஒன்றி முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இவருக்கும் ரோபோவுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இவரே படத்தை கடைசிவரை தூண் போல் தாங்கி பிடித்து கரை சேர்த்துள்ளார்.
அறிமுக நாயகன் தர்ஷன் தனக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். தர்ஷனின் மாமாவாக நடித்திருக்கும் யோகி பாபு காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். இப்படத்தில் இவரது காமெடிகள் பல இடங்களில் கவுண்டமணி காமெடிகளை நினைவுபடுத்தும் வகையிலேயே இருக்கின்றன. அதேபோல் காமெடியை காட்டிலும் குணச்சித்திர நடிப்பை சிறப்பாக செய்துள்ளார். மனநலம் பாதித்தவராக நடித்திருக்கும் பிராங்ஸ்டர் ராகுல் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே. ஆர்.வி யின் ஒளிப்பதிவு 90ஸ் காலகட்டத்திற்கு நம்மை அழைத்து சென்றுள்ளது.
மொத்தத்தில் படமாக பார்க்கும்போது சற்று ஏமாற்றமே. இருந்தும் கே.எஸ் ரவிக்குமார், ரோபோ குட்டப்பாவின் சிறந்த கெமிஸ்ட்ரிக்காக குழந்தைகளுடன் ஒருமுறை கண்டு ரசிக்கலாம்.
கூகுள் குட்டப்பா - அப்டேட் தேவை