Skip to main content

"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்" - யோகிபாபு

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
bfbfdnbfdbn

 

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தின் 'சம்மர் ஆஃப்  92' நகைச்சுவை படத்தில் நடித்த நடிகர் யோகிபாபு இப்படம் குறித்தும், குணச்சித்திர நடிப்பு குறித்தும் பேசியுள்ளார். அதில்...

 

"சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிக வலிமையானது. அதனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். நகைச்சுவையில் சாதனை படைத்த தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து நம் மனதைக் கவர்ந்துள்ளனர். "ஒண்ணா இருக்க கத்துக்கணும்" படத்தில் கவுண்டமணி அவர்களும், "நீர்க்குமிழி" படத்தில் நாகேஷ் அவர்களும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றன. அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். "நவரசா" ஆந்தாலஜி திரைப்படமே மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளைச் சொல்லும் திரைப்படம். அப்படியான ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்