Skip to main content

"உங்க வேலையை மட்டும் பாருங்க" - ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து எழுத்தாளர் சுரா பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், சமீபத்திய ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள மாறுபட்ட திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த சில மாதங்களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட திரைப்படமாக ‘ஜெய் பீம்’ திரைப்படம் உள்ளது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் இதைவிட பெரிய பெயரையும் புகழையும் இப்படம் பெற்றிருக்கும். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சூர்யாவின் கலையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் ‘ஜெய் பீம்’. சூர்யாவின் வேறு எந்த படமும் பத்திரிகை மற்றும் ஊடகங்களால் இந்த அளவிற்கு கொண்டாடப்படவில்லை. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தொங்கிய காலண்டரில் அக்னி கலசம் இருக்கிறது எனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியும், அன்புமணி ராமதாசும் சலசலப்பை ஏற்படுத்தி மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினர். அந்தக் காலண்டரை நீக்கிய பிறகும் இந்த சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

 

கடந்த ஆண்டு கரோனா லாக்டவுன் காலத்தில் மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்றொரு படம் வெளியானது. அந்தப் படத்தில் நாயகனாக ஃபகத் பாசிலும் நாயகியாக நஸ்ரியாவும் நடித்திருந்தனர். அன்வர் ரஷீத் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். கன்னியாகுமரியில் இருக்கும் ஃபகத் பாசிலை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக கார்ப்பரேட் அளவிற்கு சிந்தித்து சிலர் பயன்படுத்துவார்கள். விஜூ பிரசாத் என்ற பெயரை ஜோஷ்வா என மாற்றி எப்படி அவர் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுப்பார்கள். எல்லா மதங்களும் மதத்தைப் பரப்பும் வேலையை செய்துகொண்டுதான் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தன்னைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்துகொண்ட ஃபகத் பாசில், அவர்களை ஒரு டிவி சேனல் மூலம் அம்பலப்படுத்துவார். இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை ஃபகத் பாசில் வெளிப்படுத்தியிருப்பார். 

 

ad

 

கேரளாவில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறார்கள், அலங்கார வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லம் எப்படி நீங்கள் காட்சி வைக்கலாம் என்று எந்தக் கிறிஸ்தவரும் போர்க்கொடி தூக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர் மற்றும் நடிகை இஸ்லாமியராக இருந்தபோதிலும் அவர்கள் அதைப் பொருட்டாக மதிக்கவில்லை. அந்த மக்கள் கலை படைப்பைக் கலை படைப்பாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு படத்தை தடை செய்ய வேண்டும், படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இதுவரை எந்த சம்பவமும் கேரளாவில் நடந்ததேயில்லை. கேரளாவில் உள்ள மக்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் கலை படைப்பைக் கலை படைப்பாக மட்டுமே பார்க்கின்றனர். அப்படிப்பட்ட அறிவு முதிர்ச்சி நம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஏன் இல்லை. சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். அதைவிடுத்து, மைக்ரோஸ்கோப்பை வைத்து காலண்டரில் உள்ள படம், படத்தின் பெயர் என பார்த்துக்கொண்டிருந்தால் எந்தக் காலண்டரையும் தொங்கவிட முடியாது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குப் பெயர் வைக்கவே முடியாது. எந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். காலத்திற்கு ஏற்றவாறு நீங்கள் மாற வேண்டாமா? கலை படைப்பை சிதைக்காதீர்கள். கலைஞர்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள். கலை கலையாக இருக்கட்டும். உங்களுடைய வேலை என்பது மற்றொரு துறை. மக்களுக்கு நல்லது செய்வதற்கு அந்தத் துறையைக் கவனியுங்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே உங்களுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். மற்றவர்கள் வேலையில் தலையிடாதீர்கள். கேரளாவில் மக்கள் எப்படி பக்குவப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அதேபோல நீங்களும் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்