Skip to main content

60 வயதிலும் பெண்ணின் காலில் விழுந்த சிவாஜி... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

 

Sivaji Ganesan

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். ‘திரைக்குப் பின்னால்’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள். சிவாஜி கணேசனின் நன்றி, விஸ்வாசம் பற்றி நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இதைக் கேட்கும்போது சிவாஜி கணேசனின் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும். 

 

சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.

 

writer sura

 

அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி சார் 200 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

 

பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது  நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். 

 

அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள். இந்த சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பாடம்".

 

 

சார்ந்த செய்திகள்