Skip to main content

மகேந்திரன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த எம்.ஜி.ஆர்... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

mgr

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

" 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' ஆகிய படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் வருகைதந்துள்ளார். அது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டம். எம்.ஜி.ஆர் பேசுவதற்கு முன் மாணவர்கள் சிலர் மேடையில் பேசுகின்றனர். அவர்களுள் ஒருவராக மகேந்திரனும் பேசுகிறார். மகேந்திரன் பேசும்போது மரங்களைச் சுற்றி காதல் டூயட் பாடுவது, புல்வெளிகளில் ஓடி காதல் டூயட் பாடுவது ஆகியவற்றை விமர்சித்து, தமிழ் சினிமா செயற்கையாக உள்ளது எனக் கூறியுள்ளார். மகேந்திரன் பேசிவிட்டு மேடையிறங்கிவிடுகிறார். சற்று நேரம் கழித்து கல்லூரி முதல்வரிடம் சொல்லி மகேந்திரனை கூப்பிடச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். மகேந்திரன் வந்து எம்.ஜி.ஆரைச் சந்திக்கிறார்.

 

உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் எதிர்காலத்தில் அருமையான பேச்சாளராகவும் அருமையான மனிதராகவும் முன்னுக்கு வருவீர்கள் என்று தன் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு மகேந்திரனிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். யோசித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் படத்திலும் இது போன்ற காட்சிகள் இருக்கும். இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர். ஒரு கல்லூரி மாணவன், படங்களில் வருவதை விமர்சித்து செயற்கையாக உள்ளது என்று சொல்வதா என்று நினைத்துக் கோபப்பட்டிருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் அதைக் கையாண்டது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

 

writer sura

 

பின், மகேந்திரன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பத்திரிகையில் நிருபராக வேலைக்குச் சேர்கிறார். தற்போது உள்ளதுபோல இவ்வளவு பத்திரிகையெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது; விரல்விட்டு எண்ணிவிடலாம். எம்.ஜி.ஆர் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அப்படம் குறித்து அறிவதற்காக பத்திரிகையாளர்கள் அவரைச் சந்திக்கச் செல்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், மகேந்திரனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுவிட்டார். நீங்கள் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்தானே... இங்கு என்ன செய்துகொண்டிருக்கீங்க எனக் கேட்டுள்ளார். பத்திரிகையில் நிருபராக வேலை செய்யும் விஷயத்தைக் கூறியவுடன் எந்தப் பத்திரிகை என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். மகேந்திரன் தான் வேலை பார்க்கும் பெரிய அளவில் பிரபலமில்லாத அந்தப் பத்திரிகையின் பெயரைச் சொல்லியுள்ளார். உடனே எம்.ஜி.ஆர், உங்கள் திறமைக்கு ஏற்ற பத்திரிகை அது இல்லையே... வேறு ஏதாவது பத்திரிகையில் முயற்சி பண்ணி பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.

 

பின்னர், மகேந்திரன் வேறு ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்கிறார். நாட்கள் செல்கின்றன... வேறொரு படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆரும் மகேந்திரனும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அப்போது 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நான் நடிக்கும்படி திரைக்கதை, வசனம் எழுத முடியுமா என மகேந்திரனிடம் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். மகேந்திரனும் சம்மதம் தெரிவித்தார். இப்போது லாயிட்ஸ் ரோட்டில் தலைமைக் கழகம் உள்ளதே, அது எம்.ஜி.ஆரின் சொந்த வீடு. அங்குதான் அவருடைய பட நிறுவனமும் இருந்தது. அங்கு மாடியில் திரைக்கதை எழுத மகேந்திரனுக்கு ஓர் அறை ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. அவரும் அங்கு இருந்தே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பிக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல மகேந்திரனிடம் சாப்பிடக் காசு இல்லை. அங்கே எதிரே உள்ள ஒரு மெஸ்ஸில் அவருடைய நண்பருக்கு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கை வைத்து இவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். 

 

திரைக்கதை எழுதி முடித்தபின், பேப்பரில் எழுதிவைத்துள்ள மொத்த திரைக்கதையையும் எடுத்துக்கொண்டு ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்க மகேந்திரன் சைக்கிளில் செல்கிறார். எம்.ஜி.ஆரிடம் போய் திரைக்கதை எழுதி முடித்துவிட்டதைச் சொல்லியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து மாதந்தோறும் பணம் அனுப்பிவிடுகிறார்களா என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். முதலில் மகேந்திரனுக்கு என்ன பணம் குறித்து கேட்கிறார் என ஒன்றும் புரியவில்லை. பின், தங்கள் குடும்பம் நடுத்தரமான குடும்பம் என்றும் தன்னுடைய வீட்டில் இருந்து தனக்கு எந்தப் பணமும் அனுப்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

மகேந்திரன் காரைக்குடி பக்கம் என்றதும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நினைத்துள்ளார். மகேந்திரன் தன் நிலையை விளக்கிச் சொன்னதும், சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள் என எம்.ஜி.ஆர். கேட்டுள்ளார். தன்னுடைய நண்பரின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என மகேந்திரன் கூற, எம்.ஜி.ஆர் மனமுடைந்துவிட்டாராம். அடடா எனச் சொல்லி தலையில் எம்.ஜி.ஆர் கைவைத்ததாக மகேந்திரன் என்னிடம் சொன்னார். திரைக்கதை எழுத வேண்டும் என ஒரு வேலை கொடுத்துள்ளோம். முதலிலேயே அதற்கான பணம் குறித்து நாம் பேசியிருக்க வேண்டுமே... இப்படித் தவறு செய்துவிட்டோமே என நினைத்து எம்.ஜி.ஆர் மிகவும் வருத்தப்பட்டாராம். 

 

இப்ப எதுல வந்திங்க என எம்.ஜி.ஆர் கேட்க, சைக்கிளில் வந்த விஷயத்தை மகேந்திரன் கூறியுள்ளார். நீங்கள் நேராக எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் போங்க... வேற எங்கயும் போயிராதிங்க... அங்கேயே இருங்கள் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். உடனே மகேந்திரன் சைக்கிளில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகம் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒர் உதவியாளர் கணிசமான தொகையை மகேந்திரனிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார். இந்த விஷயங்களை மகேந்திரன் என்னிடம் கூறும்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, எம்.ஜி.ஆர் என்ற அந்த நல்ல மனிதரின் இரக்கக் குணம், பண்பட்ட இதயம் குறித்து அறிந்து என் கண்களும் லேசாகக் கலங்கின."

 

 

 

சார்ந்த செய்திகள்