
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் சத்யராஜ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
திரையுலகில் நடிகர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. பல தடைகள் மற்றும் தோல்விகளைத் தாண்டி, வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து நெடிய போராட்டத்திற்குப் பிறகே இந்த இடத்தை அவர்கள் அடைந்துள்ளனர். அடிமட்டத்தில் இருந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக மேலே உயர்ந்தவர்களில் நடிகர் சத்யராஜ் முக்கியமானவர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், பிரபு, சத்யராஜ் ஆகியோர் அடுத்தக்கட்ட கதாநாயகர்களாக இருந்தனர். சத்யராஜ், நடிகர் சிவகுமாரின் நெருங்கிய உறவினர். ஆரம்பக் காலகட்டத்தில் அவருடைய அரவணைப்பு மற்றும் உதவியால் சில படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் சத்யராஜ் என்ற பெயர் பரவலாக வெளியே தெரியாது. சினிமா சார்ந்த விஷயத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக சில படங்களில் ப்ரொடக்ஷன் உதவி, மணிவண்ணன் படங்களில் கதை விவாதம், தயாரிப்பு நிர்வாக உதவி என சினிமா சார்ந்த பல்வேறு வேலைகள் செய்தார். பின், வில்லனாக பிரபலமாகி கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
சத்யராஜ் அவர்களுக்கும் எனக்கும் இடையேயான முதல் சந்திப்பு வாகினி ஸ்டூடியோவில்தான் நடந்தது. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவாக அந்த ஸ்டூடியோ இருந்தது. அங்கு, சிவகுமார் நடிப்பில் உருவான ‘வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தப் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் நானும் சிவகுமாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நடிகர் சிவகுமாரை பார்ப்பதற்காக சத்யராஜ் பைக்கில் வந்தார். சத்யராஜை கைகாட்டி “சுரா உங்களுக்கு இவரைத் தெரியுமா?” என்று சிவகுமார் என்னிடம் கேட்டார். அந்தச் சமயத்தில் வெளியாகியிருந்த ‘அவசரக்காரி’, ‘குருவிக்கூடு’ ஆகிய படங்களில் வில்லனாக சத்யராஜ் நடித்திருந்தார். இவ்விரு படங்களையும் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் நான் பார்த்திருந்தேன். “அவரை எனக்குத் தெரியும்” என்றேன். உடனே, “இவர் யாருன்னு தெரியுமா?” என என்னைக் கைகாட்டி சத்யராஜிடம் கேட்டார். சத்யராஜ் தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். “இந்த வாரம் ஆனந்த விகடனில் இவரைப் பற்றி வந்திருக்கிறது. வாங்கிப் படி” என சிவகுமார் கூறினார். அப்படியே பேசிக்கொண்டிருக்கையில், “இப்ப என்ன படம் பண்ணிக்கிட்டிருக்கீங்க” என சத்யராஜிடம் கேட்டேன். ‘நூறாவது நாள்’ என்றொரு படம் பண்ணிக்கொண்டிருப்பதாக சத்யராஜ் கூறினார். மேலும், அந்தப் படம் ரிலீசாகும் கட்டத்தில் இருப்பதாகவும் அந்தப் படம் தன்னுடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார். அவர் சொல்லி ஒரு மாதத்திற்குள்ளாகவே ‘நூறாவது நாள்’ திரைப்படம் வெளியாகிவிட்டது.
மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நாயகனாக நடித்த அந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்திருந்தார். படம் நூறு நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. படத்தில் சத்யராஜ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஆங்கில க்ரைம் படங்களுக்கு இணையான படமாக ‘நூறாவது நாள்’ படம் இருந்தது. அதில், சத்யராஜ் நடித்திருந்த கதாபாத்திரம் சத்யராஜுக்காகவே மணிவண்ணன் உருவாக்கியதுபோல இருந்தது. அதுவரை சினிமா வட்டாரத்திற்குள் மட்டும் அறியப்பட்டுவந்த சத்யராஜ் என்ற பெயர், தமிழ்நாடெங்கும் சென்று சேர்ந்தது. மறுவார ஆனந்த விகடனில் சத்யராஜ் புகைப்படம்தான் அட்டைப்படம். நான்கு பக்க அளவிற்கு சத்யராஜ் குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் அட்டைப்படமும் கவர் ஸ்டோரியும் வந்தால் பெரிய விஷயம். அட்டைப்படத்தில் இடம்பெறும் அளவிற்கு சத்யராஜ் நடிப்பு அந்தப் படத்தில் இருந்தது.
இது தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறிய ஒரு பதில் மிகவும் அற்புதமாக இருந்தது. “இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கீங்க... மக்கள் உங்கள் நடிப்பை ரொம்ப பாராட்டியிருக்காங்க... அதுபற்றி கூறுங்கள்” என நிருபர் கேட்டதற்கு, "மாடியிலிருந்து கீழே ஓடிவரும்படி இயக்குநர் மணிவண்ணன் கூறினார். படத்தில் எனக்கு வழுக்கைத் தலை. ஓடிவரும்போது தலையைக் கையால் தடவுங்கள் என்றார். அதை நான் செய்தேன். அந்தக் காட்சியில் எனக்கு வசனமே கிடையாது. ஒரு வார்த்தைகூட நான் பேசியிருக்க மாட்டேன். ஆனால், அந்தக் காட்சிக்கு மக்கள் கைதட்டினார்கள். என்னுடைய திறமைக்காக அவர்கள் கைதட்டினார்கள் என்பதைவிட என்னுடைய நல்ல நேரம் அந்த இடத்தில் தொடங்கிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்" என்றார்.
இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஐயர் ஐபிஎஸ்’ என்ற படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்தார். நான் அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பு அதிகாரி. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்தபோது ஓய்வு நேரத்தில் சத்யராஜுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், முதன்முதலில் சத்யராஜை சந்தித்தது குறித்தும் ‘நூறாவது நாள்’ திரைப்படம் தன்னுடைய கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் கூறியது குறித்தான பழைய நினைவுகளை அவரிடம் நினைவுகூர்ந்தேன். அதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த சத்யராஜ் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இன்றைக்கு கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் அறியப்படும் நடிகராக சத்யராஜ் மாறிவிட்டார். இன்றைக்கும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சத்யராஜை பார்க்கும்போது, அவரது வளர்ச்சியை ஆரம்பக்கட்டத்தில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.