பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஆனந்த கண்ணன், புற்றுநோய் காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். திரைத்துறைப் பிரபலங்கள் பலரோடு நல்ல நட்புறவைக் கொண்டிருந்த ஆனந்த கண்ணனின் திடீர் மரணம் திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், யார் இந்த ஆனந்த கண்ணன் என்பது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின், தன்னுடைய மனைவியின் படிப்பிற்காக மனைவியோடு சென்னை வருகிறார். சென்னையில் பல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு தேடி அலைந்த ஆனந்த கண்ணனுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாக இருப்பதாகக் கூறி தன்னை நிராகரித்ததாக ஒரு பேட்டியில் ஆனந்த கண்ணன் கூறியிருந்தார். பின், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சன் மியூசிக் சேனலில் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய செயற்கைத்தனமற்ற நகைச்சுவையான பேச்சுகள் மற்றும் உடை பாவனைகள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆனந்த கண்ணன் கவனம் பெற ஆரம்பிக்க, அவரது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேரியர் வேகமெடுக்க ஆரம்பித்தது. விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களையும் நேர்காணல் செய்துள்ளார். இதில், அஜித்துடன் செய்த நேர்காணல் பல்வேறு காரணங்களால் ஒளிபரப்பாகவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் முன்னணி விஜே அந்தஸ்திற்கும் உயர்ந்தார். இன்றும் ரசிகர்களின் நினைவில் உள்ள வெகுசில 90ஸ் விஜேக்களில் ஆனந்த கண்ணன் முதன்மையானவர். ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்த ஆனந்த கண்ணன், தன்னுடைய மனைவியின் கல்வி முடிந்த பிறகு மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டார். ஆனந்த கண்ணனுக்கு அவா கண்ணன் என்றொரு மகளும் உள்ளார்.
பின், மரபுக்கலைகளை கற்றுக்கொடுக்க ஏ.கே.டி என்ற நிறுவனத்தை உருவாக்கி மரபுக்கலைகளை பரவலாக்கும் ஒரு முன்னெடுப்பை எடுத்துவந்தார். அதற்காக ஆனந்தக்கூத்து என்ற பாடத்திட்டத்தை உருவாக்கி அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துவந்தார். அவரது மகள் அவா கண்ணன், கரகம் கலையை திறம்படக் கற்று தற்போது சிறப்பாக கரகம் ஆடுவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தன்னுடைய தனிப்பட்ட கலைப்பயணம் தாண்டி, இத்தகைய கலைச்சேவை புரிந்துவந்த ஆனந்த கண்ணனின் மரணம் தமிழ் கலையுலகிற்கு பெரும் இழப்புதான்.