Skip to main content

'இது படம் அல்ல பாடம்'; முதல்வர் தயவு செய்து பார்க்க வேண்டும் - விபி துரைசாமி வேண்டுகோள்!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

​    ​

 

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின்பு பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே கடந்த 11ஆம் தேதி இப்படம் வெளியானது.

 

மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாஜக ஆளும் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் பார்த்துள்ளனர். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி, "இந்த படத்தை தமிழ் நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் பார்க்க வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை தயவு செய்து பார்க்க வேண்டும். இது படம் அல்ல பாடம். ஒவ்வொரு திமுக தொண்டரும் இப்படத்தை பார்த்தால் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்