Skip to main content

விஜய்யின் திடீர் மாற்றம்... காரணம் எஸ்.ஏ.சியா?

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

நடிகர் விஜய், தற்போது அட்லி இயக்கும் பிகில் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ஆம் தேதி தாம்பரத்திலுள்ள சாய்ராம் கல்லூரியின் உள்ளரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் நயன்தாரா மற்றும் ஒரு சிலரை தவிர படத்தில் பணி புரிந்த அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழா நேற்று மாலை சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானது. விஜய், மேடை ஏறியதிலிருந்து முடிவு வரை உற்சாகம் பொங்கப் பேசினார்.
 

vijay speech

 

 

விஜய் நடிக்கத் தொடங்கியபோது முதலில் சில ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் பின்னர் நடித்த காதல் படங்களே அவருக்கு வெற்றியை கொடுத்தன. அந்தப் படங்களில் மென்மையான கதாபாத்திரங்களாக நடித்து வந்தவர் இடையே சில ஆக்‌ஷன் படங்களில் நடித்தார். ஆனால், அவை சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. தொடக்கத்தில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, ப்ரண்ட்ஸ் என விஜய்க்கு வெற்றியை தேடித் தந்தது எல்லாம் லவ் படங்கள்தான். அதேபோல ஷூட்டிங்கிலும் அவருக்கான பகுதி முடிந்தவுடன் அமைதியாக தனியே அமர்ந்துகொள்வார் அல்லது கேரவனுக்கு சென்றுவிடுவார் என்று அவருடன் நடித்தவர்கள் சொல்வார்கள். அப்போதெல்லாம் 'ரிசர்வ்ட் டைப்' என்ற வார்த்தையே விஜயை வர்ணிக்க பெரும்பாலும் பயன்பட்டு வந்தது. படப்பிடிப்பு சமயங்களில் ரசிகர்களை சந்திப்பதிலும் அவர் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை என்றே கூறப்படும். கூட்டத்தை தவிர்த்து தனிமையை விரும்பும் ஒரு நபராகவே இருந்தார் விஜய்.

விஜய்யின் இந்தத் தன்மை பற்றி அவருடைய தந்தை எஸ்.ஏ.சியும் சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். "விஜய்யின் சிறிய வயதிலேயே அவனுடைய தங்கையை இழந்துவிட்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. அப்போதிலிருந்தே அவன் அதிகமாக தன்னை தனிப்படுத்திக்கொள்ளத் தொடங்கினான்" என்று கூறியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் இதனை விஜய் பிரதிபலித்தார். அதிகம் பேசமாட்டார், ஓரிரு பாடல்கள் பாடுவார் என்பதே மேடைகளில் விஜய்யின் செயல்பாடு பற்றிய கமெண்ட்டாக இருந்தது. அப்படி இருந்த விஜய்யா இது என்று எண்ணவைக்கும் வகையில் இந்த 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் முற்றிலும் வேறு ஒருவராக மாறியிருந்தார் விஜய். உற்சாகம், கேலி, கிண்டல், அரசியல் என அவரது பேச்சு அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததது, மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியது. 

அவரது பேச்சின் மூலமாக முற்றிலும் ஒரு எண்டர்டைனராக மாறியிருந்தார். அட்லியை இட்லியின் சூடுடன் ஒப்பிட்டார். 'வீட்டை யார் வேண்டுமானாலும் கட்டலாம், ஆனால் தாலி...' என்று ஷூட்டிங் பிஸியால் தான் கட்டிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கே செல்லாததாக யோகி பாபுவை கிண்டல் செய்தார். கடைசியாக வீஜே ரம்யா அரசியல் சார்ந்த ஒரு கேள்வி கேட்டபோது, கிண்டலாக 'இப்போ உங்களுக்கு ஹாப்பியா' என்று சிரித்துக்கொண்டே அரசியல் பன்ச்சை விஜய் வைத்தார்.

இவையெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டதாகத்தான் இருக்குமென்றாலும் அதை விஜய் டெலிவர் செய்தவிதம் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. விஜய்யின் இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்கவில்லை. 'தலைவா' படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பின் நடந்த ஒரு விருது விழா மேடையில்தான் முதன்முறையாக விஜய் சற்று நீளமாகவும் அழுத்தமாகவும் பேசினார். அவரது பேச்சில் கோபமும் ஆதங்கமும் வெளிப்பட்டது. முன்பே அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கு விஜய் மீதான அரசியல் திட்டங்கள் இருந்தாலும் 'தலைவா' சமயத்தில் நடந்த பிரச்சனை, அதனால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றால் அந்த எண்ணம்  இன்னும் உறுதியானது. விஜய்யை ஒரு தலைவனாக உருவாக்கும் எண்ணம் உறுதி பெற்றதை அதற்குப்பிறகான அவரது பேட்டிகளில் உணரலாம். அப்போதிருந்து விஜய்யின் ஒவ்வொரு மேடைப்பேச்சும் ரசிகர்களை உற்சாகமூட்டுவதாகவும் எதிரில் இருப்பவர்களுக்கு பதில் அளிப்பதாகவும் குட்டிக்கதைகள் சேர்க்கப்பட்டும் சரியாக வடிவமைக்கப்பட்டு இருந்தன.

மெர்சல், சர்க்கார் மேடைகளில் விஜய் பேசிய பேச்சு பிகில் மேடையில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 90களின் ரஜினியை சற்றே நினைவுபடுத்துவதாக இருந்தாலும் உற்சாகம், நகைச்சுவை என ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது விஜய்யின் 'பிகில்' பேச்சு. ஆடியோ ரிலீஸ் மேடைகளோடு நிற்குமா இல்லை அடுத்த கட்டத்துக்கு செல்லுமா? பார்ப்போம். 

 

 

சார்ந்த செய்திகள்