தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் கருணை உணர்வை மையமாக வைத்து உருவாகிய ‘எதிரி’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பெஜோய் நம்பியார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் பெஜோய் நம்பியார் பேசியபோது...
"மக்ரந்த் தேஷ்பாண்டே ஒருமுறை என்னிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூறினார். ‘நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில சமயங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால் அம்மாதிரி வாய்ப்புகளைத் தவிர்ப்பது நல்லது’ என்றார். ஆனால் என் விஷயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. வாழ்நாளின் பொன் தருணங்கள் அவை.
இப்படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, உரையாடல்களை மீண்டும் எழுதினோம். நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்தளவு ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி மொத்த படத்தையும் மேம்படுத்தினார். உதாரணமாக நடிகை ரேவதி அவர்களின் இறுதி வசனத்தை விஜய் சேதுபதிதான் எழுதினார். திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. டைட்டில் கார்டில், திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்" என்றார்.