சர்கார் படத்தை அடுத்து விஜய் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். கடந்த வருட தீபாவளிக்கு சர்கார் வெளியானதுபோன்று, இந்த வருட தீபாவளிக்கு தளபதி 63 என்று சொல்லப்படும் இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்திற்கான ஷூட்டிங் சென்னையில் பல இடங்களில் செட் போட்டு நடைபெற்று வருகிறது. முதலில் பின்னி மில்லில் செட் போட்டபோது, படபிடிப்பு எடுக்க முடியாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் குவிந்ததால் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கே தள்ளிப்போடும் அளவிற்கு போனது. அதன் பின்னர் பிரசாத் ஸ்டூடியோவில் பெரிய அரங்கில் கிரீன் மேட் செட் போட்டு படம் எடுக்கப்பட்டது. படபிடிப்பில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு கைகாட்டுவதற்காக விஜய் வெளியே வந்தார். அப்போது ரசிகர்கள் தொங்கிகொண்டிருந்த இரும்பு வேலி கீழே சாய, அதை ஓடி பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வட சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கும் விஜயை பார்க்க ரசிகர்கள் குவிய, பின்னர் கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்த வேண்டும் என்கிற நிலை நேற்று உருவாகியுள்ளது. இதனால் நேற்று அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.