இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் என பலர் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கிலும், ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியது. இதையொட்டி படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். வெங்கட் பிரபுவிடம், ட்ரைலரில் மங்காத்தாவில் அஜித் பேசிய வசனம் வருகிறது, இது அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்துவதற்காக வைக்கப்பட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த டயலாக் என்னுடையது. இரண்டு பேரையும் நான் தான் சொல்ல வைத்தேன். அஜித் சார் ட்ரைலர் பார்த்துவிட்டு மெசேஜ் பண்ணினார். ட்ரைலர் நல்லாருக்கு, விஜய்க்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் சொல்லிவிடு என்றார். விஜய் சாரும் ட்ரைலர் பார்த்துவிட்டு நலலாயிருப்பதாகச் சொன்னார். அவர் மொத்த படத்தையுமே பார்த்துவிட்டார். அவர் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்” எனப் பேசினார்.
பின்பு அவரிடம் மூன்றாவது பாடலில் விஜய்யின் முகம், டீஏஜிங் செய்யப்பட்டது குறித்து எதிர்மறை விமர்சனங்கள் பெற்றது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலில் விஜய்யை 23 வயது இளைஞனாகக் காட்ட ஆசைப்பட்டேன். விஜய் சாரும் அப்படி மாற்றும் போது, என்னை மாதிரி இல்லாமல் போகிவிடபோகுது, அதைப் பார்த்துக்கோ என்றார். பின்பு டீஏஜிங் செய்து பார்த்த பின்பு, பழக்கப்பட்ட விஜய்யை விடப் புதிதாக ஒரு விஜய் முகம் இருந்தது. ரசிகர்களுக்கு அதை உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்பு அதை சரி செய்தோம். இது எங்களுக்கு ஒரு பாடம் தான். யார் கிட்ட வேண்டுமானாலும் தப்பித்துவிடுவேன். அர்ச்சனாவிடமிருந்து தப்பிப்பது ரொம்ப கஷ்டம். அவர் மிகப்பெரிய தளபதி வெறியர். அவரை ஒத்துக்கொள்ளவைப்பது சிரமமாக இருந்தது.
ட்ரைலரில் பார்த்த தளபதி தான் இறுதி செய்யப்பட்ட ஒன்று. மூன்றாவது பாடலில் வந்த விஜய்யை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கன்னம் ஒட்டி போய், ரொம்ப ஒல்லியாக இருப்பதாக விமர்சனம் வந்தது. உடனே எனக்கு ஒரு பெல் அடித்தது. நாம் ரொம்ப பெரிய முயற்சியெல்லாம் செய்ய வேண்டாம். கொஞ்சம் செய்தாலே போதும் என்று. அதனால் கொஞ்சம் மாற்றினோம். படத்தில் பழக்கப்பட்ட விஜய்யின் முகத்தைப் பார்ப்பீர்கள். முதலில் விஜய் இந்தப் படத்திற்காக க்ளீன் ஷேவ் பண்ண போது, இவ்ளோ அழகான விஜய்யை ஏண்டா மீசையை ஷேவ் பண்ண வைச்ச என என்னை கேவலமா திட்டுனாங்க. இப்ப அதுவே நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. அதனால் ஒருவரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்” என்றார்.