தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவந்தது. பின், இப்படத்திற்குப் புதிய பெயரைத் தேர்ந்தெடுக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு காட்சியளிக்கும் இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது. வழக்கமாக நகரத்து பின்னணியில் ஸ்டைலிஷான படங்களை இயக்கிவரும் கௌதம் மேனன் முதல்முறையாக கிராமத்து பிண்ணனி கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்தது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. மேலும், இந்த போஸ்டரானது நடிகர் தனுஷின் அசுரன் பட பாணியில் உள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.