பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு நடிகர் முகேன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம்!
ஒரு கிராமத்தில் பெரும் பணக்காரராக இருக்கும் பிரபுவின் மகனான முகேன் படிப்பு ஏறாத மாணவராக இருக்கிறார். இவர் 12- ஆம் வகுப்பை 3- வது அட்டெம்ப்ட்டில் பாஸ் செய்து கல்லூரியில் சேர்கிறார். அந்தக் கல்லூரியில் படிக்கும் மலையாள பெண்ணான மீனாட்சி மீது காதல் வயப்படுகிறார். அவர் தன் காதலை வெளிப்படுத்த மீனாட்சிக்கு மலையாளத்தில் காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுக்கிறார். இந்த கடிதம் கொடுக்கப்பட்ட பிறகு பல அதிரடி திருப்பங்கள் ஏற்படுகிறது. இதனால் முகேன், மீனாட்சி காதலுக்கு இடையே விரிசல் ஏற்பட இறுதியில் முகேன் மீனாட்சியை கரம் பிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு கியூட்டான காதல் கதையை ஜனரஞ்சகமான குடும்பப் படமாக ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் கவின். அப்பா மகன் பாசம், கல்லூரி நட்பு, அழகான காதல் என குடும்பத்தோடு ரசிக்கும் படியான படமாகவே உருவாகியுள்ளது. படம் முழுவதும் ஆங்காங்கே நிறைய க்ளீஷேவான காட்சிகள் இருந்தாலும், அவை ரசிக்கும்படி இருந்து அயர்ச்சியை தவிர்த்துள்ளது. இருப்பினும், படத்தில் சில இடங்களில் வரும் அழுத்தம் இல்லாத சென்டிமெண்ட் காட்சிகள் படத்துக்கு சற்று வேகத் தடையாக அமைகிறது.
நாயகன் முகேன் நடிப்பில் அறிமுக நாயகன் என்ற உணர்வைத் தர மறுக்கிறார். இவருக்கும் பிராங்க்ஸ்டர் ராகுலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கலகலப்பாக அமைந்துள்ளன. அதேபோல் சூரி வரும் காட்சிகளும் கலகலப்பாகவும் சென்டிமென்ட் கலந்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. நாயகி மீனாட்சி கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். பாடல் காட்சிகளை விட காதல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் காமெடி மட்டுமே செய்யாமல் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் மாறியிருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் பிரபு அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கதைக்கு ஒரு தூணாக அமைந்துள்ளார். இவருக்கும் முகேனுக்குமான காட்சிகள் படத்தின் ப்ளஸ். சிறிது நேரமே வந்தாலும் தம்பிராமையா மனதில் பதியும்படி கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வழக்கமான வில்லனாக வரும் ஹரிஷ் பிராடி வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார். நாயகனின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் பிரிகிடா கலகலப்பாக நடித்து படத்துக்கு வேகம் கூட்டி உள்ளார்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. கோபி சுந்தர் இசையில் சத்தியமா பாடல் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை காதல் காட்சிகளை சற்றே மெருக்கேற்றவும் செய்துள்ளது.
ஒரு அறிமுக நாயகனின் முதல் படம் குடும்ப ரசிகர்களை சென்றடைவது எந்த அளவு முக்கியமானது என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் இக்கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் முகேன்.
வேலன் - குறும்புக்காரன்!