சமீபத்தில் நடந்த சுஜாதா நினைவாக விருது வழங்கும் விழாவில் இயக்குனர் வசந்தபாலன் சுஜாதா உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்...
“இந்தியன்படத்தில் கமல் நடிப்பதாக முடிவாகிவிட்டது. அப்போது சுஜாதா குமுதத்தில் ஆசிரியராக வேலைப் பார்த்துவந்தார். இப்போ இந்த படத்திற்கு அவர் எழுதுவாரா, மாட்டாரா என்கிற சந்தேகத்துடனே குமுதம் ஆபிஸுக்கு சங்கர் சார், நான் எல்லோரும் சுஜாதாவைப் பார்க்க போனப்போது, அவர் சாதாரணமாக “டைலாக் தானே, எழுதிடலாம். நான் தினமும் 60 பக்கம் எழுதிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னார். வெளியில் வந்ததும் சங்கர் இதை ரொம்போ சிலாகித்து “ஒரு படத்துக்கு 60 சீன் தானே, 2 நாட்களில் எழுதிக்கொடுக்கிறேன்” என்று சுஜாதா கூறியதாக சொன்னார். மிக ஆச்சரியமாக இருந்துச்சு.
நாங்கள் எப்பவும் ஒரு சீனை விவரிச்சு அதைக் கேசட்டில் போட்டு எழுத்தாளருக்கு வசனத்திற்காக அனுப்புவோம். அதுபோல சுஜாதாவுக்கு கொண்டுபோய் கொடுக்கும்போது “என்ன இது”என்று கேட்டார். சங்கர் சார், கதை, டைலாக் எப்படி வரவேண்டும் என்று இதில் இருக்கிறது என்றார். அவர் உடனே “அப்புறம் எதற்கு உங்களுக்கு சுஜாதா வேண்டும்?” என்றுக் கேட்டார். ஒரு காட்சியின் ஒரு வார்த்தையை மட்டும் கொடுங்கள், நான் வசனம் எழுதுறேன்னு சொல்லித் தான் அந்த இந்தியன் படத்தை எழுதிமுடித்தார். முதல் காட்சி ரொம்ப அழகாக இருக்கும். இந்தியன் தாத்தா கொலை செய்துவிட்டு ஒரு தெரு குழாயில் கத்தியைக் கழுவி பெல்ட்டில் வைத்துக்கொண்டுப் போவார். அந்த பெல்ட்டைத்தான் மனோரமாவிடம் தைக்க கொடுத்திருப்பார். அவருடைய எழுத்தின் சின்ன அழகியல் அந்தக் காட்சியில் சேர்ந்ததால் அடுத்தக் காட்சி உருவாக்குவதற்கு அது ஒரு படியாக இருந்தது. லஞ்சத்தைப் பற்றி நாங்கள் ஆயிரம் வசனங்களை எழுதியிருந்தோம். ஆனால், சுஜாதா “மற்ற நாடுகளிலும் லஞ்சம் இருக்கிறது, ஆனால், அங்கெல்லாம் சட்டத்தை மீறுவதற்காகத் தான் லஞ்சம். இங்கு சட்டப்படி நடப்பதற்கே லஞ்சம் கொடுக்கணும்”என்ற அவருடைய கூர்மையான வசனம் முக்கியமானதாக அமைந்தது.
முதல்வன் படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அப்போது முதல்வன் என்ற டைட்டில் மட்டும்தான் எங்களிடம் இருந்தது. நாங்கள் டிஸ்கஷனில் இருக்கும்போது சங்கர் சார் பேய் பிடித்தவர் போல இடைவேளை வரையிலான கதையைச் சொல்லி முடித்தார். அது எப்படி ஒரே நாளில் முதல்வராக முடியும் என்று எல்லோரும் கேட்கும்போது சுஜாதா “ஒரு புது விஷயம் மலர்ந்திருக்கிறது, அதை ஆரம்பத்திலேயே அழித்துவிடக் கூடாது. ஒரு நாளில் எப்படி முதல்வராக்க முடியும், அதை பாக்கிறவர்களை எப்படி ஒத்துக்க வைக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்” என்றார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள்ளாக முதல்வனின் முழுக்கதையும் தயாரானது. திடிரென சில அரசியல் காரணங்களால் முதல்வன் படத்தில் நடிக்கவில்லை. நாங்கள் ரஜினிக்காகவே பார்த்துப் பார்த்து நிறைய சீன்கள் எழுதியிருந்தோம். ரஜினி நடிக்காததால் சொந்த புரடக்ஷனில் படம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் சங்கர் இருக்கிறார்.
சங்கருக்கு மகேந்திரன் மாதிரி ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று ஒரு கனவு இருந்தது. அதற்காக “அழகிய குயிலே” என்ற கதையையும் வைத்திருந்தார். சொந்த புரடக்ஷனில் படம் எடுப்பதால் இந்த “அழகிய குயிலே” படத்தை எடுத்திடலாம் என்று முடிவு செய்துவிட்டார். அப்போது சுஜாதா எங்கள் ஆபிஸ்க்கு வந்தார். படம் என்னாச்சு என்றுக் கேட்டார். ரஜினி நடிக்காததால் 2 1/2 கோடியில் சொந்த படம் ஒன்றை எடுக்கப் போறேன் என்று சங்கர் சொன்னார். அதற்கு சுஜாதா “சங்கர், உங்கள் படங்கள் மூன்று மொழிகளிலும் நல்லா ஓடுது, தமிழ் சினிமாவின் மதிப்பை உயர்த்துகிறவர் நீங்கள். உங்களுக்கு இன்னும் வயதிருக்கிறது, தமிழ் சினிமாவை இந்திய சினிமாவை விட அதிக உயரத்திற்கு கொண்டுசெல்லும் வேலையை செய்துவிட்டு, உங்களில் 80 வயதில் அழகிய குயிலே படத்தை எடுக்கலாம். குயில் செத்துவிடாது” என்றார். சங்கர் சுஜாதாவை அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்த்தார். எனவே, அவர் சொன்னதும் அந்த கதையை ஓரமாக வைத்துவிட்டு முதல்வன் படத்தை யாரை வைத்துவேண்டுமானாலும் எடுக்கலாம் என்று தொடங்கினார். அந்த இடத்தில் இருந்து 700 கோடி பட்ஜட்டில் 2.0 எடுக்கிறவரைக்கும் சங்கரின் மனநிலை அப்படியேதான் இருக்கிறது. அழகிய குயிலே படத்தை எடுத்து அந்த படம் சரியாக போகாமல் தடம் மாறியிருக்கவேண்டிய சங்கரின் வாழ்க்கையை சுஜாதாவின் வார்த்தை சரிசெய்தது.” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.