கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி வெளியே வரும் சில பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் சில மாநிலங்களில் காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...."என்ன ஒரு முட்டாள்தனம். காவல்துறை அவர்கள் உயிரை ஆபத்தில் வைக்கிறார்கள். இப்படியா நீங்கள் அவர்களுக்குக் கைமாறு செய்வீர்கள்..? என்ன அபத்தம் இது. இவரைப் போன்றவர்கள் கிருமி தொற்று வரத் தகுதியானவர்கள். கொடூரம். இந்த முட்டாள்களின் சார்பாக நான் அந்த காவல்துறை அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார். அதில்... "எப்போதும் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. காவல்துறையால் மக்களை அடிக்க முடியாது. இது ஒரு ஊரடங்கு. மக்களை அடிக்குமளவுக்குக் குற்றமல்ல. இது கண்டிக்கப்பட வேண்டியது. பதட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். இதை இன்னும் மோசமாக்க வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.