Skip to main content

"மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை தொடர வேண்டும்" - விவேக் குறித்து வைரமுத்து ட்வீட்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

nfdhsdhbfs

 

தமிழ் சினிமாவின் மூத்த காமெடி நடிகரான விவேக், திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நடிகர் விவேக் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில், கவிப்பேரரசு வைரமுத்து நடிகர் விவேக் உடல்நலம் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"சின்னக் கலைவாணர் 
தம்பி விவேக்
விரைந்து நலமுற்று மீள வேண்டும்;

மனிதர்களின் 
மாரடைப்பைத் தடுக்கின்ற
நகைச்சுவைக் கலைப்பணியை
வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.

வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகர் விவேக் நேற்று (15.04.2021) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?” - கேள்வியெழுப்பும் கவிஞர் வைரமுத்து

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Vairamuthu question Tweet 

வட இந்தியாக்களில் தமிழர்கள் பயணிக்கும் போது இந்தி மொழி தான் தேசிய மொழி என்ற திணிப்பினை இராணுவத்தினர், காவல் அதிகாரிகள் போன்றவர்கள் நமக்கு சொல்வார்கள். அது தமிழர்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தும். இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். சமீபத்தில் கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என்றிருக்கிறார்.

 


 

Next Story

நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கு... - ரஜினிகாந்த்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Rajinikanth's Birthday wishes from Vairamuthu

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் “தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை என்னிடம், நீங்கள் பலம், பலவீனம், பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். உடல், மனம், வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும். வாழ்த்துகிறேன் விரும்பும்வரை வாழ்க!” என்றிருக்கிறார்.