திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாகச் சென்று சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, கோபாலபுரத்தில் சி.ஐ.டி காலனியில் உள்ள கலைஞர் வாழ்ந்த வீட்டில் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,
“உன்
பிறந்தநாளுக்கும்
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது
வணங்குகிறோம் உங்களை.
வாழ்த்துங்கள் எங்களை” என்று கலைஞரை நினைவு கூர்ந்தார்.
அதன் பிறகு தற்போதைய முதலமைச்சர் அலுவலகம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த வைரமுத்து. கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “கலைஞர் 100 கவிதைகள் 100” என்ற நூலினை வெளியிட்டார். இந்நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு, திராவிடர் கழக பொதுச் செயலாளர் திரு. வீ. அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.