Skip to main content

'அய்யனாரு, கருப்பன், இந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு இவர் தான்' - வடிவேலு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

vadivelu speech in chandramukhi 2 audio launch

 

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக 'ஸ்வாகதாஞ்சலி' மற்றும் 'மோருனியே' பாடல் வெளியான நிலையில் நேற்று அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. இவ்விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

வடிவேல் பேசுகையில், ''ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..

 

முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன, மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.

 

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு. என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன் லைனை மட்டும்தான் சொல்வார். இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.

 

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌ இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் '' என்றார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்