தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கான ஸ்டூடியோக்கள் வெகு சில மட்டுமே இருந்து வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில்தான் எடுக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை அருகே அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், அதிநவீன திரைப்பட நகரம் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நவீன வசதிகளுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சென்னையில் அரசு சார்பில் திரைப்பட நகரம் அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதனை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தென்னிந்தியத் திரைப்படத்துறையின் மையமாக விளங்கிய சென்னையில் நவீன சினிமாக்களுக்கான மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்தவும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்கவும் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்கள்.
கழக அரசின் இம்முத்திரைத் திட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, சாத்தியக்கூறுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.