திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 7 ராஜ்யசபா எம்.பி பதவிகளுமே, ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடமே உள்ளது. இதில் தற்போது ராஜ்யசபாவில் எம்.பி களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகிய இருவரது பதவிகளும் வரும் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், இந்த இரண்டு எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதன் வாயிலாக பிரகாஷ் ராஜுக்கு எம்.பி சீட் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக விமர்சனத்தை வைத்து வரும் நிலையில், தெலுங்கானாவில் இருந்து பிரகாஷ் ராஜை ராஜ்யசபா எம்.பி ஆக்கினால் கட்சியின் பலம் கூடும் என சந்திரசேகர ராவ் நினைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் ஏற்கனவே நடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.