இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மாதவன், “ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மேலும் பஞ்சாங்கத்தின் உதவியுடன் தான் இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப முடிந்தது" என்று தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடிகர் மாதவனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மாதவனை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாடகர் டி.எம் கிருஷ்ணா நடிகர் மாதவனின் பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இது ஏமாற்றமளிக்கிறது. இஸ்ரோ கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படி இருக்கையில் எப்படி பஞ்சாங்கத்தையும், இஸ்ரோவையும் ஒப்பிட்டு பேச முடியும்" என்று மாதவனை சாடியுள்ளார்.