Skip to main content

"நாங்களும் இந்திய மக்கள்தான்! எங்களுக்கும் உடனே உதவுங்கள்!" - தங்கர்பச்சான் கொந்தளிப்பு!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
fdgfdgedged

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே பொதுமக்கள் மற்றும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் தங்கர்பச்சான். அதில்... 

 

"விழித்துக்கொண்டோமா!

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரோனா என்கின்ற பேச்சே எங்கும் இல்லை. எந்தக்கட்சி யார் யாருடன் கூட்டணி? யார் யாருக்கு எத்தனை இடங்கள் எனும் செய்திகளை முந்தித் தருவதில் மட்டுமே அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தின. ஒரே ஒரு அரசியல் கட்சிகூட தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று கூறவில்லை. அந்நேரத்தில் வட மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தும் புதிய ஆட்சியை உருவாக்குவதிலேயே அனைவரும் குறியாய் இருந்தனர்.

 

தேர்தலுக்கான நாள் குறித்தவுடனே கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு கரோனா சென்றடையாத ஊர்களுக்கும், கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருக்களுக்கும் பரவ வித்திட்டன. யாருக்கு அதிகப்படியானக் கூட்டம் வருகின்றது என்பதை ஊடகங்களில் நேரலையில் காண்பித்து அதிக வாக்குகளைப் பெருவதிலேயே அனைத்து கட்சியினரும் போட்டிப்போட்டு கூட்டங்களை சேர்த்தனர். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சரிந்தபடி முகக்கவசமோ போதுமான இடைவெளியோ இன்றி நடத்தப்படுகின்ற கூட்டத்தைக்கண்டு அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் புளகாங்கிதம் அடைந்தார்களேத் தவிர மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக் குறித்து சிறிதும் அக்கறையில்லாமலேயே பரப்புரையை முடித்தனர். ஆனால் பள்ளி கல்லூரி மாணவர்களை மட்டும் நோய் பரவும் எனகூறி  இணையவழியிலேயே படிக்கச்சொல்லி வீட்டிற்குள் அடைத்து வைத்தனர். 

 

தேர்தல் பரப்புரை முடிய இரண்டு வாரங்கள் இருக்கும்போதே கரோனா தொற்று தமிழகமெங்கும் பரவும் செய்திகள் மீண்டும் வெளிவரத்தொடங்கின. பல தொகுதிகளில் இதன் மூலம் வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட முடியாமல் போயிற்று எனும் செய்திகளும் ஊடகங்களில் வெளியாயின. அப்போதுகூட ஒருவரும் கூட்டம் கூட்டுவதை நிறுத்திவிட்டு இணையவழியில் பரப்புரை மேற்கொள்ளலாமே எனக்கூறவில்லை. இந்திய ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சரும், உள்துறை அமைச்சரும், இன்னும் பல அமைச்சர்களும் கூட இது குறித்து சிறிதும் கவலைப்படாமல் தேர்தல் பரப்புரையை தமிழகத்தின் எல்லா இடங்களிலும் நிகழ்த்தினர். தேர்தல் ஆணையம் ஏப்ரல் 6 ஆம் தேதி  வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தது. அதுவரை பாதுகாப்புடன் ஊர்திகளில் நின்றுகொண்டு பரப்புரை செய்த தலைவர்களும்,வேட்பாளர்களும் மறு நாளிலிருந்து முகக்கவசம் அணியும்படியும், கபசுரக்குடிநீர் குடிக்கும்படியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால்தான் தேர்தல் ஆணையத்தின்மீது குறை கூறி நீதிமன்றம் கடிந்து கொண்டது. 

 

தேர்தல் முடிந்து நாற்பது நாட்கள் முடிந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலை இவர்கள் எவருமே எண்ணிப்பார்க்காத ஒன்று. நோயினால் இறந்து கொண்டிருக்கும் அப்பாவி குடி மக்களின் உடல்களை வைக்கக்கூட இடமில்லாமல் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அழுகும் நிலைக்கு வந்துவிட்டப் பிணங்கள் பிணவறையில் இடமில்லாமல் வெளியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. உயிரைக்காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் நோய் பரப்பும் கூடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. தொற்றின் மிகுதியால் அளவுக்கும் மீறிய நோயாளிகளால் மருத்துவமனைகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இரவு பகலாக மணிக்கணக்கில் காத்திருந்து உடல்கள் எரியூட்டப்படுகின்றன.  

 

மருத்துவமனைகள் தேடி இரவும் பகலும் மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றனர். அங்கேயும் உயிரைக்காக்கும் ஆக்சிஜன் காற்று கிடைக்காமல் செத்துக்கொண்டிருக்கின்றனர். ரெம்டெசிவிர் மருந்து கரோனா நோயைக்கட்டுப்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த பிறகும்கூட இன்னொரு பக்கம் நாள் கணக்கில் மருந்தை வாங்க இரவு பகலாக பசி பட்டினியுடன் காத்துக்கிடகின்றனர். இவ்வாறான அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் உடனுக்குடன் முந்திக்கொண்டுத் தருபவர்களும் அதே ஊடகங்கள்தான். ஒரு மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்தால் போதும் அதுவரை பிழைத்துக்கொள்ளலாம் என நினைப்பவர்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எவை எவற்றை செய்திகளாக்குவது எனும் புரிதல் கூட இல்லாதவர்களின் கையில்தான்  ஊடகங்கள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகின்றன.

 

கடந்த மூன்று நாட்களாக அனுபவித்துவரும் மன வேதனைதான் இதை என்னை எழுதத் தூண்டுகிறது. கரோனா தாக்குதலுக்குள்ளான எனது இரண்டு உறவினர்கள் மூலமாக தமிழகத்தின் தற்போதைய கொடூரமான சூழலை என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது. என்னை அதிர்ச்சிக்குள்ளாகிய முதல் செய்தி என்னுடைய கிராமத்தில் உறவினர் ஒருவர் கரோனா தாக்கி இறந்தது விட்டார் என்பது. அதன்பின் ஒவ்வொன்றாக இதே போன்ற செய்திகள்  வந்து கொண்டே இருக்கின்றன.

 

எனது ஊரான பத்திரக்கோட்டை போன்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று தாக்கி விட்டால் எவ்வாறு மீள்வார்கள்? பத்திரக்கோட்டை போன்ற தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வியை எழுப்புகிறேன். நோயைக்கண்டறிகின்ற வசதியுடைய மருத்துவமனைகள் அருகில் இல்லை. 20 கி.மீ பயணம் செய்து பரிசோதனை செய்து திரும்பி வந்தால் முடிவு அறிய மூன்று நாட்களுக்கு மேல் ஆகும். ஒரு வேளை தொற்று உறுதியானால் மீண்டும் அதே 20 கி.மீ பயணம் செல்ல வேண்டும். துணைக்கு ஆள் வர மாட்டார்கள். அதற்குள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் அதற்குள் தொற்று பரவியிருக்கும். இவ்வாறான நிலையில்தான் இரு உறவினர்களின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

 

செய்தி கேள்விப்பட்டவுடன் அவர்களை சோதனை செய்ததில் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்பது தெரிந்தது. ஊரில் அவசர ஊர்தி மட்டுமே கிடைத்தது. ஆனால் ஆக்சிஜன் படுக்கைக் கொண்ட மருத்துவமனையில் இடம் சென்னையிலிருந்து சிதம்பரம் வரை எங்குமே கிடைக்கவில்லை. சென்னைக்கு அழைத்து வந்தால் ஒருவேளை எப்படியாவது இடம் பிடித்து விடலாம் என்றாலும் அந்த அவசர ஊர்தியில் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே தான் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என ஓட்டுனர் கூறுகின்றார். இதற்குமேல் நான் கூற வேண்டியதில்லை. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து பிணமாக ஊர்போய் சேர்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கின்றது. நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியும். சாலைகளில் 24 மணி நேரமும் அவசர ஊர்திகளின் விண்ணைக்கிழிக்கும் ஓலங்கள் மட்டுமே கேட்கின்றன. இதனால்தால் தான் அனைவரும் மருத்துவமனை நோக்கி ஓடாதபடி தமிழகம் முழுக்க ஆங்காங்கே மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அரசு பொதுக்கட்டிடங்களில் மருத்துவ மையங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரியிருந்தேன். இப்பொழுது அவ்வாறு உருவாக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் ஆறுதலை அளிக்கின்றது.

 

காலம் தாழ்த்தாமல் உடனடியாக குறைந்தது அனைத்து பஞ்சாயத்துக்களிலும் இக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மறுத்துவர்களைக்கொண்டு இவைகளை உருவாக்க வேண்டும். நோயை உடனே கண்டறியும் பரிசோதனைக்கூடங்களும், நமது மரபுவழி சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தையும் இம்மையங்களில் மேற்கொண்டாலே தொடக்க நிலையிலேயே முக்கால் பகுதி நோயாளிகளை குணப்படுத்திவிட முடியும். மக்கள் பணம் செலவழித்து ஊர் விட்டு ஊர் தாண்டி அலைக்கழிக்கப்படாமல் தொற்று பரவுவதிலிருந்தும் காப்பாற்றிவிட முடியும். ஆங்கில மருத்துவர்கள் போல் இம்மருத்துவர்கள் நகரங்களில்தான் மருத்துவம் செய்வேன் கிராமங்களில் பணிபுரிய மாட்டேன் என மறுக்க மாட்டார்கள். இம்மையங்கள் உருவாக்குவதால் மருத்துவமனை தேடி ஓடுபவர்கள், ஆக்சிஜன் தேடி ஓடுபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறையும்.

 

உலகிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்த அமெரிக்க  அரசு தொடர்ந்து இயங்கி நம்பிக்கையுடன் போராடி ஐந்து வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் இறங்கி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகப்போகின்றது. நாம் எப்பொழுது தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் நிலைக்கு வருவோம். இனி ஒருவேளை அடுத்தடுத்து பெருந்தொற்றுக்கள் உருவானால் அவைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. மாநில அரசுகள் மாத்திரமே நோயை எதிர்த்துப்போராடி மீண்டு விட முடியுமா? இம்மக்களுக்கு இதைக்காட்டிலுமா ஒரு பேரிடர் நேர்ந்து விடப்போகின்றது. இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பேரிடர் ஆணையம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றது? ஒரு வேளை செயல்பட்டுக்கொண்டிருந்தால் நாங்களும் இந்திய மக்கள்தான்! நாங்களும் மற்ற மாநிலங்களைபோல்தான் வரிப்பணம் செலுத்துகின்றோம்! எங்கள் மாநில அரசுக்கும் உடனே உதவுங்கள். 

 

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தொற்று பரவி விட்ட நிலையில் அச்சத்தை எல்லாம் மறைத்துக்கொண்டுதான் மக்கள் வாக்களித்தார்கள். எப்பொழுதும்போல் அடுத்த நாளே வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் இந்த புதிய ஆட்சி அப்பொழுதே அமைந்திருக்கும். நிலைமை இவ்வளவு முற்றியிருக்காது. இணையவழி பரப்புரையை மேற்கொள்ளத் தவறிய தேர்தல் ஆணையம் அடுத்ததாக இன்னொரு  தவறையும் செய்தது. மற்ற மாநில தேர்தல் முடிவை காரணம் காட்டி 25 நாட்கள் வாக்குகளை எண்ணாமல் இருந்த அந்த வேளையில் காபந்து அரசு முனைப்பாக செயல் படாமல் போயிற்று. கரோனா பரவலால் மக்கள் செய்வதறியாமல் தத்தளித்தார்கள். 

 

ஒவ்வொரு நாளும் பெரும் அச்சத்துடனும், வேதனையுடனும், மனப்போராட்டத்துடனும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு புதிய திமுக அரசின் நடவடிக்கைகளும் செயல் திட்டங்களும் தெம்பை அளித்திருக்கின்றன. ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் அனைத்து நாடுகளிலிருந்தும் ஒப்பந்தப் புள்ளிகளைக்கேட்டு தடுப்பூசிகளை நேரடியாக வாங்க முடிவெடுத்திருப்பது ஒன்றே இதற்கு சாட்சி. அத்துடன்  2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் 2000 தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் என அரசு மருத்துவமனைகளின் பணிக்கு நியமிக்க முடிவெடுத்துள்ளதுள்ள செய்தி மிக முக்கியமானது. தமிழகமெங்கும் படுக்கைகளையும் ஆக்சிஜன் படுக்கைகளையும் விரிவு படுத்துவதும், தமிழ்நாடு முழுமைக்கும் அந்தந்த பகுதிகளுக்கும் தனித்தனி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நியமித்து இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்படுவதும், அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களடங்கிய குழுவை நியமித்துள்ளதும் மக்களுக்கு மேலும் நம்பிக்கையையும் நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.  நோயை குணப்படுத்த மிக முக்கியமானது நம்பிக்கைதானே.... நம்புவோம்!

 

தங்கர் பச்சான்"

 

எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சானை அறிவித்தது பாமக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Film director Thangar Bachan announced as CM candidate for Cuddalore Parliamentary Constituency

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக வேட்பாளராக கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் பச்சான்-லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு 9வது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இவரது தந்தை மரபு வழி தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் தங்கராசு பின்னர் இவரது பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டார். இவர்  திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று, ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று திரைப்பட கலையை அறிந்தவர். இவர் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆராய்ச்சி செய்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாக உள்ளது. இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இவர் இயக்கி நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சானுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக தங்கர் பச்சானை வேட்பாளராக அறிவித்துள்ளது.