கரோனா பரவல் நெருக்கடி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. அவை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்த வகையில், கோயம்புத்தூரில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், இது தொடர்பாக ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள் திறப்பதற்கு இருந்த தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீக்கத்திற்கு நன்றி தெரிவித்து ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு கடந்த 17ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது. அதில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாகத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் கோயம்புத்தூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களது கோரிக்கையைக் கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது கோயம்புத்தூர் மாநகரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என அரசாணை வெளியிட்டிருப்பது தமிழ் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.