ஆல்ஃப்ரட் காந்த்
நேற்று தமிழ் திரை இசையுலகத்துக்கு ஒரு சோகமான நாள். இன்று உலகமே கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வளர்த்து உருவாக்கி நமக்குத் தந்த அவரது தாயார் கரீமா பேகம் மரணமடைந்தார். அவரது துயரை தமிழ் திரைப்பட இசையுலகம் பகிர்ந்து கொண்ட அதே வேளையில் இன்னொருவரின் மரணம் குறித்தும் பல இசையமைப்பாளர்களும் மிகுந்த சோகத்துடன் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். "இசையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு" என்று சந்தோஷ் நாராயணனும், "சித்தப்பா... ஒரு திறமையான இசை ஆசிரியரை இழந்துவிட்டோம்" என்று ஜஸ்டின் பிரபாகரனும் கூறியிருக்கிறார்கள். இன்னும் பல இசையமைப்பாளர்களும் இசைக்கலைஞர்களும் அவர் குறித்து எழுதியிருந்தனர். அவர், இசைக்கலைஞர் ஆல்ஃப்ரட் காந்த். கரோனா, இந்த நல்ல கலைஞரின் உயிரை பறித்துக்கொண்டது.
'ஆல்ஃபி' என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஆல்ஃப்ரட் காந்த் குறித்து இசையமைப்பாளர்கள் சத்யா மற்றும் அருள்தேவ் இருவரிடமும் பேசினோம். "பார்த்திபன் சாரின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்காக வெளிநாட்டிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்து பணிபுரிந்தபோது, ஆல்ஃபிதான் நோட்ஸ் எழுதிக்கொடுத்து, அவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்றுவதில் மிகுந்த உதவியாக இருந்தவர். அவருக்கு இசையில் மிகப்பெரிய ஞானம் உண்டு, பல விஷயங்கள் தெரிந்தவர். தெரிந்த அனைத்து விஷயங்களையும் பிறருக்குத் தயக்கமே இல்லாமல் கற்றுக்கொடுத்தவர். அவர் வந்தால் அந்த இடமே கலகலக்கும். அவ்வளவு இசை அறிவு இருந்தும் அதை அவர் பணமாக்கவில்லை. மருத்துவமனையில் இருந்தபோது தினமும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானது. சிரமப்பட்டு நண்பர்களின் உதவியுடன் சிகிச்சை தந்தார்கள். ஆனாலும் உயிரை காப்பாற்றமுடியவில்லை" என்று மிகுந்த துயருடன் பேசினார் இசையமைப்பாளர் சத்யா.
ஆல்ஃபி - சந்தோஷ் நாராயணன் - டெல்ஃபீ
"மதுரையிலிருந்தே நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குப் பேசிப் பேசித் தீராத பல விசயங்கள் இருந்தது. இசை குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசுவோம். ஆல்ஃபி, நம்ம மியூசிக் டைரக்டர்ஸ் பலரோட குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுக்கும் மாஸ்டரா இருந்தார். ஹாரிஸ், சந்தோஷ், சத்யா மற்றும் என் குழந்தை உள்பட பலரும் பல்வேறு காலகட்டங்களில் அவரிடம் இசை கற்றுக்கொண்டார்கள். சினிமா உலகத்தில் கொஞ்சம் கூட தந்திரமில்லாத, சூதுவாது இல்லாத ஒரு நல்ல உள்ளம் ஆல்ஃபி. அவரது தந்தை ஃப்ரெட்ரிக் மதுரை கீழவாசல் தேவாலயத்துக்கு பல பாடல்களை உருவாக்கித் தந்துள்ளார். அவரும் எக்கச்சக்கமான பக்திப் பாடல்களை உருவாக்கியுள்ளார். இவ்வளவு கலகலப்பான, நல்ல மனசு கொண்ட ஆல்ஃபி, இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவார்னு நினைக்கல. நேற்று அதிகாலையே எனக்கு விழிப்பு வந்தது. ஆல்ஃபி நினைப்பாவே இருந்தது. 'நான் கரோனாவை ஜெயிச்சுட்டேன், எமனை ஜெயிச்சு வந்துட்டேன்'னு தன்னோட சத்தமான சிரிப்போடு ஆல்ஃபி சொல்வது போல ஒரு பிரம்மை. எல்லாத்தையும் பொய்யாக்கும்படி மதியம் அவரோட மரண செய்தி வந்தது" என்று அவரது நினைவுகளை பகிர்ந்தார் இசையமைப்பாளர் அருள்தேவ்.
ஆல்ஃப்ரட் காந்த்தின் மகன் டெல்ஃபீ ஒரு கிட்டாரிஸ்ட். பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றுகிறார். இளம் வயதிலேயே மிகுந்த திறமை வாய்ந்த இவர், தனது தந்தை அனைவரிடம் பெற்ற அன்பையும், மிகப்பெரிய வெற்றியையும் பெறுவார் என மிகுந்த நம்பிக்கையுடன் ஒரே குரலில் இருவரும் கூறினர். அது நடக்கவேண்டும், ஆல்ஃபியின் ஆன்மா அமைதிகொள்ள வேண்டும்.