இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிற்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.
அதேபோல் ஷூட்டிங் இல்லாத காரணத்தால் வருமானமின்றி கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கும் திரையுலகினர் நிதியுதவி அளித்துவருகின்றனர். மேலும் வேலையின்றி, வருமானமின்றி கஷ்டப்படும் ஏழை மக்களுக்குத் தமிழ்நாடு அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்துவருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா வேலையின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவருகிறார். நேற்று (09.06.2021) மட்டும் 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.