Skip to main content

“சிறந்தவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” - சிவகார்த்திகேயன் அட்வைஸ் 

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
sivakarthikeyan speech in amaran promotional meet

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்க கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் பாடம் ‘ஹே மின்னலே...’ வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று(28.09.2024) இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் வருகிற தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலேசியாவில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ் குமார், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நிச்சயம் நல்ல அனுபவத்தை கொடுக்கும் படமாக அமரன் இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரத்துடன் உங்களை தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். அதற்கான அத்தனை உழைப்பையும் படத்தில் போட்டுள்ளோம்” என்றார். அதைத் தொடர்ந்து தொகுப்பாளர், “எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிவகார்த்திகேயன், “நானே வந்துவிட்டேன் அவர்கள் வர மாட்டார்களா? நான் ரொம்ப தைரியமான ஆள் கிடையாது. எல்லாத்துக்கும் அதிகம் பயப்படுவேன். முதலில் நான் மேடை ஏறும்போது கை நடுக்கத்துடன்தான் மைக்கில் பேசுவேன். முன்னேற வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. 

ரொம்ப சிறந்தவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, வேலையை கொஞ்சம் சரியா செய்தால்கூட மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் மக்களிடையே நான் பார்த்து வியந்த விஷயம் இதுதான். கொஞ்சமாக முயற்சி செய்தால் அவர்களே கை தட்டி தூக்கி விடுவார்கள். இதை உணர்ந்ததால்தான் இப்போது சொல்கிறேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்