Skip to main content

”தண்ணியோட கொண்டு வந்துறாதீங்கனு சொன்னார்” - கமலுடனான சந்திப்பு அனுபவம் பகிரும் திருமூர்த்தி

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

 Singer Thirumoorthy

 

நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி, விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த ‘பத்தல பத்தல’ பாடலைப் பாடி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோ கமல் கவனத்திற்கு சென்ற நிலையில், திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் திருமூர்த்தி முறையாக இசை கற்ப ஆகும் செலவையும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், கமலுடனான சந்திப்பு அனுபவத்தை நக்கீரனுடன் ஸ்டூடியோவுடன் திருமூர்த்தி பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு... 

 

”பத்தல பத்தல பாடலைப் பாடி நான் வெளியிட்ட வீடியோ இரண்டு நாட்களிலேயே ரொம்பவும் வைரலாகிவிட்டது. திடீரென கமல் சார் ஆபிஸில் இருந்து போன் செய்து நீங்க நாளைக்கு வந்து கமல் சாரை மீட் பண்ண முடியுமா என்று கேட்டார்கள். அன்னைக்கு நைட்டே ஊரில் இருந்து கிளம்பினேன். மறுநாள் அவரை சந்தித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. ”நீங்க பாடிய காட்சியை பார்த்தேன். எதுல வாசிச்சீங்க” என்று கமல் சார் கேட்டார். ”ப்ளாஸ்டிக் குடத்துல வாசிச்சேன் சார்” என்று சொன்னதும் ”அவர் வாசிக்கிற மாதிரி ஏதாவது இன்ஸ்ட்ருமெண்ட் கொண்டுவாங்க” என்றார். பின்னர் உடனே, ”பார்த்து தண்ணியோட கொண்டுவந்துற போறீங்க” என்றார். 

 

முறையா மியூசிக் கத்துக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. கமல் சாரை சந்திப்பேன் என்பதையே நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்குள் நான் மியூசிக் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இன்னொரு ஆச்சர்யத்தையும் கொடுத்துவிட்டார். ஜூலை 11ஆம் தேதியில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்கூலுக்கு போக இருக்கிறேன்.

 

எனக்கு சின்ன வயதாக இருக்கும்போது ஊரில் ரேடியோவில் எப்போதும் பாடல் ஓடிக்கொண்டே இருக்கும். அதைக் கேட்டு, சரி நாமும் பாடிப்பார்க்கலாமே என்று பாட ஆரம்பித்தேன். ரஹ்மான் சார் ஸ்கூலுக்குள் போனதுமே எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. இதுவரை முறையாக எனக்கு பாடத்தெரியாது. நான் பாடுவதில் தவறு இருந்தாலும் சிலர் சொல்லமாட்டார்கள். தற்போது முறையாக கற்றுக்கொள்ளும்போது நம்முடைய தவறுகளையும் தெரிந்துகொள்ளலாம். அங்க உள்ள போனதுமே சரி நமக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது. 

 

எல்லா வகை பாடல்களையும் பாட ஆசைப்படுகிறேன். எனக்கு மியூசிக் ஜானரெல்லாம் தெரியாது. ஷோ பார்த்துதான் ஜானர், பல்லவி, சரணம் என்ற வார்த்தைகளெல்லாம் எனக்குத் தெரியும். அதனால் எல்லா வகையான பாடல்களையும் கற்றுக்கொண்டு பாட ஆசைப்படுகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்