Skip to main content

"கோயம்பேட்டில் சக மாற்றுத்திறனாளி ஒருவரை நான் சந்தித்த அந்த தருணம்..." - நெகிழும் ‘அண்ணாத்த’ பாடகர் திருமூர்த்தி! 

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Singer Thirumoorthi

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா சாமி...’ என்ற ஹிட் பாடலைப் பாடிய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"சினிமாவில் பின்னணி பாடகர் அந்தஸ்து எனக்கு கிடைத்தது ஒரு வீடியோவினால்தான். ஃபேஸ்புக்கில் வைரலான என்னுடைய வீடியோவைப் பார்த்து இமான் சார்தான் சினிமாவில் பாட முதல் வாய்ப்பு கொடுத்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் அவரால் கிடைத்தவைதான். ஒரு பாடல் பாட வேண்டும் என்று இமான் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. பாடும்போது ‘அண்ணாத்த’ படத்திற்குத்தான் பாடுகிறோம் என்று எனக்குத் தெரியாது. பாடி முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் படத்திற்கு நீங்கள் பாடியிருக்கீங்க என்று இமான் சார் சொன்னார். பின்பு, ரஜினி சார் பாட்டு கேட்டுவிட்டு ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டு தெரிவித்ததாகவும் வீடியோ மேக்கிங்கின்போது இமான் சார் சொன்னார்.

 

நான் முறைப்படி சங்கீதம் கற்றதில்லை. சின்ன வயதிலிருந்தே கேட்கிற பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி பயிற்சி எடுப்பேன். எஸ்.பி.பி. அவர்களும் முறையாக சங்கீதம் கற்றவரில்லை. சங்கீதம் கற்காமல் பாடல் பாடுவதில் எனக்கு ரோல் மாடல் அவர்தான். ‘அண்ணாத்த’ படத்தில் பாடல் பாடிய விஷயம் தெரிந்ததும் எங்கள் ஊர் நொச்சிப்பட்டியில் அனைவரும் சந்தோசப்பட்டாங்க. சூப்பர் ஸ்டார் படத்துல பாடுறது ரொம்ப பெரிய விஷயம் என்று நிறைய பேர் பாராட்டினார்கள். ‘வா சாமி...’ பாடல் பதிவு முடிந்த பிறகு, பாடலாசிரியர் அருண் பாரதி ஃபோன் செய்து, "என்னுடைய வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடியிருக்கீங்க. இந்தப் பாடலில் உங்களுடைய பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது" எனப் பாராட்டினார். 

 

ரஜினி சார் படத்துல பாடினதையே பெரிய சாதனையாக நினைக்கிறேன். இதைவிட பெரிய சாதனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ரஜினி சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. திருமூர்த்தி எப்படி இருக்கீங்க என்று அவர் என் பெயரைக் கூறுவதைக் கேட்டாலே எனக்குப் பெரிய விஷயமாக இருக்கும். 

 

ஒருநாள் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி ஒருவரை கோயம்பேட்டில் சந்தித்தேன். அவருடன் பேசும்போது, ‘வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு உதாரணமாக நீங்க இருக்கீங்க. உங்களை சந்தித்தது பெரிய விஷயம்’ என்றார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக அது இருந்தது".

 

 

சார்ந்த செய்திகள்