பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு கலங்காதவர்களையும் கலங்க வைத்திருக்கிறது. ஒரு நீண்ட அழகிய கனவு திடீரென முறிந்தது போல திகைத்து நிற்கின்றனர் தமிழ் திரையிசை ரசிகர்கள். இந்த நேரத்தில், எஸ்.பி.பி. பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஹார்லிக்ஸ் டைம்' என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன...
"நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நான் ஒரு சாதாரண பாடகன்தான். எனக்குப் பாடுவதில் உள்ள சூட்சமம் தெரியும். அதுதான் வித்தியாசம். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் பாடுவேன் என்பது தெரியாது. எனக்குப் பிறகு பல பாடகர்கள் வருவார்கள், ஏன் இப்போதே பலர் வந்துவிட்டார்கள். ஆனால், நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். என்னைப் போல இத்தனை மொழிகளில் வாய்ப்பும் இத்தனை பேரின் அன்பும் அவங்க எல்லோருக்கும் கிடைப்பது கடினம்.
வாழ்க்கையை நான் ரொம்ப ரசிச்சு வாழ்றவன். ஒரு மனுசனா எனக்குக் கிடைச்சிருக்க பொறப்பு என்பது பெரிய விஷயம். அதை நான் ரொம்ப கொண்டாடுறேன். ஒன்னு மட்டும் நான் மறக்கவே மாட்டேன், இந்த கோதண்டபாணி என்பவர் இல்லைன்னா இந்த எஸ்.பி.பி. கிடையாது. நான் பல மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட வருஷக்கணக்குல நின்னு பாடிக்காட்டி வாய்ப்பு கேட்டுருக்கேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே தவிர யாரும் வாய்ப்பு தரல. ஆனா, இவரு எங்கயோ நான் பாடுனதை கேட்டுட்டு என்னை தேடி வந்து "நீ சினிமால பாடுறியாயா, நல்லா வருவயா, முப்பது வருஷமாவது பாடுவ"ன்னு சொல்லி கூப்பிட்டார். நான் கூட யாரோ நம்மள காலை வாருறாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா, அவரு சும்மா வெறும் வார்த்தையாக இல்லாம தீர்க்க தரிசனமாக சொன்னார்.
எனக்காக பலர்கிட்ட, 'நல்ல பையன், நல்லா பாடுவான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டார். அதை என்னால மறக்கவே முடியாது. இந்த பிறப்பு என்னோட அப்பா, அம்மா கொடுத்தது. என்னோட அப்பா ஒரு நல்ல இசைக்கலைஞர், நல்ல மனிதர். அவரோட ஜீன்ஸ் எனக்குள்ள இருக்கு. இன்னும் பல நண்பர்கள் எனக்கு உதவுனாங்க. எனக்கு உதவிய முக்கியமானவர்கள் பலர் இப்போ இல்லை என்பதுதான் எனக்கு வருத்தமே. இப்படி, என் மேல் அன்பு கொண்டவர்கள் எல்லோரும் இருக்கணும். எனக்கு வாழ்க்கைன்னா ரொம்ப பிடிக்கும். யாருக்கும் மரணம் வர கூடாது. எப்பவும் எல்லோர் கூடவும் இருக்கணும். ஆனா, அது முடியாத விஷயம். ஏன்னா, இது நம்ம டைரக்டர்கள் எழுதுற திரைக்கதை இல்லை. மேல ஒருத்தன் எழுதுற திரைக்கதை."
அந்த நேர்காணல்...