நடிகர் சிவா நடந்தால், நின்றால், பேசினால், சிரித்தால் என்று அவர் எது செய்தாலும் காமெடியாகவே பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட சிவாவிற்கு நடிகர் ரஜினி, சிம்புவைப் போன்ற ஒரு மறுபக்கம் இருக்கிறது. அதுதான் ஆன்மிகம். சிவா, நடிகர் அஜித்துக்கு நெருக்கமானவர் என்பது பலரும் அறிந்ததே. அஜித் திருப்பதிக்கும் சென்னையிலுள்ள சாய்பாபா கோவில் ஒன்றுக்கும் அடிக்கடி செல்பவர். சிவா, திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்வாராம். சிவன் பக்தரான சிவா, தனது நெருங்கிய நண்பர்களுக்கு ருத்ராச்சம் போன்ற ஆன்மிக விஷயங்களை அன்பளிப்பாகத் தருவாராம். அப்படித்தான் பிரேம்ஜிக்கு ஒரு முறை பரிசளித்தார். மவுண்ட் ஸாஸ்தா என்று தெரிவித்துள்ளார்.
சிவாவின் ட்விட்டர் ப்ரோஃபைலில் கூட ஒரு மலையின் புகைப்படத்தை முகப்புப்படமாக வைத்துள்ளார் சிவா. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மவுண்ட் சாஸ்தா, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ளது. இது இன்னும் உயிர்ப்புடன் இருக்கும், வெடிக்க வாய்ப்புள்ள ஒரு எரிமலை. இந்தியாவில் இருக்கும் கைலாச மலை, திருவண்ணாமலை போன்று இந்த மலை குறித்தும் பல புதிரான ஆன்மிக கதைகள் இருக்கின்றன. மனிதனுக்கு இருப்பது போலவே பூமிப்பந்திற்கும் சக்கரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சக்கரங்கள் என்றால் ஆற்றல் உருவாகும் மையம். அப்படி சொல்லப்படும் சக்கரங்களில் முதல் சக்கரமாக இருப்பது இந்த மவுண்ட் சாஸ்தா மலைதான். உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலிருந்து மக்கள் அமைதியை நாடி இந்த மலைக்குச் செல்கின்றனர். இந்த மலை மனிதனுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியே கொண்டுவந்து, நேர்மறையான ஆற்றலை மனிதனின் உடம்பிற்குள் செலுத்துவதாக சொல்கின்றனர்.
இந்தியாவின் இமாலய மலையில் இருந்து வரும் கங்கை நதியைப் போல இந்த மலையிலிருந்து வரும் நீரோடைகள் அவ்வளவு தூய்மையானது என்கின்றனர். இந்த இடத்தில் இருக்கும் தூய்மையான காற்று, நீரோடை மற்றும் மலை ஏற்றம் அனைத்தும் ஒரு மனிதனுக்கு தனிமையைக் கொடுத்து தியானநிலைக்கு அழைத்துச்செல்வதாகவும் சொல்கின்றனர். மேலும், லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கும் போது அதில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் இந்த மலையில் வந்துதான் தஞ்சம் புகுந்தார்கள் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பல புதிர்களை கொண்ட மலையின் புகைப்படத்தைதான் நடிகர் சிவா தன் ட்விட்டரில் ப்ரொஃபைல் புகைப்படமாக வைத்திருக்கிறார்.
பொதுவாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளிலும் சரி, பேட்டிகளிலும் சரி, கலகலப்பாக கலாய்ப்பாக மட்டுமே பேசும் சிவா, ஆன்மிக விஷயங்களை அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் ஓரிரு பேட்டிகளில் இதை வெளிப்படுத்தியுள்ளார். "திருவண்ணாமலையில் உள்ள சக்தி இந்த மவுண்ட் ஸாஸ்தா மலையிலும் இருப்பதாக நான் நம்புகிறேன். இவை இரண்டும் இரட்டை மலைகள். என் வாழ்க்கையில் அவ்வப்போது ஆன்மிக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன" என்று கூறினார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சிவா, முதலில் ஒரு பள்ளியில் தன்னார்வலர், அங்கு நாடக நடிகர், பின் ஆர்.ஜே, அதைத் தொடர்ந்து சென்னை-28, இப்பொழுது தமிழ்ப்படம்-2 வரை வந்திருப்பதற்கு தன் முயற்சியோடு சேர்த்து வேறு ஒரு ஆற்றலும் காரணம் என்கிறார்.
ஆன்மிகம், ஆற்றல், சக்தி, சக்கரமெல்லாம் உண்மையோ இல்லையோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வெளியுலகம் பார்க்கும் பக்கத்திற்கு எதிராக இன்னொரு பக்கம் இருப்பது பேருண்மை.