Skip to main content

பா.ரஞ்சித்தின் 'மார்கழியில் மக்களிசை' முன்னெடுப்பு குறித்து செந்தில் - ராஜலட்சுமி கருத்து

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Senthil - Rajalakshmi

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்றிருந்த 'வா சாமி...' பாடல் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்துள்ள நிலையில், தமிழில் அப்பாடலைப் பாடிய நாட்டுப்புற பாடகர் ராஜலட்சுமியையும் அவரது கணவர் செந்திலையும் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம்.  

 

அந்த சந்திப்பில், பா.ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை முன்னெடுப்பு குறித்து பேசிய செந்தில் - ராஜலட்சுமி, "இதற்கு முன்பு அவர்கள் செய்த விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. சூப்பர் சிங்கர் வெற்றிக்குப் பிறகு வேறுவேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தோம். அதனால் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டு அவர்கள் அழைத்துள்ளார்கள். இந்த முறை மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மக்களிசை பாடல்களை பாடுவதற்காக ஆவலுடன் இருக்கிறோம். இசை என்பது பொதுவானது. அதில் இந்த இசைதான் உயர்ந்தது; இந்த இசை தாழ்வானது என்று எதுவும் கிடையாது. இசைய வைக்கும் அனைத்துமே இசைதான். அந்த விஷயத்தைத்தான் ரஞ்சித் சார் முன்னெடுத்து வைக்கிறார். எங்களுக்கும் அதே சிந்தனைதான் உள்ளது. அதனால் அதில் இணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 

 

சுதந்திர போராட்டக் காலங்களில் சபாக்களில் பாடப்பட்ட கிளாசிக் பாடல்கள் பெரும்பாலும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில்தான் அதிகம் இருக்கும். ஒரு போராட்டத்திற்கு பிறகுதான் அதில் தமிழ்ப்பாடல்கள் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு தமிழ் இசையை கொண்டுவர வேண்டும் என்று ரஞ்சித் சார் முன்னெடுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு அனைவருமே ஆதரவு தருகின்றனர். எங்களுக்கு எல்லா மேடையும் ஒன்றுதான். ஒரு முச்சந்தியில் நின்று பாடவேண்டும் என்றாலும் அதே உற்சாகத்தில்தான் பாடுவோம். முக்கியமான ஒரு சபாவில் பாடவேண்டும் என்றாலும் அதே உற்சாகத்தில்தான் பாடுவோம். மக்களிசை கலைஞர்களாக எங்களுடைய வேலையை சரியாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம்" எனக் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அவர்கள் செய்கிற விமர்சனம் கேலி செய்வதுபோல உள்ளது" - பாடகர்கள் செந்தில் - ராஜலட்சுமி வருத்தம் 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Senthil - Rajalakshmi

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்றிருந்த 'வா சாமி...' பாடல் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்துள்ள நிலையில், தமிழில் அப்பாடலைப் பாடிய நாட்டுப்புற பாடகர் ராஜலட்சுமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் தன்னுடைய கணவர் செந்திலுடன் கலந்துகொண்ட அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவை பின்வருமாறு...  

 

"ரெக்கார்டிங்னு எந்த வாய்ப்பு வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று என் கணவர் நினைப்பார். சின்ன இசையமைப்பாளர், பெரிய இசையமைப்பாளர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கமாட்டார். நாம் பாடும் எந்தப் பாடல் வேண்டுமானாலும் நமக்கு பெரிய அடையாளத்தைக் கொடுக்கலாம் என்று கூறுவார். வா சாமி பாடலுக்கு டி.எஸ்.பி. சார் அலுவலகத்தில் இருந்து கால் வந்தது. அப்போது நாங்கள் ஊரில் இருந்தோம். அங்கு எவ்வளவு வேகமாக வேலையை முடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக முடித்துவிட்டு சென்னை வந்து இந்தப் பாடலைப் பாடினேன். நீங்க எப்படி வேண்டுமானாலும் பாடுங்க... எப்ப வேண்டுமானாலும் பாடுங்க... பக்கத்துலதான் வீடு இருக்குனு சொல்றிங்க... போய் தூங்கி எந்திரிச்சு வந்துகூட பாடுங்க என்று டி.எஸ்.பி. சார் சொன்னார். மேடையில் பேசும்போது, ராஜலட்சுமி கலக்கிட்டீங்கமா... ஒரு வார்த்தைல சொல்லனும்னா கலக்கிட்டீங்க என்றார் அல்லு அர்ஜுன் சார். நம்ம பாட்டுலாம் அவர் கேட்டிருப்பாரா, எந்த அளவுக்கு நாம ரீச் ஆகிருப்போம் என்று நினைத்தேன். அவர் பாராட்டுனது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. தெலுங்கில் கொடுத்த ஒரு நேர்காணலிலும் எங்களைப் பற்றி அல்லு அர்ஜுன் சார் பேசியிருப்பதாக பி.ஆர்.ஓ டீம்ல சொன்னாங்க".

 

அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய செந்தில் மற்றும் ராஜலட்சுமியிடம், குழந்தைகளை  மிஸ் செய்வது தொடர்பாக ராஜலட்சுமி பேசியது சமூக வலைதளங்களில் அதிகம் கிண்டலுக்கு உள்ளானது குறித்து கேட்டோம். அந்தக் கேள்விக்கு ராஜலட்சுமி பதிலளிக்கையில், "அந்த உணர்வு ஒவ்வொரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரியும். அவர்கள் குழந்தை இப்படி இருக்கிறது, இவர்கள் குழந்தை எப்படி இருக்கிறது என எந்த ஒன்றுடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது கஷ்டம்தான். அதேபோல இதுவும் கஷ்டம்தான். அதை கேலி செய்கிறார்கள் என்றால் அது சமூகத்தின் குற்றம்தான். நம்முடைய குற்றம் அல்ல" என்றார்.

 

அதே கேள்விக்கு பதிலளித்த செந்தில், "அவர்கள் செய்கிற விமர்சனம் அதை கேலி செய்வதுபோல உள்ளது. அதுதான் வருத்தத்தை தந்தது. அந்த வீட்டு பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு கஷ்டத்தை பார்க்கிறார்கள் என்றால் எங்கள் பிள்ளைகளும் கஷ்டத்தைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெற்றோர் அந்தக் குழந்தைகளுக்காக எப்படி சம்பாதிக்கிறார்களோ அதேபோலத்தான் எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் சம்பாதிக்கிறோம். அவர்களுடைய ஏக்கமும் எங்களுடைய ஏக்கமும் ஒன்றுதான். அதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் என் கருத்து" என்றார்.