தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.
இதனிடையே கடைசியாக தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வராகவ்ன் இயக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அவரே இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார். மெண்டல் மனதில்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கலர்ஃபுல்லாக அமைந்துள்ள இந்த போஸ்டர் தற்போது பலரது கவனம் பெற்று வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
நடிப்பு இசை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. பிரகாஷ், நடிகராக கடைசியாக டியர் படத்தில் நடித்திருந்தார். இப்போது இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.