சினிமாவில் நடக்கும் கதை திருட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள 'படைப்பாளன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி கதை திருட்டு குறித்து பேசியபோது....
காரல் மார்க்ஸ் எழுதிய தாய் காவியம். ரஷ்யாவின் பாவலுடையை தாய் பற்றிய கதை. அந்த தாய் ரஷ்யாவின் ஆன்மாவை வெளிப்டுத்துக்கூடிய ஒரு தாய். இதை என் இளமை காலத்தில் படித்தேன். அப்போது ஏன் என் தாயை பற்றி நாம் கதை எழுதக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழ காரணமாகவும், உந்துசக்தியாகவும் அது இருந்தது. அப்படி உருவானதுதான் 'தென்மேற்கு பருவக்காற்று' படம். ஒரு முறை தேனீ கண்ணன் என்னை தொடர்புகொண்டு என்னிடம் ஒரு கதை இருக்கிறது அதை நீங்கள் படம் எடுக்கறீர்களா என்றார். நான் அவரிடம் இரண்டு விஷயங்கள் செய்துவிட்டு அந்த கதையை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்றேன். ஒன்று, அதை புத்தகமாக வெளியிட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் அல்லது, கதையை பதிவு செய்துவிட்டு வந்து சொல்லுங்கள் என்றேன். ஏனென்றால் ஒரு கதை என்பது மனிதனின் நிலம் அல்லது வீடு அல்லது வசந்தகாலம் அல்லது அறிவு. இவற்றை எல்லாவற்றையும் கொண்டுவந்துத் தரக்கூடிய ஒரு கதை திருட்டு என்பது ஒரு அபகரிப்பு தான்.
அப்போது எப்படி நாம் வீட்டிற்கு ஒரு பூட்டு போடுகிறோமோ, நாய் வளர்கிறோமோ, சிசிடிவி வைக்கிறோமோ அதுபோல் கதைத்திருட்டில் கவனமாக இருப்பது நம் கடமை. ஆக எழுதிவைக்கிற ஒவ்வொரு கதையும் பதிவு செய்வதில் எந்த தவறும் இல்லை. அதனால் இதில் பல சிக்கல்கள் இருந்தாலும் சிரமம் பார்க்காமல் தயவுசெய்து கதையை பதிவு செய்துவிடுங்கள். ஒரு படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளின் உரிமைகள் நல்ல விலைக்கு போவதற்கான காரணம் படத்தின் எழுத்தாளரான கதையாசிரியருக்கு நல்ல தொகை சம்பளமாக தரப்படுகிறது. அதுபோல் இங்கு தரப்படுவதில்லை. ஒரு முன் உதாரணமாக இருக்க என் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 'இடம் பொருள் ஏவல்' என்று ஒரு படமெடுத்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன கதையை வைத்துதான் நான் இப்படத்தை உருவாக்கினேன். இந்த படத்திற்காக நான் எஸ்.ராவை முதன்முதலாக தயாரிப்பாளரிடம் அழைத்து சென்று 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக்கொடுத்தேன். அந்த படத்திலேயே முழு சம்பளம் வாங்கிய ஒரே மனிதர் எஸ்.ராமகிருஷ்ணன் தான். இதுதான் ஒரு எழுத்தாளனுக்கு தரக்கூடிய கௌரவம். இதை இங்கு நாம் பின்பற்றவேண்டும்.