Skip to main content

”நான் என்ன தப்பு பண்ணேன், இது எப்படி நியாயம்?” - வெளிச்சத்திற்கு வந்த இளையராஜா - சீனு ராமசாமி கருத்து வேறுபாடு 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Seenu Ramasamy

 

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதன்முறையாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “மாமனிதன் படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இசையமைக்க இருப்பதாக இருந்தது. அதன் பிறகு, கார்த்திக் ராஜா விலகிவிட்டார். நான் 80ஸ் கிட். இசைஞானி இளையராஜா என்னுடைய கனவுலகத்தின் தூதர். நான் தாலாட்டு கேட்டதே அவரது அன்னக்கிளி பாட்டாகத்தான் இருந்திருக்கும். இந்தப் படத்தை யுவன் தயாரிப்பதால் ஒரு சிறந்த படமாகவும், அவர்கள் நினைவுகூறத்தக்க படமாகவும் இதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, கதைக்களத்தை பண்ணை புரத்திற்கு மாற்றினேன். இளையராஜா சார் வீடு இருக்கும் தெருவில்தான் கேமரா வைத்து முதல் ஷாட்டை எடுத்தேன். 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக்கொடுத்தேன். 

 

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் நான் முன்னரே எடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம், ரீரெக்கார்டிங் இரண்டிலுமே கலந்துகொள்ள நான் அழைக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன்? இது என்ன நியாயம்? எனக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும். கவிஞர் பா.விஜய்க்கு போன் செய்து பாடல் வரிகளை எனக்கு அனுப்புங்கள் என்றால் ஏதோ கள்ளக்காதலியிடம் பேசுவது போல தயங்கித்தயங்கி பேசுகிறார். ஒருநாள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் வந்து சார் நான் உங்க படத்துல பாட்டு எழுதியிருக்கேன் என்றார். எந்தப் படம் என்று கேட்டால் மாமனிதன் என்றார். அவரிடம் பாட்டு வரி அனுப்புங்கள் என்று கேட்டேன். அவர்தான் பாடல் வரிகளை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்தார். 

 

இளையராஜா மீது எவ்வளவு அன்பு இருந்தால் பண்ணைபுரத்தில் சென்று நான் ஷூட்டிங் பண்ணியிருப்பேன். அப்படியிருக்கையில், என்னை ஏன் நீங்கள் நிராகரிக்கணும். அவருடைய இசையை நான் பாராட்டுகிறேன். இந்தப் படத்தின் முதல் மாமனிதனாக அவரை மதிக்கிறேன். காரணமில்லாமல் நிராகரித்தது மிகப்பெரிய வலியையும் தூங்க முடியாத நிலையையும் எனக்கு ஏற்படுத்தியது” எனக் குமுறலாகப் பேசினார்.

 

முன்னதாக, மாமனிதன் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கும் சீனு ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது சீனு ராமசாமியின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்