Skip to main content

”இதை விஜய் சேதுபதி பரிசீலனை பண்ண வேண்டும்” - சீனு ராமசாமி ஆதங்கம்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Seenu Ramasamy

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில், விஜய் சேதுபதியை ஒரு ஹீரோவாக எந்தப் புள்ளியில் நம்பி அறிமுகம் செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த சீனு ராமசாமி, “என்னை இந்த உலகம் நம்பாத காலகட்டத்தில், என்னை நான் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த காலகட்டத்தில் விஜய் சேதுபதியை நான் நம்பினேன். அந்த நம்பிக்கை ஏன் எனக்கு கிடைத்தது என்றால் விஜய் சேதுபதி கண்ணில் ஒரு அன்பு இருந்தது. அந்த முகம் ஒரு தமிழ் முகமாக இருந்தது. சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் திராவிட முகமாக இருந்தது. 

 

அவரை பரிசோதித்து பார்த்தபோது வித்தை தெரிந்த ஆள் என்பது தெரிந்தது. அவருக்கு ஓடுபாதையை உருவாக்க வேண்டியது மட்டும்தான் நம்முடைய வேலை என்பது புரிந்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியிடம்  அச்சம் இருந்தது. அவருடைய தோளில் கைபோட்டு நம்பிக்கை கொடுத்தேன். இரண்டாவது நாள் ஸ்கூல் கேட்டை திறந்து உள்ளே ஓடிவருவது மாதிரியான ஒரு காட்சி எடுத்தேன். அப்போது, ’ஒருத்தன் தமிழ் சினிமா கேட்டை திறக்கிறான்டா, எழுதி வச்சுக்கோங்க’ என்று பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன். மறுநாள் அவர் தோளில் கைபோட்டு கேரவன்ல போய் உட்காரு சேது, நீ இப்ப ஹீரோ ஆகிட்ட என்று சொன்னேன். ஆனால், கேரவேனில் போய் உட்காரமாட்டார், எப்போதுமே கூப்பிடுற தூரத்திலேயே இருப்பார். அவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பார். 

 

வாழ்க்கையில் இருந்து நிறைய பாடங்களைப் படித்திருக்கிறார். அந்தப் பாடங்களை நடிப்பில் கொண்டுவர அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், தொழிலைப் பற்றிய ஞானம் அவருக்கு இல்லை. தொடர்ந்து கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். கதாநாயகனாக நடிப்பது மட்டும்தான் அவருடைய மார்க்கெட்டை தீர்மானிக்கும். அவருக்கென்று முன்னதாக ஒரு மார்க்கெட் இருந்தது. 

 

ஒரு நடிகராக பார்த்தால் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிப்பது சரிதான். ஆனால், சினிமா என்பது இமேஜ் சார்ந்தது. வில்லனாக நடிக்கும்போது குழந்தைகள் மத்தியில் எதிர்மறையான பிம்பம் விழ ஆரம்பிக்கும். மக்கள் செல்வன் என்று அவரை அழைக்கிறோம். மக்களின் பரிபூரண அன்பை அவர் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனவே இந்த மாதிரியான முயற்சிகளை அவர் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்