Skip to main content

"நானே வெற்றிபெற்றதாக பெருமிதம் கொள்கிறேன்" - ‘மாநாடு’ படம் குறித்து சீமான் அறிக்கை

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

seeman talk about maanaadu movie

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘மாநாடு’ படம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு. இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறான பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

 

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொருமுறை முத்திரைப்  பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மனமகிழ்வடைகிறேன்! அன்புச் சகோதரன் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்! தம்பி யுவன் சங்கர் ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல். பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், ஐயா ஒய்.ஜி. மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

 

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன். எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன். நானே வெற்றிபெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

வெளியேறும் டாப் நடிகர் - உள்ளே வரும் சிம்பு; கமல் படத்தில் மாற்றம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
simbu will replace dulquer salman in thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லபபடுகிறது. மெலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவருக்கு பதில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.